பெ.மணியரசன் தாக்கப்பட்டதுகுறித்து முதல்வர் விளக்கம்!

Monday June 11, 2018

காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசனைத் தாக்கியவர்களைப் பிடிக்க, மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் இன்று தெரிவித்தார்.

தஞ்சாவூரில், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசனிடம் வழிப்பறி செய்த சம்பவம்குறித்து சட்டப்பேரவையில் முதல்வர் இன்று விளக்கம் அளித்தார். அப்போது, தமிழ் தேசிய பேரியக்கத் தலைவரும், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான பெ.மணியரசன், நேற்று (10.6.2018) இரவு, சென்னை செல்வதற்காக தஞ்சாவூர் ரயில் நிலையத்திற்குத் தனது நண்பர் சீனிவாசன் என்பவரின் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றுள்ளார்.

இரவு சுமார் 9 மணியளவில், வல்லம் சாலையிலுள்ள உணவுக் கிடங்கு அருகே அவர்கள் சென்றுகொண்டிருந்தபோது, மற்றொரு இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள், மணியரசன் சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனத்தின்மீது மோதியதில், அவர் தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதைப் பயன்படுத்தி, அவரிடம் இருந்த கைப்பை ஒன்றைப் பறித்துக்கொண்டு அவர்கள் தப்பிச்சென்றுவிட்டனர்.

கீழே விழுந்த மணியரசன் காயமடைந்ததால், அவர் உடனடியாக தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அடையாளம் தெரியாத நபர்கள் பறித்துச்சென்ற மணியரசனின் கைப் பையில் 700 ரூபாயும், இரண்டு ஏ.டி.எம் அட்டைகள், பான் கார்டு, கையடக்க கணினி, கைப்பேசி  ஆகியவை இருந்துள்ளன. இதுதொடர்பாக, தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்தில் மணியரசன் அளித்த புகாரின் பேரில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இவ்வழக்கில், எதிரிகளைக் கண்டுபிடித்துக் கைதுசெய்ய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. சம்பவ இடத்தின் அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிப் பதிவுகளைத் தனிப்படையினர் ஆய்வு செய்துவருகின்றனர். எதிரிகள் விரைவில் கைதுசெய்யப்பட்டு, அவர்கள்மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.