பீரிஸ்சை பலிக்கடாவாக்கிய மஹிந்த!

திங்கள் நவம்பர் 14, 2016

மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணி, ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி என்ற போர்வையில் தீவிர அரசியலில் இறங்குவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

மஹிந்த ராஜபக்ச ஆட்சி அதிகாரத்தை இழந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகப்போகின்ற நிலையிலேயே, புதிய கட்சி ஒன்றின் ஊடாக ஆட்சியைப் பிடிப்பதற்கான முயற்சிகளில் அவர் இறங்கவுள்ளதாகத் தெரிகிறது.

அதற்கான முதல் ஏற்பாடாகவே, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியாகும்.

இது ஒன்றும் புதிய கட்சி அல்ல. ஏற்கனவே, விமல் கீனககே தலைமையில் உருவாக்கப்பட்டு, தேர்தலிலும் போட்டியிட்ட எமது ஸ்ரீலங்கா சுதந்திர முன்னணி (அபே ஸ்ரீலங்கா நிதஸ் பெரமுன) என்ற கட்சிக்குத் தான் புதிய சின்னம், பெயர் சூட்டி மறுவடிவம் கொடுத்திருக்கிறது கூட்டு எதிரணி.

இந்தக் கட்சியின் தலைவராக யாரும் எதிர்பாராத வகையில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்தக் கட்சியின் சின்னமாக, மலர் மொட்டு, தேர்தல் ஆணையத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

புதிய கட்சி மஹிந்த ராஜபக்ச தலைமையில் ஆரம்பிக்கப்படப் போவதாக கூறிக் கொண்டிருந்த கூட்டு எதிரணியினர், இப்போது பேராசிரியர் ஜி.எல்.பீரிஸை முன்னிலைப்படுத்தி புதிய கட்சியை ஆரம்பித்திருக்கின்றனர்.

பஷில் ராஜபக்ச தலைமையில் புதிய கட்சியை ஆரம்பிக்கப் போவதாகவும் கூறப்பட்டு வந்தது. ஆனால், இவர்கள் இருவரும் ஒதுங்கி நின்று கொண்டு ஜி.எல்.பீரிஸை பலிக்கடாவாக முன்னே அனுப்பியிருக்கின்றனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி என்ற இந்தப் புதிய கட்சிக்கு உறுப்பினர்களை சேர்க்கும் நடவடிக்கை, மஹிந்த ராஜபக்சவின் பிறந்த நாளான வரும் 18ம் திகதி அனுராதபுரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கட்சி உறுப்பினர் ஆட்சேர்ப்பு ஆரம்பிக்கப்பட்டால், அது புதிய கட்சியை தொடங்கும் நடவடிக்கையாகவே இருக்கும். அத்தகையதொரு கட்டத்தை நோக்கியே மஹிந்த ராஜபக்ச தரப்பு நகரத் தொடங்கியிருக்கிறது.

நீண்டகாலமாக இழுபறிக்குள்ளாகி வந்த புதிய கட்சி பற்றிய அறிவிப்பு, ஆரம்பம் என்பன, இப்போது நெருங்கி வந்து விட்டதாகவே தோன்றுகிறது. ஆனாலும், மஹிந்த ராஜபக்சவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும், புதிய கட்சியை ஆரம்பிப்பதில் இன்னமும் தயக்கமும், அச்சமும் இருப்பதாகவே தெரிகிறது.

முன்னாள் வெளிவிவகார அமைச்சரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸை முன்னிலைப்படுத்தி ஒரு கட்சியை ஆரம்பித்துள்ளதில் இருந்தே, இந்த விடயத்தில் அவரும், அவரது அணியினரும் இரண்டுபட்ட மனோநிலையில் இருந்து விடுபடவில்லை என்பதை உணர முடிகிறது.

ஜி.எல்.பீரிஸ் புதிய கட்சியின் தலைவராக்கப்பட்டமை, மஹிந்த ராஜபக்சவின் முன்னெச்சரிக்கை உணர்வை வெளிப்படுத்தவில்லை. பீரிஸுக்குப் பின்னால் மறைந்திருந்து அரசியல் செய்யும் அளவுக்கு பலவீனமான ஒரு நிலையைத் தான் வெளிப்படுத்தியிருக்கிறது.

மஹிந்த ராஜபக்ச தலைமையில் புதிய கட்சி ஆரம்பிக்கப்படவுள்ளதாக, அவரது அணியினர் நீண்டகாலமாகவே கூறி வந்திருக்கின்றனர். இதனை மஹிந்த ராஜபக்ச அவ்வப்போது சூசகமான முறையில் உறுதிப்படுத்தியும் வந்திருக்கிறார்.

அதேவேளை, தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உடைத்துக் கொண்டு வெளியே போகமாட்டேன் என்று பகிரங்கமாக வாக்குறுதியையும் அவர் கொடுத்திருக்கிறார். மஹிந்த ராஜபக்ச கொடுத்த இந்த வாக்குறுதி, அவரை தெளிவான ஒரு முடிவை எடுக்க முடியாத சிக்கலுக்குள்ளேயும் மாட்டி விட்டிருக்கிறது.

சுதந்திரக் கட்சியாக அவரது கழுத்தைப் பிடித்து வெளியே அனுப்பாத வரையில், அவரால், புதிய கட்சி ஒன்றுக்குத் தலைமை தாங்க முடியாது.அதற்கு மாறாக, சுதந்திரக் கட்சியின் போசகராக இருந்து கொண்டே, புதிய கட்சிக்குத் தலைமை தாங்க முயன்றால், அவர் பகிரங்கமாக கொடுத்த வாக்குறுதியை மீறியவர் ஆகிவிடுவார்.
சுதந்திரக் கட்சியை உடைத்துக் கொண்டு வெளியே போகமாட்டேன் என்ற அவரது வாக்குறுதி பொது அரங்கில் பொய்யாகிவிடும். மஹிந்த ராஜபக்ச வாக்குறுதிகளை மீறுவதில் வல்லவர்.

சர்வதேச சமூகத்துக்கு கொடுத்த வாக்குறுதிகளை அப்பட்டமாக மீறியிருக்கிறார். இந்தியாவுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மீறியிருக்கிறார். தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளையும் மீறி செயற்பட்டிருக்கிறார்.ஆனால், அவற்றைப் போலவே, இந்த வாக்குறுதியையும் அவரால் அவ்வளவு சுலபமாக மீற முடியாது.

முன்னர் கொடுத்த வாக்குறுதிகள் எல்லாமே, அவரது அரசியல் தலைவிதியை நேரடியாகத் தீர்மானிப்பவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அல்ல.அதாவது சிங்கள மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் அல்ல.

ஆனால், சுதந்திரக் கட்சியை உடைத்துக் கொண்டு வெளியேறமாட்டேன் என்ற வாக்குறுதி அவர் தனது கட்சியினருக்கும், சிங்கள மக்களுக்கும் கொடுத்திருக்கின்ற வாக்குறுதி.

அவர்கள் தான் மஹிந்த ராஜபக்சவை இதுவரையில் காப்பாற்றி வந்திருப்பவர்கள்.அவர்கள் முன்னிலையில் மஹிந்த ராஜபக்ச தனது வாக்குறுதியைக் காப்பாற்ற முடியாதவர் என்று பெயரை எடுத்துக் கொண்டால் அது அவரது அரசியல் வாழ்வுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

அதற்காக, அவர் புதிய அரசியல் கட்சியை ஆரம்பிக்கமாட்டார், புதிய கட்சிக்குத் தலைமையேற்க மாட்டார் என்று ஆரூடம் கூற முடியாது.மஹிந்த ராஜபக்சவைப் பொறுத்த வரையில் சுதந்திரக் கட்சியை விட்டு வெளியேறி புதிய கட்சியை ஆரம்பிப்பதை தனது இரண்டாவது தெரிவாகவே இன்னமும் வைத்திருக்கிறார்.

அதனால் தான், அவர் இப்போதும் கூட ஜி.எல்.பீரிஸை முன்னே அனுப்பி விட்டு பின்னால் இருந்து இயக்கிக் கொண்டிருக்கிறார்.பஷில் ராஜபக்சவைக் கூட அவர் இந்த விடயத்தில் பலிக்கடா ஆக்கவில்லை என்பது கவனிக்க வேண்டிய விடயம்.

பசில் ராஜபக்சவே புதிய கட்சிக்குத் தலைவராக நியமிக்கப்படவுள்ளதாக முன்னர் செய்திகள் வெளியாகின. அவர் பல்வேறு வழக்குகள் விவகாரங்களில் சிக்கியிருப்பவர் என்பதால் மாத்திரம், தலைவராக நியமிக்கப்படுவதில் இருந்து ஓரம் கட்டப்படவில்லை.

அவரை தலைவர் பதவியில் நியமித்தால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து வெளியேற்றப்படுவார் என்பதைக் கருத்தில் கொண்டும் தான் பீரிஸ் பலிக்கடா ஆக்கப்பட்டிருக்கிறார்.

புதிய கட்சிக்கு பீரிசை அவர் தலைவராக்கியுள்ளதன் மூலம், சுதந்திரக் கட்சியின் அடுத்த நகர்வு என்ன என்று நாடி பிடித்துப் பார்க்க முனைந்திருக்கிறார் மஹிந்த ராஜபக்ச.

பீரிஸ் மீது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்று கவனிப்பதே இந்த திட்டத்தின் முதல் நோக்கம்.அதைவிட பீரிஸ் கவர்ச்சிமிக்க ஒரு அரசியல் தலைவராக இல்லை என்பதால், தமது தலைமைத்துவத்துவத்துக்கு அவரால் ஆபத்து ஏற்படாது என்றும் ராஜபக்ச குடும்பத்தினர் நினைத்திருக்கலாம்.

புதிய கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டதுமே, பீரிசை கட்சியில் இருந்து நீக்கி விட்டதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் துமிந்த திசநாயக்க அறிவித்திருக்கிறார்.

மஹிந்த ராஜபக்ச அணியினர் அரசாங்கத்துக்கு எதிராக பல எதிர்ப்புப் பேரணிகள் கூட்டங்களை நடத்திய போது, அதில் பங்கேற்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும், கட்சியை விட்டு வெளியேற்றப்படுவார்கள், பதவிகளை இழக்க நேரிடும் என்றெல்லாம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எச்சரித்துப் பார்த்தது.

ஆனாலும், மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட அவரது அணியிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த பேரணிகள், கூட்டங்களில் பங்கேற்ற போது, சுதந்திரக் கட்சி எந்த ஒழுக்காற்று நடவடிக்கையையும் எடுக்கவில்லை.மஹிந்த ஆதரவாளர்களான சில தொகுதிகளின் அமைப்பாளர்கள் மாத்திரம் நீக்கப்பட்டனர்.

எனினும், புதிய கட்சி ஒன்றின் தலைவராக நியமிக்கப்பட்ட பின்னர், ஜி.எல்.பீரிசின் உறுப்புரிமையை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பறித்திருக்கிறது.இதன் மூலம் புதிய கட்சியை ஆரம்பித்தால்- அதில் இடம்பெற்றால், பதவிகள் பறிக்கப்படும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

இந்தநிலையில், தனது உறுப்புரிமை பறிக்கப்பட்டதை சுதந்திரக் கட்சி மீளாய்வு செய்யும் என்று பீரிஸ் வெளியிட்டிருக்கும் கருத்து மிகப்பெரிய நகைச்சுவையாக இருக்கிறது.

ஒரு புதிய கட்சிக்குத் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பவர் எதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையை எதிர்பார்க்கிறார் என்று தெரியவில்லை.தனக்கு ஒரு நியாயம், மைத்திரிபால சிறிசேனவுக்கு ஒரு நியாயமா என்று அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

மைத்திரிபால சிறிசேன பொதுவேட்பாளராக வேறொரு கட்சியில் போட்டியிட்டதையே அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.ஆனாலும் மைத்திரிபால சிறிசேன சுதந்திரக் கட்சியை விட்டு வெளியேறவுமில்லை,

புதிய கட்சியை ஆரம்பிக்கவோ அல்லது வேறு கட்சியில் இணையவோ இல்லை என்பதை பீரிஸ் மறந்து விட்டார்.மஹிந்த ராஜபக்ச தனது அரசியல் எதிர்காலம் குறித்து தெளிவான முடிவை எடுப்பதற்கு இன்னமும் தயங்குகிறார் என்பதைத் தான், பீரிஸை அவர் முன்னிலைப்படுத்தியிருப்பதில் இருந்து உணர முடிகிறது.

மஹிந்தவின் அரசியல் சூதாட்டத்துக்கு பீரிஸ் தான் முதல் காயாக அகப்பட்டிருக்கிறார். மஹிந்த புதிய கட்சியின் ஊடாகவோ அல்லது சுதந்திரக் கட்சியின் ஊடாகவே தன்னை நிலைப்படுத்திக் கொள்ளக் கூடும். அதாவது அவருக்கு இன்னமும் இரண்டு தெரிவுகள் உள்ளன.

ஆனால், பீரிஸைப் பொறுத்தவரையில், புதிய கட்சி பிரகாசிக்காமல் போகுமேயானால், அவரும் பொசுங்கிப் போக வேண்டியது தான். அதாவது பீரிசுக்கு இருப்பது ஒரே ஒரு தெரிவு தான்.