பெருந்தலைவரின் அன்னை பார்வதியின் பிறந்த நாள் இன்று: ஈழத்தமிழர்கள் கொண்டாட்டம்!

செவ்வாய் ஓகஸ்ட் 07, 2018

தமிழினத்திற்கு முகமும், முகவரியும் தந்த தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை ஈன்றெடுத்த அன்னை பார்வதியின் பிறந்த நாளை தமிழீழ தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் உள்ள ஈழத்தமிழர்கள் வெகு குதூகலமாகக் கட்டிகை வெட்டியும், இனிப்புப் பண்டங்கள் பகிர்ந்தும் கொண்டாடி வருகின்றனர்.

07.08.1931 அன்று தமிழீழ மண்ணில் பிறந்த அன்னை பார்வதி, 27.11.1954 அன்று தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களை ஈன்றெடுத்தார்.

தமிழீழத் தேசியத் தலைவரின் ஆதர்ச ஒளியாகத் தனது இறுதி மூச்சுவரை திகழ்ந்த அன்னை பார்வதி, 17.10.2010 அன்று மருத்துவ சிகிச்சைக்காகத் தமிழ்நாடு சென்ற பொழுது இந்திய மத்திய அரசாங்கத்தால் நுழைவனுமதி மறுக்கப்பட்டு நாடுகடத்தப்பட்டார்.

அப்பொழுது தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும், இந்திய மத்திய அரசாங்கத்தில் பங்காளியாகவும் மறைந்த கலைஞர் முத்துவேலர் கருணாநிதி விளங்கிய பொழுதும், அன்னையின் நாடுகடத்தலைத் தடுத்து நிறுத்துவதற்கோ, அன்றி அன்னையைத் தமிழகத்திற்குள் மீள அழைப்பதற்கோ அவர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஏற்கனவே இறுதிப் போரில் உண்ணாநோன்பு நாடகம் அரங்கேற்றி ஈழத்தமிழர்களை ஏமாற்றி 146,679 ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதற்கும், காணாமல் போகச் செய்யப்படுவதற்கும் கண்மூடி ஒப்புதல் வழங்கியவர் என்ற பழிக்கு ஆளாகிய கருணாநிதி, அன்னை பார்வதி அவர்கள் தமிழகத்திற்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட விடயத்திலும் ஈழத்தமிழர்களின் அதிருப்தியை சந்தித்துக் கொண்டார்.