புற்றுநோயாளிகளுக்கு உதவும் இனியா!

சனி ஜூன் 09, 2018

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவரான இனியா, தான் நடித்துள்ள இசை ஆல்பத்தின் மூலம் புற்றுநோயாளிகளுக்கு உதவ திட்டமிட்டிருக்கிறார்.

‘வாகை சூடவா’ படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் பதிந்தவர் இனியா. இதில் நட்சத்திர அந்தஸ்தை பெற்றார். இந்த படத்தில் நடித்ததற்காக இனியாவுக்கு தமிழக அரசின் சிறந்த நடிகை விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

இனியா நடிப்பில் அடுத்ததாக பொட்டு படம் வெளியாக  இருக்கிறது. இந்த நிலையில், இசை ஆல்பம் ஒன்றை வெளியிடவிருக்கிறார். ’பிரபல டான்ஸராகி கொடி கட்டி பறக்க வேண்டும் என்று ஆசைப்படும் ஒரு பெண்ணை பற்றிய பாடல் இது. விருதுகளை வாங்கி குவிக்க வேண்டும். இது தான் அந்தப் பெண்ணின் வாழ்க்கை லட்சியம். 

அந்த லட்சியத்தை அடைய போராடுகிறாள். அவளுக்கு பல தடைகள் வருகின்றன. ஆனால் லட்சியத்தை அடைய வேண்டும் என்றால் முயற்சியை கை விடக் கூடாது என்று போராடுகிறாள். அவள் வென்றாளா? இல்லையா? என்பதே இந்த மியா ஆல்பம்’ என்கிறார் இனியா.

இந்த ஆல்பத்தின் மூலம் வசூலாகும் பணத்தில் புற்றுநோயால் பாதித்த 10 பேருக்கு மருத்துவ உதவி செய்ய திட்டமிட்டுள்ளார். சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த இசை ஆல்பத்தை மகேஷ் இயக்கி இருக்கிறார். அபிரஜிலால் - ஜெயன் இணைந்து இணை அமைத்துள்ளனர். அருண் நந்தகுமார் நடன காட்சிகளை அமைத்து இருக்கிறார்.