பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது?

Saturday April 21, 2018

பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளதாக நடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூரை சேர்ந்தவர் இயக்குநர்  ராஜகுமாரன். இவர் நடிகை தேவயானியை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் கோடை விடுமுறையை கழிக்க நடிகை தேவயானி கணவர் மற்றும் குழந்தைகளுடன் அந்தியூரில் உள்ள பண்ணை வீட்டுக்கு வந்துள்ளார்.

நடிகை தேவயானி மாலைமலர் நிருபருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் தற்போது எழுமின், களவாணி மாப்பிள்ளை ஆகிய 2 படங்களில் நடித்து வருகிறேன். கலவாணி மாப்பிள்ளை காமெடி கலந்த குடும்ப படம். இதில் ஆனந்தராஜ், அட்டகத்தி தினேஷ் மற்றும் புதுமுகங்கள் நடிக்கிறார்கள். எழுமின் படத்தில் விவேக்குடன் இணைந்து நடிக்கிறேன்.

தற்போது டி.வி. சீரியல்களில் நடிக்கவில்லை. கோலங்கள் சீரியல் மாதிரி கதை வந்தால் மட்டுமே நடிப்பேன். கோலங்கள் தொடரில் ‘அபி’ என்ற எனது கேரக்டர் மக்கள் மனதில் நன்கு பதிந்துள்ளது. நான் எங்கு சென்றாலும் என்னை அபி என்றே அழைக்கிறார்கள்.

நான் மும்பையில் படிக்கும்போது 5 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்தே சென்று படித்து வந்தேன். அப்போது இருந்த பாதுகாப்பு இப்போது இல்லை. பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளது.

அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். யார் ஆட்சிக்கு வந்தாலும் சரி. நல்ல பாதுகாப்பான பெண் குழந்தைகளுக்கு, பெண்களுக்கு பாதுகாப்பான ஆட்சியை வழங்க வேண்டும். இவ்வாறு நடிகை தேவயானி கூறினார்.