பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து அகில இந்திய பொது வேலை நிறுத்தம் மறுமலர்ச்சி தி.மு.க. ஆதரவு

Sunday September 09, 2018

பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த நான்கரை ஆண்டுகளாக பெட்ரோலியப் பொருட்களின் விலை விண்ணைத் தொடும் வகையில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கடந்த 16 நாட்களில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை ரூ.2.40 காசுகள் ஆகவும் உயர்த்தப்பட்டு, பெட்ரோல் விலை ரூ.84.62 காசுகள் ஆகவும், டீசல் விலை ரூ.75.48 காசுகள் ஆகவும் உச்சத்தை தொட்டு இருக்கின்றது.

பன்னாட்டுச் சந்iயில் கச்சா எண்ணெய் விலை உயர்வதை பா.ஜ.க. அரசு காரணம் கூறுவதை ஏற்கவே முடியாது. ஏனெனில் 2014 மே மாதம் மோடி அரசு பொறுப்பு ஏற்ற நேரத்தில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 109.05 டாலர் ஆக இருந்தது. தற்போது கச்சா எண்ணெய் விலை 85 டாலர் அளவில்தான் உள்ளது.

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த நான்கரை ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை தாறுமாறாக உயர்த்தியதுதான் விலை உயர்வுக்குக் காரணம் என்பதை மறைக்க முயற்சிக்கிறது.
2014 மே மாதம் பெட்ரோல் மீதான உற்பத்தி வரி ரூ.9.20 காசுகள், டீசல் மீதான உற்பத்தி வரி ரூ.3.46 காசுகள். தற்போது 2018 செப்டம்பரில் பெட்ரோல் மீது உற்பத்தி வரி ரூ.19.48 காசுகள், டீசல் மீதான உற்பத்தி வரி ரூ.15.33 காசுகள் அளவுக்கு உயர்த்தப்பட்டு இருக்கின்றது.

2014 இல் மோடி அரசு பதவி ஏற்றபின்னர், பெட்ரோல், டீசல் மீதான வரிகளின் மூலம் மட்டுமே சுமார் பதினொரு இலட்சம் கோடி ரூபாயை வருவாயாக ஈட்டி இருக்கின்றது. இது வரலாறு காணாத பகல் கொள்ளை அல்லவா?

தமிழக அரசும் தனது பங்குக்கு பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை பெட்ரோலுக்கு 34ரூ, டீசலுக்கு 25ரூ என்று உயர்த்திவிட்டது.

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. இதனால் விலைவாசி உயர்வும் மக்களை வாட்டி வதைக்கிறது.

இந்நிலையில்தான் செப்டம்பர் 10 ஆம் தேதி இந்தியா முழுவதும் பொது வேலை நிறுத்தத்துக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இந்தப் பொதுவேலை நிறுத்தத்திற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரவு வழங்குகிறது.

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வலியுறுத்தி செப்டம்பர் 10 இல் நடைபெற உள்ள அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தை தமிழ்நாட்டில் வணிகப் பெருமக்களும், அரசு ஊழியர்கள், தொழிலாளர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஆதரித்து வெற்றி பெறச் செய்திட வலியுறுத்துகிறேன்.

‘தாயகம்’                                                                    வைகோ
சென்னை - 8                                                             பொதுச்செயலாளர்
08.09.2018                                                                   மறுமலர்ச்சி தி.மு.க.