பெரும்பான்மை விருப்பினை மீறி மைத்திரியால் செயற்பட முடியாது!

வியாழன் டிசம்பர் 06, 2018

அரசியல் நெருக்கடிக்கு நிரந்தர தீர்வினை பெற்றுக்கொடுக்க கோரும் வகையில் ஐக்கிய தேசிய கட்சியால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணை பெரும்பான்மைக்கு சாதகமாகவே அமையும். பெரும்பான்மை விருப்பினை மீறி சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவால் செயற்பட முடியாது. 

அதேபோன்று ஜனாதிபதியின் தீர்மானங்களுக்கு ஏற்றவாறு அரசியலமைப்பினை மீறி நாடாளுமன்ற உருப்பினர்களாளும் பணியாற்ற முடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார். 

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜயபால எட்டியாராச்சி,அர்ஷன ராஜகருணா, மயந்த திஸாநாயக்க, முஜிபோர் ரஹ்மான், அஜித் மன்னபெரும, ஜயம்பதி விக்ரமரத்ன மற்றும் ஹிருனிகா பிரேமசந்ர உள்ளிட்டோர் நேற்று நாடாளுமன்றத்தில் பிரேரணையொன்றினை சமர்ப்பிக்க தீர்மானித்திருந்தனர். 

குறித்த பிரேரணையில் கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கியது முதல் ஏற்றுக்கொள்ள முடியாது. 

ஆகவே மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவர் தலைமையிலான அமைச்சரவைக்கும் எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையினூடான அரசாங்கம் கவிழ்க்கப்பட்டுள்ளது. 

இந்நிலை சிறிலங்கா  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனநாயக ரீதியான அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுக்க கோரியே அந்ந பிரேரணை சமர்ப்பிக்கப்படவிருந்தது. 

ஆனால் பின்னர் அந்த பிரேரணையை இன்னுமொரு தினத்தில் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது. 

ஐக்கிய தேசிய கட்சியால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள இந்த பிரேரணை தொடர்பில் விளக்கமளிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.