புதிய வழியில் நகரும் தமிழர் தாயகம் - கூட்டமைப்பிற்கு விழுந்த சாட்டையடி! - ‘தாயகத்தில் இருந்து’ செல்வச்சந்திரன்

February 24, 2018

தமிழர் தாயகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆட்சி மெளனித்த பின்னர் மீண்டும் ஒரு தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கின்றது. இலங்கைத் தீவில் இரு தேசங்கள் இருக்கின்றன என்ற தெளிவான செய்தியை இந்தத் தேர்தல் சர்வதேசத்திற்கு உணர்த்தியிருக்கின்றது.

இந்தத் தேர்தலையும் அதனோடு ஒட்டிய விடயங்களையும் தாயகத்திலும் புலம்பெயர் தேசத்திலும் உள்ள தமிழ் மக்கள் தெளிவாகப் புரிந்துகொள்வது அவசியம். இதில் தமிழர் தேசம் தமது இறைமையைப் பாதுகாத்திருக்கின்ற அதே நேரம் சிங்கள தேசமும் தமது இறைமையை நிலைநாட்டியிருக்கின்றது.

சிறிலங்காத் தீவில் உள்ள தமிழர், சிங்களவர் என்ற இரு இனங்களும் தத்தமது தேசத்தின் இறையாண்மையை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை என்ற உண்மை இந்தத் தேர்தலில் வெளிப்பட்டிருக்கின்றது. இதுவரை நடைபெற்ற தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் தற்போது நடைபெற்று முடிந்த தேர்தல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குப் பின்னர் தமிழ் மக்களின் உள்ளக் கிடக்கையைத் தெளிவாக உணர்த்தியிருக்கின்றது. எந்தவொரு நபருக்காகவும் தமிழ்த் தேசியத்தை தாம் விட்டுக்கொடுக்க மாட்டார்கள் என்பதைத் தமிழ் மக்கள் இடித்துரைத்துள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் தமிழ்த் தேசியப் பேரவைக்கும் இடையிலான கொள்கை ரீதியான போட்டியாக இத்தேர்தல் அமைந்திருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழர் விரோத செயற்பாடுகளுக்கு தமிழ் மக்கள் இந்தத் தேர்தலில் பாடம் புகட்டியிருக்கின்றனர். தமிழீழ தேசியத் தலைவரினதும் விடுதலைப் புலிகளினதும் பெயரைப் பயன்படுத்தி தமிழ் மக்களை அடிமைப்படுத்த முனைந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் போலி அரசியல் முகத்தை தமிழ் மக்கள் அம்பலப்படுத்தியிருக்கின்றனர்.

தமிழீழ தேசியத் தலைவரின் அனுசரணையுடன் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலிகளின் வீழ்ச்சிக்கு பின்னர் தான்தோன்றித்தனமாகச் செயற்படத் தொடங்கியமையால் அக்கூட்டமைப்பின் மேல் மக்களுக்கு இருந்த ஆத்திரம், கோபம் என்பவற்றை அவர்கள் எதிர்ப் புள்ளடிகளாக மாற்றியிருக்கின்றனர்.

புலிகளுக்கு பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் விடுதலை வேட்கையைத் தாங்கிப் பிடித்துப் பயணித்தது என்பதை எவரும் மறுக்க முடியாது. குறிப்பிட்ட காலம் வரை தமிழ் மக்களின் ஏக அரசியல் பிரதிநிதிகளாக வலம்வந்த கூட்டமைப்பினர் பின்னர் சுமந்திரன் என்ற சிங்கள அடிவருடியின் வருகையுடன் தடம் மாறத் தொடங்கினர். தமிழர்களின் தனித் தமிழ்த் தேசியக் கொள்கையை, அவர்களின் விடுதலை நோக்கிய அரசியல் பயணத்தை விரும்பாத சிங்களச் சக்திகளும் மேற்குலகின் தமிழர் விரோத சக்திகளும் இணைந்து சுமந்திரன் என்ற தனி நபரை கூட்டமைப்புக்குள் நுழைத்து தமிழ்த் தேசியத்தை அழிக்கும் முயற்சியை ஆரம்பித்தனர். அதில் அவர்கள் வெற்றியும் கண்டனர். கூட்டமைப்புக்குள் சுமந்திரனின் ஆதிக்கம் தலைதூக்கியது. தனியயாரு சுமந்திரன் கூட்டமைப்பின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து அவர்கள் அனைவரையும் தமிழ்த் தேசியத்திற்கும் தமிழ் மக்களின் விடுதலைக்கும் எதிரானவர்களாக மாற்றினார்.

தமிழ் மக்களின் சுதந்திர உணர்வை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணித்தது. கூட்டமைப்பில் உள்ள அத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்களும் சுமந்திரன் என்ற மாயமானுக்குள் அகப்பட்டு கோடிகளுக்கு விலைபோயினர். தமிழ்த் தேசியம் சலுகைகளுக்குள் மறைக்கப்பட்டது. 30 வருட கால ஜனநாயகப் போர், 30 வருட கால ஆயுதப் போர் என்பவற்றால் புடம்போடப்பட்டு உயிர்பெற்றிருந்த தமிழ் மக்களின் சுதந்திரக் கோரிக்கையை நீர்த்துப்போகச் செய்ய சிங்களத் தரப்பினரால் எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்களும் துணைபோயினர். தனிநாடு கேட்டுப் போராடிய தமிழ்த் தேசிய இனத்தை மீண்டும் ஒற்றையாட்சி மூலம் ஒடுக்குவதற்கு சிங்கள தேசம் முற்பட்டது.

முப்பது வருடப் போராட்டத்தை கோரமான முறையில் முடிவுக்குக் கொண்டுவந்த பின்னர் தமிழினத்தை அடிமைப்படுத்த முற்பட்டது சிங்கள தேசம். போரில் விடுதலைப் புலிகளை வெற்றிகொள்ள முடியாமல் இரசாயனக் குண்டுகளால் தமிழர் தேசத்தை துவம்சம் செய்து, விடுதலைத் தீரத்தை கோரத்தால் அடக்கிய சிங்கள தேசத்தின் கபடத்தனமான ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கு கூட்டமைப்பு ஆதரவளித்தது. ஒற்றையாட்சி அரசியலமைப்பு நிறைவேற்றப்படுமாயின் அதுவே தமிழ் மக்ளின் இனப்பிரச்சினைக்கான தீர்வாக உலகுக்குக் காட்டப்படும். அதன் பின்னர் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டதாக சிங்கள தேசம் அறிவிக்கும். அதன் பின்னர் தமிழ் மக்கள் தமது உரிமைகள் தொடர்பாக எந்தப் பேச்சும் பேச முடியாமல் போகும். பேசினால் கூட சர்வதேசம் அதை ஏற்றுக்கொள்ளாது. இந்த உண்மையை தமிழ்த் தேசியப் பேரவை தமிழ் மக்களுக்கு தெளிவாக எடுத்துக் கூறியது. இதனால் தமிழ் மக்கள் அப்பேரவைக்கு வாக்குகளை அள்ளி வழங்கினர். தமிழ்த் தேசியத்தின்பால் அவர்கள் தமது நம்பிக்கையை வெளிப்படுத்தினர். தாங்கள் இலங்கைத் தீவில் அடிமைகளாக வாழ விரும்பவில்லை என்பதை தமிழ் மக்கள் உலகுக்கு அறிவித்தனர்.

நடைபெற்று முடிந்த தேர்தலில் தமிழ்த் தேசியப் பேரவை என்ற புதிய முகம் மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த முகம் ஏன் உருவானது? எப்படி உருவாக்கப்பட்டது என்பது தொடர்பாக புலம்பெயர் தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல கட்சிகளின் கூட்டாக உருவானது. அதில் உள்ள ஒவ்வொரு கட்சிகளும் தனிப்பட்ட கோட்பாடுகளைக் கொண்டிருக்கின்ற போதிலும் கூட்டமைப்பு என்ற ஒரு குடைக்குள் இணைந்து பணியாற்றுகின்றனர். பல கட்சிகளின் கூட்டு என்பதாலேயே அவர்களால் வெற்றிபெற முடிகின்றது. தனியே அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியோ தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோ கூட்டமைப்புக்கு நிகராகச் செயற்பட முடியவில்லை. கடந்த தடவைகள் நடைபெற்ற இரு தேர்தல்களில் இவ்வாறு தனி அரசியல் கட்சியாக அவர்கள் பயணித்திருந்த போதிலும் உரிய வெற்றிவாய்ப்புக் கிடைக்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நிகரான மாற்றுத் தலைமையாக மக்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை மட்டும் கருதியிருக்கவில்லை என்ற உண்மை இதனால் வெளிப்பட்டது. இந்த நிலையிலேயே, இம்முறை தேர்தலில் வியூகம் மாற்றப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நிகராக தமிழ்த் தேசியப் பேரவை உருவாக்கப்பட்டது.

தமிழ் மக்களின் பழைமைக் கட்சியான அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் என்ற பதிவுசெய்யப்பட்ட கட்சியுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழர் சம உரிமை இயக்கம், நம்பிகள் நல்வாழ்வுக் கழகம் மற்றும் பல பொது அமைப்புக்களும் இணைந்து தமிழ்த் தேசியப் பேரவையாகப் பரிணமித்தன. இது, தமிழ் மக்கள் பேரவையின் கொள்கைகளை அடியயாற்றி, தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு பேரவையால் முன்மொழியப்பட்ட சமஷ்டித் தீர்வுத் திட்டத்தை ஏற்றுக்கொண்டு, அதையே மக்கள் முன் கொண்டுசென்றது. தமிழ்த் தேசியப் பேரவை என்ற புதிய வரவு தமிழ் மக்களுக்கு புது உற்சாகத்தை ஏற்படுத்தியது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான மாற்றுத் தலைமை இல்லையே என ஏங்கிய மக்களுக்கு அது நம்பிக்கையைக் கொடுத்தது. இதனால் பேரவையை அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் போலி முகத்திரையை தமிழ்த் தேசியப் பேரவையினர் மக்களுக்கு தெளிவாக எடுத்துரைத்தனர். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அரசியல் ஆளுமை இத்தேர்தலில் வெளிப்படுத்தப்பட்டது. அவரது தலைமைத்துவத்தை மக்கள் ஏற்றுக்கொண்டனர். அவரது நேர்மையான, தெளிவான அரசியல் கருத்துக்கள் தமிழ் மக்களைக் கவர்ந்தன.

உள்ளகத்தில் மட்டுமன்றி சர்வதேச ரீதியாகவும் தமிழ் மக்களுக்காகக் குரல்கொடுக்கக்கூடிய வல்லமை கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் இருக்கின்றமையை இனம்கண்ட மக்கள் அவரது தலைமையில் உருவான தமிழ்த் தேசியப் பேரவைக்கு பூரண ஆதரவை வழங்கினர். தமிழ்த் தேசியப் பேரவையில் கஜேந்திரகுமாருடன் ஆளுமையும் தமிழ்த் தேசிய உணர்வும் மிக்க சட்டத்தரணிகள், வைத்தியர்கள், பொறியியலாளர்கள், பொருளாதார வல்லுநர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் இணைந்திருந்தமை மக்களுக்கு பெரும் நம்பிக்கையைக் கொடுத்தது.

இத்தேர்தலில் மிக முக்கியமான இரு விடயங்கள் இடம்பெற்றன. தமிழ்த் மக்கள் ஒற்றையாட்சி அரசியல் யாப்பை தாங்கள் முற்றாக நிராகரிக்கிறார்கள் என்ற உண்மையை வெளிப்படுத்தியிருக்கின்றனர். தமிழீழ விடுதலைப் புலிகளைத் தூர வைத்துவிட்டு தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என்ற பேருண்மை இங்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

ஏனெனில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழீழ விடுதலைப் புலிகள் உருவாக்கவில்லை என்பதை கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் வெளிப்படையாக பல இடங்களில் கூறினார். அக்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுமந்திரன் ஒருபடி மேலே சென்று புலிகள் பயங்கரவாதிகள் என்றார். புலிகள் செய்த போர்க்குற்றத்தையும் விசாரிக்க வேண்டும் எனவும் புலிகள் சகோதரப் படுகொலைகளில் ஈடுபட்டனர் எனவும் அவர்களின் செயற்பாடுகள் கண்டிக்கப்படவேண்டியவை எனவும் சுமந்திரன் கூறினார். புலிகளுக்கு எதிராக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பிரச்சாரங்களை முன்னெடுத்தார்.

மாறாக, தமிழ்த் தேசியப் பேரவையினர் நேரடியாகவே தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கைப் பற்றுறுதியை  மக்கள் முன் கொண்டு சென்றனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் தனிநாட்டுக் கோரிக்கையை சமஷ்டிக் கோரிக்கையாக மாற்றிய பேரவையினர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தியாகத்தை எவரும் புறந்தள்ள முடியாது என்ற உண்மையை மக்களுக்கு உரத்துக் கூறினர். மாவீரர்களுக்கு அக வணக்கம் செலுத்தி, ஈகச் சுடர் ஏற்றிய பின்னரே தமது தேர்தல் பரப்புரைக் கூட்டங்களை ஆரம்பித்தனர். ஆக, ஆயுதம் அற்ற தமிழீழ விடுதலைப் புலிகளாக அவர்களின் செயற்பாடுகள் அமைந்திருந்தன. தமிழ் மக்கள் தமிழ்த் தேசியப் பேரவையை ஏற்றுக்கொள்வதற்கு இது காரணமாக அமைந்தது.

இதனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் போலித் தேசியத்தை மக்கள் இனம்கண்டுகொண்டனர். தமிழ் மக்கள் பேரவைக்கு வாக்குகளை வழங்கினர். தமிழர் தாயகத்தில் கூட்டமைப்புக்கும் பேரவைக்கும் சமநிலை ஏற்பட்டது. தமிழ் மக்கள் பேரவை பேரியக்கமாக மாற்றம்பெற்றது. தமிழர் தாயக மக்கள் தமிழ்த் தேசியத்தை விட்டுக்கொடுக்க முடியாது என்பதற்காக வாக்களித்தனர். நாம் தனியான இறைமையுள்ள தேசிய இனம். ஒன்றையாட்சிக்குள் வாழ நாம் விரும்பவில்லை என்பதை தமிழ் மக்கள் தெளிவாக எடுத்துரைத்தனர். எமது தாயகத்தில் நாம் இறைமையுடன் வாழவே விரும்புகின்றோம் என்பதை அவர்கள் வெளிப்படுத்தினர்.

அதேவேளை, சிங்கள மக்கள் சிங்கள இனவாதத்திற்கு வாக்களித்தனர். புதிய அரசமைப்பின் ஊடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ் மக்களுக்கு உரிமைகளை வழங்கப்போகின்றார் என மகிந்த தரப்பினர் தெற்கில் எடுத்துரைத்த இனவாதக் கருத்துக்களை உள்வாங்கிய சிங்கள மக்கள் தமது சிங்களத் தேசியத்திற்கு வாக்களித்தனர். இவற்றில் இருந்து, இலங்கைத் தீவில் இறைமையுள்ள இரு தேசங்கள் உள்ளன. அவற்றுக்கு தனித்தனியான தேசியங்கள் உண்டு. எனவே, தமிழ் மக்களின் தேசியத்தையும் அவர்களின் தேசத்திற்கான இறைமையையும் சர்வதேசம் அங்கிகரிக்கவேண்டும் என்ற உண்மை உணர்த்தப்பட்டிருக்கின்றது.

தாயகத்தில் உள்ள தமிழ் மக்கள் வெளிப்படுத்திய இந்தப் பேருண்மையை இனிமேல் சர்வதேசத்தின் காதுகளுக்கு எடுத்துச் சென்று சேர்க்கவேண்டிய பெரும் பொறுப்பு புலம்பெயர் தமிழ் மக்களுக்கு இருக்கின்றது.

நன்றி: ஈழமுரசு

செய்திகள்
செவ்வாய் செப்டம்பர் 11, 2018

கடந்த ஆண்டு மியான்மரில் ஏற்பட்ட வன்முறைகள் காரணமாக புலம்பெயர்ந்த சுமார் ஏழரை இலட்சம் வரையான ரோஹிங்கியோ அகதிகள் வங்கதேசத்தில் தஞ்சமடைந்திருக்கின்றனர்.

ஞாயிறு செப்டம்பர் 09, 2018

தமிழ் மக்கள் மிகவும் தெளிவான மனநிலையில்தான் இருக்கின்றார்கள் என்பதை தாயகத்தில் தற்போது நடைபெற்றுவரும் சம்பவங்கள் எடுத்துரைக்கின்றன.