புகையிரத வேலை நிறுத்தத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க திட்டம்

ஒக்டோபர் 12, 2017

நள்ளிரவு 12 மணிக்கு ஆரம்பிப்பதாக கூறப்பட்ட புகையிரத வேலை நிறுத்தம் மாலை 05 மணிக்கே ஆரம்பிக்கப்பட்டமை சட்டவிரோதமாகது என்பதால் அது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்று குறித்த தொழிற்சங்கங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு புகையிரத பொது முகாமையாளருக்கு ஆலோசனை வழங்கியதாக போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறியுள்ளார். 

லோகோமோடிவ் பொறியியலாளர் தொழிற்சங்கம் மற்றும் புகையிரத காப்பாளர்கள் தொழிற்சங்கத்தினால் நேற்று ஆரம்பிக்கப்பட்ட வேலை நிறுத்தம் காரணமாக பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களை மட்டுப்படுத்துவதற்கான விஷேட வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் நோக்கில் இன்று காலை அந்த அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். 

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடும் உரிமையை ஏற்றுக் கொள்ளும் அதேவேளை டிக்கட்டுக்கள் வழங்கப்பட்ட பயணிகளுக்கு கூட சேவையை வழங்காது திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டமை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறிய அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, பொது மக்களுக்கு பாரிய பாதிப்பை எற்படுத்திய இந்த வேலை நிறுத்தம் குறித்து காவல் துறை ஊடாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறும் புகையிரத பொது முகாமையாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

செய்திகள்