புதைக்கப்படுமா? புலத்தின் பலம்! - கந்தரதன்

February 23, 2017

இன்று புலம்பெயர் தேசங்களில் தமிழ் மக்களின் குரல்களாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புக்கள் அனைத்தையும் சிதைக்கும், அழிக்கும் நடவடிக்கைகளில் தமிழ்த் தேசியத்திற்கு எதிரான புல்லுருவிகள் தொடர்ச்சியாகப் பயணித்துக்கொண்டிருக்கின்றார்கள். இவை குறித்து பல தடவைகள் இப்பகுதியில் நாம் எழுதியிருந்தோம். இதற்கு புலம்பெயர் தேசங்களில் புதிதாக உருவெடுத்துள்ள காணொளி ஊடகங்களின் பங்களிப்பும் முக்கியத்துவம் பெறுகின்றது.

எமது தாயகத்திற்கு வணக்கம் கூறிக்கொண்டு, சிறீலங்கா அரசின் நடவடிக்கைகளுக்கு துணைபோவதாக, அவர்களின் துதி பாடி உலகம் எங்கும் வாழும் தமிழ் மக்களின் மத்தியில் வலம்வந்து மக்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட ஊடகத்தை மறந்து விடமுடியாது. காலத்தின் ஓட்டம் வணக்கம் கூறியவர்களையும் ஓடவைத்தது. பின்னர் வேறு ஒரு காணொளி ஊடகத்தில் அவர்களின் அடாவடிகள் இன்றும் தொடர்கின்றன.

வீதியில் செல்பவர்களை எல்லாம் வலிந்து இழுத்து அவர்களின் வாயால் ஏதாவது தமிழீழப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் கருத்துக்கள் வரவைப்பதிலேயே அதனை ஒழுங்குசெய்பவர் குறியாக உள்ளார். கடந்தவாரம் இடம்பெற்ற முக்கிய விடயத்தை இங்கு பகிர்ந்துகொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது.

வன்னியில் ஏ9 சாலையில் முறிகண்டி ஆலயப் பகுதியில் கச்சானுக்கு விளம்பரம் கொடுத்துக்கொண்டிருந்த குறித்த ஊடகத்தின் பெண் அறிவிப்பாளர், வீதியில் சென்ற வழிப்போக்கர்களான ஒரு குடும்பத்தினரை வரிசையாக நிறுத்தி கேள்வி மேல் கேள்விகேட்டு அவர்களின் குடும்பவிடயங்களை சந்திசிரிக்க வைத்தது மட்டுமல்ல, இப்பகுதியால் இப்போது பயணம் செய்யும் போது உங்கள் மனநிலை எப்படி இருக்கின்றது என்று ஒருவரிடம் கேட்க, அவர், “அப்போது சுதந்திரம் இல்லாத பயணம் இருந்தது, ஆனால் இப்போது சுதந்திரமாகப் பயணம் செய்கின்றோம்” என மகிழ்ச்சியாகப் பதில் அளிக்கின்றார். இது இவ்வாறான விடயங்களையே குறித்த நிகழ்ச்சியின் இயக்குநர் எதிர்பார்க்கின்றார் என்ற உண்மையை வெளிக்கொண்டுவந்துள்ளது.

ஆனால், அங்கு இன்னும் மீள்குடியேற்றத்திற்காக மக்கள் போராடிக்கொண்டிருக்கின்றார்கள்.  காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் அல்லாடிக்கொண்டிருக்கின்றார்கள். யுத்த வடுக்களில் இருந்து மீளாமல் இன்னும் எத்தனையோ உறவுகள்..! இவற்றை உணர்த்தாமல், புலம்பெயர் தேச உறவுகளின் பணத்தில் புனரமைக்கப்பட்ட ஆலயங்களையும், பாடசாலைகளையும் காட்டி அங்கு சிறப்பாக இருப்பதாகக் கூறுவது மன்னிக்கமுடியாத விடயம். அங்கு எல்லாம் நிறைவாக இருப்பதாகக் காட்டுவது இராணுவத்தினரால் எந்தக்கெடுபிடியும் இன்றி மக்கள் வாழ்கின்றார்கள் என்பதைக் காட்டுவதற்குச் சமம். அத்தோடு, புலம்பெயர் மக்களின் உதவிகள் குறைக்கப்படும். நல்லவிடயங்களை காட்டுவதனால் கெட்டவிடயங்கள் மறைக்கப்படும். போன்ற விடயங்களையே இவர்கள் எதிர்பார்த்துநிற்கின்றனர்.

இதேவேளை, குறித்த நிகழ்வில் யாராவது விடுதலைப் புலிகள் தொடர்பில் ஏதாவது நல்லவிடயங்கள் கூறமுற்பட்டால், முன்னுக்குப்பின் முரணாக காட்சிகளை வெட்டி இருட்டடிப்பும் செய்துவிடுகின்றனர். இந்நிலையில், புலம்பெயர் தேசத்தினை மையமாகக் கொண்டு இயங்கும் குறித்த ஊடகங்கள், தமிழ்த்தேசிய ஆதரவுப் போராட்டங்களை குறிப்பாக தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களால் புலம்பெயர் தேசங்களில் உருவாக்கப்பட்ட கட்டமைப்புக்களினால் ஒழுங்குபடுத்தப்படும் போராட்டங்கள், நிகழ்வுகள் ஒன்றுக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல், அவற்றினை நாளாந்த செய்தி அறிக்கையில் கூட காட்சிப்படுத்துவதைத் தவிர்த்து வருகின்றமை இவர்கள் யார் என்பதை மக்களுக்கு உணர்த்தி நிற்கின்றது.

இத்தோடு மற்றொரு விடயத்தையும் இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும். தேசிய செயற்பாட்டாளர்களைக் குழப்புவதற்கு இணையவழி குறுஞ்செய்தி அனுப்பும் நபர்களும் புதிதாக முளைத்துள்ளனர். அவர்கள் புதிது புதிதாக குழுக்களை அமைத்து, அதில் நண்பர்கள், நண்பர்கள் அல்லாதவர்கள், தேசிய செயற்பாட்டாளர்கள், அதற்கு எதிரானவர்கள் என அனைவரையும் இணைத்து, அவர்களை மோதவைத்துக் குளிர்காய்கின்றனர். இதில் வரும் நபர்கள் தன்னிச்சையாக தகவல்களை காணொளி, ஒலி மற்றும் தட்டச்சு வடிவங்களில் தகவல்களைப் வெளிவிடுகின்றனர். இதில் தமக்கு முன்விரோதம் உள்ளவர்களையும் திட்டித் தீர்ப்பது மட்டுமல்ல, அவர்கள் மீது பழிபோடுவது என இவர்களின் தேசியப் பயணம் செல்கின்றது. எவ்வளவோ காத்திரமான நடவடிக்கைகள் இருக்கும் போது, குறித்த நடவடிக்கைக்கு இவர்கள் செலவிடும் நேரம் அதிகம் என்றே சொல்லவேண்டும்.

இதேவேளை, தமிழ்த் தேசியத்திற்கு எதிராக தமிழ் மக்களுக்கு மத்தியில் விடயங்களைத் திணிப்பதற்கு புதிது புதிதாக இவர்களுக்கு திட்டங்கள் தோன்றுகின்றனவோ என்னவோ (அறைபோட்டு சிந்திப்பார்கள் போல) காணொளியில் மக்களைக் குழப்பவது போதாதென்று அச்சு ஊடகங்களும் மக்கள் மத்தியில் வலம் வரத்தொடங்கியுள்ளன. வலம்வரவுமுள்ளன.

விழுந்தவனை மாடேறி மிதிப்பதுபோன்று இவர்களின் செயற்பாடுகள் உள்ளன. எது எவ்வாறு இருப்பினும் நாம் முன்பு குறிப்பிட்டதுபோலவே வரலாறு இவர்களை ஒருபோதும் மன்னிக்காது. தேசவிடுதலைக்காக தமது இன்னுயிர்களைத்தந்த மான மறவர்களையும், மக்களையும் மனதில் இருத்தி எமது இலட்சியப் பாதையில், தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களின் பாதையில் பயணிப்போம். புலம்பெயர் வாழ் உறவுகளே எமது தேசியத்தின் பாதையில் முட்கள் போன்று குறுக்கிடும் தீய சக்திகளை இனம்கண்டு அவற்றை ஓரமாக வீசிவிட்டுப் பயணிப்போம்.

இது சிந்திக்கும் நேரமல்ல செயற்படும் நேரம்!

(சூறையாடல்கள் தொடரும்)

நன்றி: ஈழமுரசு

செய்திகள்
சனி April 21, 2018

புலம்பெயர் வாழ் தமிழ்ச் சிறார்களின் தாய்மொழிக் கல்விக்கு வழிசமைக்கும் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் பிரான்சு...

ஞாயிறு April 08, 2018

விடுதலைப் புலிகளிடம் உயிருடன் பிடிபட்டபோது அந்த சிங்கள இராணுவச் சிப்பாய் தன் வாழ்க்கை முடிந்துவிட்டதாகவே எண்ணியிருந்தான்.