பிரேசிலை விட்டு வெளியேற்றப்பட்டாரா ஜெனரல் ஜயசூரிய?

Wednesday September 06, 2017

பிரேசிலில் சிறிலங்கா தூதுவராகப் பணியாற்றிய ஜெனரல் ஜெகத் ஜயசூரிய, போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் அங்கிருந்து கொழும்பு திரும்பிய சூழல் தொடர்பாக எழுந்துள்ள சந்தேகங்களை முன்னிறுத்தி, த ஐலன்ட் நாளிதழில், சிறிலங்காவின் முன்னாள் தூதுவராக பணியாற்றிய பந்து டி சில்வா எழுதியுள்ள குறிப்பு-

‘த ஐலண்ட்’ பத்திரிகையில் 02.09.2017 அன்று வெளியாகிய சிறிலங்கா வெளிநாட்டு அமைச்சால் உண்மையைக் கண்டறிவதற்காக பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்குவதற்காக உத்தியோகப்பற்றற்ற தூதுவர்கள் நியமிக்கப்படுவது தொடர்பாக நான் எனது கருத்தை முன்வைக்க விரும்புகிறேன்.

நான் சிறிலங்காவின் வெளிநாட்டு அமைச்சில் வெளிநாட்டு நிர்வாகத்திற்கான இயக்குனராகவும் முன்னாள் இயக்குனர் நாயகமாகவும் தூதுவராகவும் பணியாற்றியவன் என்ற வகையிலும் உத்தியோகப்பற்றற்ற தூதுவர்களால் கையொப்பம் இடப்படும் ஒப்பந்தங்களைத் தயார்ப்படுத்துதல் உட்பட பல்வேறு கடமைகளைச் செய்தவன் என்ற வகையிலும் இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட 12 தூதுவர்களுடன் பணியாற்றியவன் என்ற வகையிலும் நான் இங்கு எனது கருத்தைப் பதிவு செய்கிறேன்.

உள்ளுர் ஊடக அறிக்கைகள் தொடர்பாக தெளிவின்மை காணப்படுகிறது. அதாவது இந்த ஊடக அறிக்கைகளில் ஜெனரல் ஜயசூரிய ஆகஸ்ட் 2015ல் இரண்டு ஆண்டு ஒப்பந்தத்தில் தூதுவர் பதவியைப் பொறுப்பேற்றமை தொடர்பாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இவ்வாண்டு ஜூன் மாதம் ஜயசூரிய வெளிநாட்டு அமைச்சிற்கு எழுதிய கடிதத்தில் தனது பதவிக் காலம் முடிவடைந்துள்ளதாகவும் தான் மீண்டும் தூதுவராக நியமிக்கப்பவாரானால் தன்னை ஆசிய நாடொன்றிற்கு நியமிக்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தார்.

ஜயசூரியவின் தூதுவர் பதவியானது உத்தியோகப்பற்றற்றதாகும். ஆகவே இவர் தூதுவராகப் பதவி வகிப்பதற்கு முன்னர் வெளிநாட்டு அமைச்சுடன் இவர் ஒப்பந்தம் ஒன்றைக் கைச்சாத்திட்டிருக்க வேண்டும். வழமையாக இத்தூதுவர் ஒப்பந்தமானது மூன்று ஆண்டுகளுக்குச் செல்லுபடியானதாக இருந்தது. பின்னர் இது நான்கு ஆண்டுகளாக நீடிக்கப்பட்டு தற்போது இதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த அடிப்படையில் ஒப்பந்த அடிப்படையில் இதுவரை தூதுவர்களாகப் பணியாற்றியவர்களில் ஒருவர் தவிர வேறெவரும் தமது ஒப்பந்த காலம் முடிவடைவதற்கு முன்னர் பதவியிலிருந்து விலகவில்லை. சீனாவிற்கான முதலாவது தூதுவராக நியமிக்கப்பட்ட வில்மற் பெரேரா தனது ஒப்பந்தத்தை இரத்துச் செய்யுமாறு ஆறுமாதத்தின் பின்னர் கேட்டுக்கொண்டார்.

ஒப்பந்தம் காலாவதி ஆவதற்கு முன்னர் ஒப்பந்தத்தின் மூலம் பதவியில் நியமிக்கப்பட்டவர் அதிலிருந்து விலக விரும்புவாரானால் அதற்கான இழப்பீட்டைச் செலுத்த வேண்டும். ஆனால் அரசாங்கமானது அரசியற் காரணங்களுக்காக குறித்த ஒப்பந்தத்தை இரத்துச் செய்வதற்கான அனுமதியைக் கொண்டுள்ளது.

அவுஸ்திரேலியாவிற்கான உயர் ஆணையாளராக நியமிக்கப்பட்ட நெவிலே ஜான்ஸ் மற்றும் மலேசியாவிற்கான உயர் ஆணையாளராக நியமிக்கப்பட்ட முன்னாள் காவற்துறை மா அதிபர் ஏர்னஸ்ற் பெரேரா ஆகியோர் அரசியற் காரணங்களுக்காக அவர்களது தூதுவர் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் திருப்பியழைக்கப்பட்டனர். பிற பதவிகளில் நியமிக்கப்படுவதற்காக வேறு சில தூதுவர்கள் நாட்டிற்குத் திருப்பியழைக்கப்பட்ட சம்பவங்களும் உள்ளன.

இதுவே தூதுவர் நியமனத்தில் பின்பற்றப்படும் பொதுவான கோட்பாடாகவும் முறைமையாகவும் காணப்படுகிறது. இந்நிலையில் இந்த முறைமையானது ஜெனரல் ஜயசூரியாவின் நியமனத்தில் மாற்றமுற்றமைக்கான எவ்வித சாட்சியங்களும் இல்லை.

ஜயசூரியா தனது தூதுவர் பதவிக்கான ஒப்பந்தத்தை இரத்துச் செய்துள்ளதாக வெளிநாட்டு அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஆகவே இத்தகவல் தொடர்பில் ஏதாவது மறைக்கப்பட்டுள்ளதா? வெளிநாட்டு அமைச்சும் ஓய்வுபெற்ற ஜெனரலின் கருத்தை உறுதிப்படுத்த முனைகிறதா?

தனது ஒப்பந்த காலமானது இரண்டு ஆண்டுகள் முடிவடைவதற்கு முன்னர் நீட்டிக்கப்படும்   அல்லது தான் ஆசிய நாடொன்றுக்குத் தூதுவராக நியமிக்கப்படுவேன் என்கின்ற ஜயசூரியாவின் எதிர்பார்ப்பை வெளிவிவகார அமைச்சின் அறிக்கை உறுதிப்படுத்துகிறது. ஏன் ஆசிய நாடொன்றை ஜயசூரியா விரும்புகிறார்?

தனக்கு எதிராக வலுவடைந்து வரும் குற்றச்சாட்டுக்களிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கு ஆசிய நாடு உகந்ததாக இருக்கும் என இவர் கருதுகிறாரா?

இதன் மூலம் கொங்கொங்கிலுள்ள தனது மகன் மற்றும் அவுஸ்ரேலியாவிலுள்ள தனது மகள் ஆகியோரைச் சென்று பார்வையிட முடியும் என ஜயசூரியா கருதுகிறாரா?

இவருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் ஜயசூரியாவால் இலகுவாக அவுஸ்திரேலியாவிற்குச் செல்ல முடியும் எனக் கருதுகிறாரா?

தனது பதவிக்காலம் முடிவடைவதற்கான அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் ஆகஸ்ட் 31 இற்கு முன்னர் நாட்டிற்குத் திரும்புமாறு பணிக்கப்பட்டதாகவும் ஜூலை 10 அன்று ஜயசூரியவுக்கு  அறிவிக்கப்பட்டிருந்தது. ஜயசூரியாவின் பதவிக்காலமானது இரண்டு ஆண்டுகள் எனில் இவரது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் இவருக்கு எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது?

அத்துடன் ‘ஒப்பந்தத்தின் பிரகாரம் பதவிக்காலம் முடிவடைந்து விட்டது’ என்கின்ற வார்த்தைகள் சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது. ஒப்பந்தம் முடிவடைந்து விட்டால் இதற்கு ஏன் அனுமதி பெறப்பட வேண்டும்? வெளிநாட்டு அமைச்சால் ‘பதவிக்கால நிறைவு’ ஏற்றுக்கொள்ளப்பட்டிந்தால் ஒப்பந்தம் காலாவதியாவதற்கு முன்னர் இந்த ஒப்பந்தம் இரத்துச் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

பிரேசிலுள்ள சட்டவாளர் ஒருவர் தனக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தமை தனக்குத் தெரியாது என்பதை தூதுவர் உறுதிப்படுத்துவதற்கான காரணத்தைத் தேடியுள்ளார்.

ஜயசூரியாவிற்கு எதிராக போர்க் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாலும் சிறிலங்கா அரசாங்கமானது போர்க் குற்ற விசாரணைகளுக்கு ஒத்துழைப்பை வழங்க மறுப்பதாலும் ஜயசூரியாவிற்கு வழங்கப்பட்டுள்ள இராஜதந்திரப் பாதுகாப்பை விலக்குமாறும் இவரை ஒரு ‘விரும்பாத நபர்’ எனப் பிரகடனம் செய்யுமாறும் இவருக்கு எதிராக சமஷ்டி காவற்துறையினர் விசாரணை செய்யவேண்டும் எனவும் கோரி  சட்டவாளர் ஒருவரால் ஜயசூரியாவிற்கு எதிராக பிரேசிலில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

தூதுவராகப் பணியாற்றிக் கொண்டிருந்த போது பிரேசிலில் முன்வைக்கப்பட்ட இந்தக் குற்றச்சாட்டானது தனக்குத் தெரியாது என ஜயசூரியா கூறுவதும் இவரது ஒப்பந்தக்காலம் இரத்துச் செய்யப்பட்ட நிலையிலேயே இவர் நாடு திரும்பினார் என வெளிவிவகார அமைச்சுக் கூறுவதும் சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது.

போர்க் குற்ற விசாரணை ஒன்றிற்குள் அகப்படுவதைத் தவிர்ப்பதற்காகவே ஜயசூரியா திட்டமிட்ட வகையில் தனது நாட்டிற்குத் திரும்பியதாக அனைத்துலக உண்மை மற்றும் நீதித்திட்டத்தின் நிறைவேற்று இயக்குனரும் தருஸ்மன் விசாரணைக் குழுவின் முன்னாள் உறுப்பினருமான ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

ஜயசூரியா பிரேசிலிலிருந்து டுபாய் வரையான நேரடி விமான சேவையின் ஊடாக இரவு 10:00 மணிக்குப் புறப்பட்டதாகவும் இவர் அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகளில் தங்கிச் செல்லாத வகையில் மிகவும் திட்டமிட்ட வகையில் தனது விமானப் போக்குவரத்தை மேற்கொண்டதாகவும் இந்த நாடுகளில் தான் கைதுசெய்யப்பட்டு விடுவோம் என்கின்ற அச்சத்தின் காரணமாகவே இதனைத் தவிர்த்துக் கொண்டதாகவும் சூக்கா தெரிவித்தார்.

தனது நாட்டில் ஜயசூரியாவிற்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்பதை அறிந்து கொண்டு  விரும்பத்தகாத இராஜதந்திரச் சூழலைத் தவிர்ப்பதற்காகவே உடனடியாக ஜயசூரியாவை தனது நாட்டை விட்டு வெளியேறுமாறு பிரேசில் அரசாங்கம் ஆலோசனை வழங்கியதா என்கின்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

பிரேசில் தவிர ஜயசூரியா தூதுவராகப் பணியாற்றிய ஏனைய நாடுகளில் இராணுவ அதிகாரத்துவ ஆட்சி, சித்திரவதைகள், கொலைகள் மற்றும் காணாமற் போதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் பிரேசிலை விட்டு ஜயசூரியா வெளியேறுவதில் பிரேசில் அரசாங்கமும் கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சும் ஈடுபட்டுள்ளன என்பதற்கான ஆதாரங்கள் இங்கு நிரூபணமாகின்றன.

வழிமூலம்      – The island
ஆங்கிலத்தில் – Bandu de Silva
மொழியாக்கம் – நித்தியபாரதி