பூகம்பம் தாங்கும் Anti-Earthquake Bed

சனி சனவரி 30, 2016

சீனாவின் தென் மேற்குப் பகுதியான சிஜூவான் மாகாணத்தில் 2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட மோசமான பூகம்பம் எமக்கு நினைவில் இருக்கலாம். இந்த இயற்கைப் பேரிடரால் 87,000ற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்.

அதுபோல, சீனாவின் வடமேற்குப் பகுதியான கின்காய் மாகாணமும் 2010 ஆம் ஆண்டு பூகம்பப் பாதிப்பிற்கு உள்ளானது. இதிலும் கிட்டத்தட்ட 3000 பேர் உயிரிழந்தனர்.

பூகம்ப அதிர்ச்சியை முன்கூட்டியே அறியும் கருவிகள் இருந்தும் அதன் பாதிப்பில் இருந்து மக்களைப் பாதுகாப்பது கடினமாகத்தான் இருந்து வருகிறது.

இதைக் கவனித்த வாங்வேன்சி என்னும் சீனர் இந்தப் பாதிப்புகளிலிருந்து மக்களைக் காக்க ஒரு சாதனத்தைக் கண்டுபிடிக்க உறுதிபூண்டார். அதற்கான விளைவுதான் ஆன்டி எர்த்க்வேக் பெட் (Anti-Earthquake Bed).

வழக்கமான படுக்கையைப் போன்றதே இந்தப் படுக்கையும். ஆனால், மெத்தையைத் தவிர மற்ற பாகங்கள் முழுவதும் இரும்பினால் செய்யப்பட்டது.

பூகம்ப அதிர்ச்சி ஏற்பட்டதும் இந்த இரும்புப் படுக்கையில் உள்ள ஸ்பிரிங் விலகி உள்ளே உங்களைத் தள்ளிவிடும். பிறகு கதவுபோலத் தானாக மூடிக்கொள்ளும். இப்போது இரும்புப் பெட்டிக்குள் நீங்கள் பத்திரமாக விழுவீர்கள். படுக்கையில் உள்ளே மெத்தையுடன் உள்ளே விழுவதால் அடிபட வாய்ப்பு இல்லை. மேலும் திடமான இரும்புப் பெட்டியாக இருப்பதால் பூகம்பத்தால் கூரைச் சுவர் இடிந்து வீழ்ந்தாலும் பாதிக்கப்பட வாய்ப்பில்லை.

இந்த எந்திரத்தை வாங்வேன்சி 2010 இல் கண்டுபிடித்தார். முதலில் சோதனை முயற்சியில் சில தோல்விகள் அவருக்கு ஏற்பட்டன. படுக்கையில் விலகிப் படுத்தால் பாதிப்பு இருக்குமா என்பது போன்ற சந்தேகங்கள் எழுந்தன.

மேலும், உள்ளுக்குள் அகப்பட்டிருக்கும்போது மீட்க வருபவர்களுக்கு சமிக்ஞை காட்ட வேண்டும். மீட்பதற்குச் பல மணி நேரமோ நாட்களோ ஆக வாய்ப்புள்ளது. அதுவரை உள்ளே இருப்பவர்களுக்கு உணவு வேண்டும் அல்லவா?

இம்மாதிரியான சில குறைபாடுகளைப் பின்னர் நீக்கினார். உள்ளே சுவாசிப்பதற்குத் தேவையான சாதனங்கள், உணவுப் பொருள்களையும், தண்ணீர்க் குடுவைகளையும் வைத்தார். மேலும் மீட்புப் பணியில் இருப்பவர்களின் கவனத்தை ஈர்க்க விசிலையும் அந்தப் படுக்கையின் கீழ் தளத்தில் வைத்தார். இப்போது இந்த ஆன்டி எர்த்க்வேக் பெட் முழுமையான வடிவமைப்புடன் சீனாவில் விற்பனைக்கு வந்துள்ளது.