புதைகுழிகளுக்குள் இருந்து உண்மைகள் உயிர்த்தெழும் வரை... - ‘கலாநிதி’ சேரமான்

April 10, 2017

கொழும்பில் இருந்து வெளிவரும் ‘டெய்லி மிரர்’ பத்திரிகைக்குக் கடந்த 30.03.2017 அன்று முன்னாள் சிறீலங்கா வெளியுறவுத்துறை அமைச்சர் ரோகித பொகொல்லாகம வழங்கிய செவ்வியானது இறுதி யுத்தத்தில் கொழும்பின் இராசதந்திர வட்டாரங்களில் மூடுமந்திரமாக அரங்கேறிய பல்வேறுபட்ட விடயங்களின் முடிச்சுக்களை அவிழ்த்து விட்டுள்ளது.

மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் சிங்கள தேசத்தின் வெளியுறவு அமைச்சராகத் தான் பதவி வகித்த பொழுது நிகழ்த்திய இராசதந்திர ‘சாதனைகள்’ பற்றிய சுயபுராணத்தையே இச்செவ்வியூடாகப் பொகொல்லாகம பாடியுள்ளார். அதிலும் இறுதி யுத்தத்தில் சிங்களப் படைகள் ஈட்டிய வெற்றிக்கு இராசதந்திர அரங்கில் தான் மேற்கொண்ட காய்நகர்த்தல்களே காரணம் என்று மார்தட்டுவது போன்ற தொனியிலேயே பொகொல்லாகமவின் செவ்வி அமைந்துள்ளது. சிங்கள தேசத்தின் யுத்த வெற்றிக்குத் தானே காரணம் என்று சந்திரிகா அம்மையார் உரிமை கோரும் பொழுது பொகொல்லாகம மட்டும் என்ன சும்மாவா இருப்பார்?

பொகால்லாகமவின் சுயபுராணத்திற்கு அப்பால் சென்று அவரது செவ்வியில் கூறப்பட்டுள்ள தகவல்களை நாம் நுணுகி ஆராய்ந்தால், தமிழீழ தேசத்தின் எதிர்கால அரசியல் வியூகங்களுக்கு அடிப்படையாக இருக்கக் கூடிய சில முக்கியமான விடயங்கள் அதில் பொதிந்திருப்பதை அவதானிக்க முடியும்.

பொகால்லாகம கூறுகின்றார்: “அக்காலப் பகுதியில் அமெரிக்கத் தூதுவர் பிளேக் அவர்கள் என்னை வந்து சந்தித்ததை இப்பொழுது நினைவுமீட்டிப் பார்க்கின்றேன். நாட்டில் இரத்தக் களரி நிகழப் போகின்றது என்று தமது அரசாங்கம் அஞ்சுவதாக என்னிடம் அவர் கூறினார். ‘தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையை அழிப்பதற்கு நீங்கள் எடுக்கும் முயற்சி நாட்டில் இனவழிப்பு நிகழ்வதிலேயே முடியும். இதன் பின் உலகிற்கு நாம் என்ன பதிலைக் கூற முடியும்’ என்று அவர் என்னிடம் கேள்வியயழுப்பினார். இதற்கான தீர்வு என்னவென்று நான் கேட்ட பொழுது, பிரச்சினையைத் தம்மிடம் விடுமாறு அவர் வேண்டினார். ‘இராசதந்திர வழிகளில் பிரபாகரனை நாம் சரணடைய வைப்போம்’என்றார். அவர் கூறியதை செவிமடுத்த பின்னர் நான் கேட்டேன், “எங்கள் இறையாண்மையைப் பற்றி நீங்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கின்றீர்கள்” என்று.

இங்கு சில முக்கிய விடயங்களை பொகொல்லாகம புட்டு வைக்கின்றார். அதாவது பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற மகுடத்தின் கீழ் சிங்களம் முன்னெடுத்த யுத்தம் இனவழிப்புப் பரிமாணத்தைக் கொண்டிருந்தது என்பதை அப்பொழுதே அமெரிக்கா நன்கு புரிந்து கொண்டிருந்தது என்பது அவற்றில் ஒன்று. அதாவது ஈழத்தமிழினம் முழுமையாக அல்லாது விட்டாலும் பகுதியாக அழிக்கப்படப் போகின்றது என்பதை அமெரிக்கா நன்கு அறிந்திருந்தது. அமெரிக்கா அறிந்திருந்த இந்த விடயம் ஏனைய மேற்குலக நாடுகளுக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.

இன்னொரு விதத்தில் கூறுவதானால், சமாதான காலத்தில் சிங்களப் படைகளைப் பலப்படுத்துவதற்கும், நவீன மயப்படுத்துவதற்கும் முழு மூச்சுடன் செயற்பட்டு, நிழல் யுத்தம் தீவிரமடைந்ததும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் தத்தமது நாடுகளில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்களைப் பன்னாட்டுக் கடற்பரப்பில் சிங்களக் கடற்படை தகர்ப்பதற்குத் தேவையான புலனாய்வுத் தகவல்களை வழங்கிய முழு மேற்குலகமும், வன்னியில் இனவழிப்பு நிகழப்போவதை அறிந்திருந்தது.

இறுதி யுத்தம் தீவிரமடைந்து, சிங்களப் படைகளின் தாக்குதல்களில் அப்பாவித் தமிழ்ப் பொதுமக்கள் கொல்லப்படுவது பற்றிய தகவல்கள் வெளிவந்ததும், யுத்தத்தை நிறுத்துமாறு மகிந்தரின் அரசாங்கத்திற்கு மேற்குலகம் எந்த அழுத்தத்தையும் கொடுக்கவில்லை என்று இங்கு நாம் கூற முற்படவில்லை. பிரித்தானியாவிலும், பிரான்சிலும் தமிழர்கள் மேற்கொண்ட தொடர் போராட்டங்களின் எதிரொலியாக அன்றைய பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் மிலபான்ட், பிரெஞ்சு வெளியுறவுத்துறை அமைச்சர் பேனார்ட் குஷ்னர் ஆகியோர் 2009 சித்திரை மாத இறுதியில் கொழும்பு சென்று போரை நிறுத்துமாறு மகிந்த ராஜபக்சவை வலியுறுத்தினார்கள். மறுபுறத்தில் பொதுமக்கள் தஞ்சம் புகுந்துள்ள பகுதிகளில் தாக்குதல்களை நிகழ்த்த வேண்டாம் என்று சிங்கள அரசுக்கு அன்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கிலாரி கிளின்ரன் அவர்களும், யுத்தத்தின் இறுதி நாட்களில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அவர்களும் பகிரங்கமாகவே கோரிக்கை விடுத்திருந்தார்கள்.

ஆனாலும் முள்ளிவாய்க்காலில் அரங்கேறிக் கொண்டிருந்த தமிழின அழிப்பை தடுத்து நிறுத்துவதற்குப் போதுமான அளவிற்கு மேற்குலகின் அழுத்தம், அதிலும் குறிப்பாக உலக வல்லரசான அமெரிக்காவின் அழுத்தம், இருக்கவில்லை என்பதுதான் உண்மை. ஐ.நா. பாதுகாப்புப் பேரவையின் அதிகாரபூர்வ அமர்வுகளில் அல்லாது பேரவையின் உணவகத்தில் ஈழப் போரை நிறுத்துவது பற்றி அதிகாரபற்றற்ற முறையில் மேற்குலக இராசதந்திரிகள் உரையாடிமை, தமிழின அழிப்பைத் தடுத்து நிறுத்துவதற்குக் காத்திரமான நடவடிக்கைகளை எடுப்பதில் மேற்குலகம் முழு அக்கறை கொண்டிருக்கவில்லை என்பதற்கு அன்றே சான்றுபகர்ந்தது. 

தவிர, பொகால்லாகம கூறியிருப்பது போன்று தமிழீழ விடுதலைப் புலிகளை நிராயுதபாணிகளாக்குவதிலும், தமிழீழ தேசியத் தலைவரைத் தம்மிடம் சரணடைய வைப்பதிலுமே அன்று மேற்குலகம் கவனம் செலுத்தியிருந்தது. உதாரணமாக போர்நிறுத்தம் பற்றியும், அரசியல் தீர்வு பற்றியும் பேசுவதற்கு வருமாறு 2008ஆம் ஆண்டின் இறுதியில் நோர்வேயின் பன்னாட்டு அபிவிருத்தித்துறை அமைச்சர் எரிக் சுல்கைம் அவர்களிடம் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்கள் கோரிய பொழுது, ஆயுதக் களைவுக்கும், சரணடைவிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இணங்கினால் மட்டுமே தன்னால் வன்னிக்கு வர முடியும் என்று அப்பொழுது சுல்கைம் அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். அத்தோடு, தமிழீழத்தின் கனவுலகப் பிரதமர் உருத்திரகுமாரனின் உதவியாளர் வழுதியின் ஏற்பாட்டில் பா.நடேசன் அவர்களுடன் 24.12.2008 அன்று தொலைபேசி மூலம் உரையாடிய அன்றைய அமெரிக்க பாதுகாப்புத்துறை துணை அமைச்சர் ஜேம்ஸ் கிளாட் அவர்கள், யுத்தத்தை நிறுத்துவதற்கு அழுத்தம் கொடுப்பதற்கு இதே நிபந்தனையையே விதித்திருந்தார். இவ்விடயங்களைத் ‘தந்திரிகளின் மறுமுகம்’ என்ற மகுடத்தின் கீழ் 2011ஆம், 2012ஆம் ஆண்டுகளில் வெளியிட்ட தொடர் கட்டுரைகளில் நாம் ஆதாரபூர்வமாக வெளிக்கொணர்ந்திருந்தமை வாசகர்களுக்கு நினைவில் இருக்கக்கூடும்.

யுத்தம் முடிவடைந்து இரண்டு ஆண்டுகளின் பின் மேற்குலக அரசியல் தலைவர் ஒருவருடன் உரையாடுவதற்கு இப்பத்தி எழுத்தாளருக்கு வாய்ப்புக் கிடைத்திருந்தது. அப்பொழுது அவரிடம் இப்பத்தி எழுத்தாளரால், “எதற்காக கொசவோவில் நிகழ்ந்த இனவழிப்பைத் தடுத்து நிறுத்துவதற்குத் 1999ஆம் ஆண்டு நடவடிக்கை எடுத்தது போன்று 2009ஆம் ஆண்டு வன்னியில் நிகழ்ந்த இனவழிப்பை நிறுத்துவதற்கு மேற்குலகம் நடவடிக்கை எடுக்கவில்லை?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறிய பதில் ஆச்சரியம் அளிப்பதாக இருக்கவில்லை. “சிறீலங்கா உலகின் எங்கோ ஒரு மூலையில் உள்ளது. கொசவோ ஐரோப்பாவின் கொல்லைப் புறத்தில் உள்ளது. எனவே சேர்பியா மீது தாக்குதல்களை நடாத்திக் கொசவோவில் நிகழ்ந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தமை போன்று உலகப் பந்தின் அரைவாசி விட்டத்தில் இருக்கும் சிறீலங்கா மீது தாக்குதல்களை நிகழ்த்தி அங்கு யுத்த நிறுத்தத்தைக் கொண்டு வருவதற்கு மேற்குலகம் தயாராக இருக்கவில்லை. இதுதான் யதார்த்தம்” என்றார் அந்த மேலைத்தேய அரசியல் தலைவர்.

சரி, இப்பொழுது உலகத் தமிழர்கள் மத்தியில் எழக்கூடிய கேள்விகள் இவைதான்: யுத்தம் தீவிரமடையத் தொடங்கியதுமே இனவழிப்பு நிகழப் போகின்றது என்பதைப் புரிந்து கொண்டிருந்த மேற்குலகம், இது பற்றி சிங்களத்திற்கு எச்சரிக்கை செய்த மேற்குலகம், இறுதி யுத்தத்தில் 146,679 தமிழ்ப் பொதுமக்கள் கொல்லப்பட்டும், காணாமல் போகச் செய்யப்பட்டும் கணக்கிலடங்காதவர்களாக மாறியதை இனவழிப்பு என்று கூறுவதற்கு ஏன் இன்னமும் தயங்குகின்றது? நடந்தேறிய ஒரு இனவழிப்பை, அவ்வாறு அழைக்காது போர்க்குற்றங்கள் என்றும், மானிடத்திற்கு எதிரான குற்றச்செயல்கள் என்றும் எதற்காக இன்று மேற்குலகம் அழைக்கின்றது? இதைப்பற்றி மேற்குலக இராசதந்திரிகள், பன்னாட்டு விவகார அரசறிவியலாளர்கள், சட்ட நிபுணர்கள் போன்றோரிடம் எம்மவர்கள் கேட்டால், அவர்கள் உடனடியாகவே கூறும் பதில் இறுதி யுத்தத்தில் இனவழிப்பு நிகழ்ந்தது என்பதை நிரூபிப்பதற்குப் போதுமான ஆதாரங்கள் இல்லை என்பதாகும். இதுபற்றி 2013ஆம் ஆண்டு ஆவணி மாதம் கொழும்பில் வைத்து அன்றைய ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையாரிடம் செய்தியாளர் ஒருவர் வினவிய பொழுது, இனவழிப்பு என்பது ஒரு சட்டபூர்வச் சொல்லாடல் என்றும், அதனை நீதிமன்றங்களுக்கு வெளியில் கையாளும் பொழுது அவதானமாகக் கையாள வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். 

இதில் வேடிக்கை என்னவென்றால், 2014ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் ஈராக்கின் குர்து மாநிலம் வரை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் முன்னேறி ஆயிரக்கணக்கான யசிடி இனத்தவர்களைக் கொன்றுகுவித்த பொழுது, அச்செய்கையை எவ்வித தயக்கமும் இன்றி இனவழிப்பு என்று அன்றைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அவர்கள் வர்ணித்தார். அப்பொழுது யசிடி இனத்தவர்கள் மீதான படுகொலைகள் பற்றி உலகின் எந்தவொரு நீதிமன்றிலும் எந்த வழக்கும் நிகழவில்லை: இனவழிப்பு என்ற சொல்லை எந்தவொரு பன்னாட்டு நீதிபதியும் உச்சரிக்கவில்லை. அப்படியிருந்த பொழுதும் இனவழிப்பு என்ற சொற்பதத்தை பராக் ஒபாமா உச்சரித்தார். ஏனென்றால் இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடம் பறிகொடுக்கப்பட்ட ஈராக்கின் நிலப்பகுதிகளை மீட்டெடுக்கும் படை நடவடிக்கைகளுக்கு அத்தியாவசியமான வான்வழித் தாக்குதல்களை அமெரிக்கப் படைகள் நிகழ்த்துவதற்கான நியாயப்பாடாக இனவழிப்பில் இருந்து மக்கள் மீட்டெடுத்தல் என்ற சொல்லாடல் அன்று அமெரிக்காவிற்கும், ஏனைய மேற்குலக நாடுகளுக்கும் பயன்பட்டது.

ஆனால் தமிழர் விடயத்தில்?2012ஆம், 2013ஆம், 2014ஆம் ஆண்டுகளில் ஈழத்தீவில் மேற்குலகிற்குத் தேவைப்பட்டது ஆட்சிமாற்றம். மகிந்தரை ஆட்சிக்கட்டிலிருந்து தூக்கியயறிவதற்குப் போர்க்குற்றங்கள் என்றும், மானிடத்திற்கு எதிரான குற்றச்செயல்கள் என்றும் அன்று மேற்குலகம் பேசியது. ஜெனீவாவில் தீர்மானங்களைக் கொண்டுவந்தது. ஆனாலும் மகிந்தர் மசியவில்லை. இதனை பொகொல்லாகம அவர்களே ஒப்புக் கொண்டிருக்கின்றார்.

ஒருவேளை 2015ஆம் ஆண்டு தை 8ஆம் நாளன்று ஈழத்தீவில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருக்காத பட்சத்தில், அவ்வாண்டு புரட்டாசி மாதம் வெளிவந்த ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையாளர் செயலகத்தின் விசாரணை அறிக்கையில் இறுதி யுத்தத்தில் நிகழ்ந்தது இனவழிப்பு என்று குறிப்பிடப்பட்டிருப்பதற்கு நிறையவே வாய்ப்புக்கள் இருந்தன. உதாரணமாக ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையாளரின் விசாரணை அறிக்கை தனது கைகளில் கிடைத்ததும் ஊடகங்களுக்குக் கருத்துக்கூறிய சிங்கள வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, ‘நான் பயந்த அளவிற்கு விசாரணை அறிக்கை இருக்கவில்லை’ என்றார். இதன் அர்த்தம் போர்க்குற்றங்கள், மானிடத்திற்கு எதிரான குற்றச்செயல்கள் என்ற குற்றச்சாட்டுக்களுக்கு மேலதிகமாக இனவழிப்பு என்ற குற்றச்சாட்டையும் ஐ.நா. சுமத்தி விடும் என்று மங்கள சமரவீர அஞ்சினார் என்பதுதான்.

ஆனாலும் தனது செயலகத்தின் விசாரணை அறிக்கை வெளியாகிய மறுநாள் பிரித்தானியாவின் சனல்‡4 தொலைக்காட்சிக்கு செவ்வி வழங்கிய ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையாளர் சயீத் அல்‡உசேன், தாம் மேற்கொண்ட விசாரணைகள் இறுதி யுத்தத்தில் இனவழிப்பு நிகழ்ந்ததை உறுதிசெய்யாத பொழுதும், எதிர்காலத்தில் இதற்கென நீதிமன்றம் ஒன்று அமைக்கப்பட்டால் இனவழிப்பு நிகழ்ந்தது என்ற முடிவு எட்டப்பட்டாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை என்ற தொனியில் குறிப்பிட்டிருந்தார்.

ஆக, ஒரு விடயம் தெளிவாகின்றது. தமிழீழத்தில் நிகழ்ந்தது இனவழிப்பு என்பதை யுத்தம் முடிவதற்கு முன்னரும், யுத்தம் முடிந்த பின்னரும் மேற்குலகம் நன்கு அறிந்திருந்தது. ஒருவேளை தொடர்ந்தும் மகிந்தர் ஆட்சியில் அமர்ந்திருந்தால், இப்பொழுது இனவழிப்புப் பற்றி மேற்குலகம் பேசத் தொடங்கியிருக்கும். துர்ப்பாக்கியவசமாக சம்பந்தரின் வழிகாட்டலை நம்பி மைத்திரிபால சிறீசேனவிற்கு வாக்களித்ததன் மூலம் இதற்கான வாய்ப்பை எம்மவர்களே இல்லாமல் செய்து விட்டார்கள். இனி ஈழத்தீவில் மேற்குலகிற்கு விரோதமான ஆட்சி மாற்றம் ஒன்று நிகழும் வரை இனவழிப்பு என்ற வார்த்தையை மேற்குலகம் உச்சரிக்கப் போவதில்லை. அதற்காக அவ்வாறான காலம் ஒருக்காலும் கனியாது என்று எண்ணி நாம் கவலையில் மூழ்கியிருக்கத் தேவையில்லை. உலகின் இன்றைய ஓட்டம் எமக்குச் சாதகமாக இல்லை.

எனவே இராசதந்திர அரங்கில் நிகழும் ஒவ்வொரு சமர்களிலும் நாம் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம். சிங்களம் வெற்றி பெற்ற வண்ணம் இருக்கின்றது. ஆனாலும் உலகப் பந்து எப்பொழுதும் ஒரே இடத்தில் நிற்பதில்லை என்பது போன்று உலக ஒழுங்கும் எப்பொழுதும் ஒரே திசையில் பயணிக்கப் போவதில்லை என்பதுதான் யதார்த்தம். சீனத் தத்துவமேதை சன் சூ அவர்களின் வார்த்தைகளில் கூறுவதானால், பல சமர்களில் ஈட்டப்படும் வெற்றி தோல்விகளை விட, யுத்தத்தின் இறுதியில் ஈட்டப்படும் வெற்றியே முக்கியமானது. பல சமர்களில் தோல்விகாண்பவர்கள் யுத்தத்தின் இறுதியில் வெற்றிபெறுவதுண்டு. பல சமர்களில் வெற்றிபெறுபவர்கள் யுத்தத்தின் இறுதியில் தோல்வியைத் தழுவுவதுண்டு. இக்கூற்று தமிழர் விடயத்திலும் பொருந்தும்: சிங்கள தேசத்தின் விடயத்திலும் பொருந்தும்.

எனவே உலக ஒழுங்கில் நாம் எதிர்பார்க்கும் மாற்றம் நிகழ்வதற்கு மூன்றாண்டுகளும் எடுக்கலாம்: மூன்று தசாப்தங்களும் எடுக்கலாம். அவ்வாறான மாற்றம் நிகழும் பொழுது இப்பொழுது இயங்குநிலையில் உள்ள தலைமுறை இவ்வுலகை விட்டு மறுலோகம்கூடச் சென்றிருக்கும்.

ஆனாலும் இனவழிப்பு என்ற ஆயுதத்தை என்றோ ஒரு நாள் சிங்களத்திற்கு எதிராக மேற்குலகமோ, அன்றி உலகின் ஏதாவது ஒரு நாடோ கையில் எடுக்கும் பொழுது அன்று வாழும் தமிழ்த் தலைமுறையிடம் அதற்கான ஆதாரங்கள் ஆவணங்களாக இருப்பது அவசியம். அந்த ஆவணப்படுத்தும் பணியை இப்பொழுதே இப்போதைய தலைமுறை தொடங்க வேண்டும். சமநேரத்தில் தமிழீழ மண்ணின் இருப்பையும், ஈழத்தமிழினத்தின் இருப்பையும் தக்க வைப்பதற்கான பணிகளும் முடுக்கிவிடப்பட வேண்டும்.

பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்னர் 27.11.1998 அன்று மாவீரர் நாள் உரையில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பதிவுசெய்த கருத்தை இவ்விடத்தில் மீள்பதிவு செய்வது பொருத்தமானது:

‘இன்றைய உலக ஒழுங்கில் ஒவ்வொரு நாடும் தனது சொந்தத் தேசிய அபிலாசைகளிலும், வர்த்தக நலன்களிலும் அக்கறை கொண்டு செயற்படுகின்றது என்பது எமக்குத் தெரியாததல்ல. எனினும் மனித உரிமை, மனித சுதந்திரம் என்ற பொதுமையான விழுமியங்களுக்கு நாகரீக உலகம் முதன்மை கொடுக்கத் தவறவில்லை. இந்த நாகரீக உலகத்திற்குத் தலைமை தாங்கும் நாடுகள், சிறீலங்காவில் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் அநாகரீகமான ஒடுக்குமுறைக்கு எதிராகக் குரலெழுப்பத் தயங்குவது எமக்குத் துயரத்தைத் தருகிறது. எனினும் நாம் மனம் தளர்ந்து போகவில்லை. என்றோ ஒரு நாள் தமிழீழத்தின் புதைகுழிகளுக்குள் மூடப்பட்டு உறங்கும் உண்மைகள் வெளிவரத்தான் செய்யும். அவ்வேளை சிங்களப் பேரினவாதத்தின் முகமூடி கிழியும். அப்பொழுது எமது மக்களின் சோகக் கதை உலகத்தின் இதயத்தை உலுப்பும். அதுவரை அனைத்துலகெங்கும் வாழும் ஈழத் தமிழர்கள் உலகத்தின் மனச்சாட்சியை உறுத்தும் வகையில் தாயகத்து உண்மை நிலைகளைச் சர்வதேச சமூகத்திற்கு இடித்துரைத்து வர வேண்டும்.’

நன்றி: ஈழமுரசு

செய்திகள்
ஞாயிறு January 14, 2018

தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய தலைவராக கே.பியை அப்போதைய மட்டு. மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் தயாமோகன் பிரகடனம் செய்ததன் காரணம் என்ன...?