புளூட்டோவை மீண்டும் கிரகமாக அங்கீகரிக்க கோரிக்கை!

March 21, 2017

புளூட்டோவை மீண்டும் கிரகமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

கடந்த 1930-ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட பிறகு, சூரிய குடும்பத்தில் ஒன்பதாவது கிரகமாக புளூட்டோ கருதப்பட்டு வந்தது. 

இந்த நிலையில், அதைவிட 27 சதவீத அளவு பெரிய கோளான எரிஸ், சூரிய குடும்பத்தையடுத்துள்ள பகுதியில் இருப்பதை 1992-இல் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். 

இதையடுத்து, கிரகம் என்றால் என்ன என்பதற்குப் புதிய விளக்கத்தை சர்வதேச விண்வெளி விஞ்ஞானிகள் அமைப்பு வெளியிட்டது. 

கிரகத்தைச் சுற்றி வரும் துணைக்கோள், கிரகம் சூரியனைச் சுற்றி வரும் பாதை உள்ளிட்டவை தொடர்பான விளக்கமும் வெளியிடப்பட்டது. அதன்படி புளூட்டோ முழு அளவிலான கிரகம் அல்ல என்று விஞ்ஞானிகள் 2006-இல் அறிவித்தனர். 

இந்த நிலையில், அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் புளூட்டோவை மீண்டும் கிரகமாக அங்கீகரிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர். 

சுயமாக ஈர்ப்பு விசையுள்ள, சூரியன் மற்றும் அடுத்துள்ள கிரகத்தின் ஈர்ப்புக்கு உள்ளாகிற, உருண்டையான வடிவத்தில் சூரியனைச் சுற்றி வரும் கோள்களை கிரகம் என்று அறிவிக்க வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர். 

ஆனால் அந்த விளக்கத்தின்படி, சூரிய குடும்பத்தில் தற்போதைய 8 கிரகங்களுக்கு பதிலாக 10 கிரகங்கள் இருப்பதாக கூற வேண்டி வரும் என்று வேறு சிலர் சுட்டிக் காட்டியுள்ளனர்.

செய்திகள்