பெரும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார் அற்புதம்மாள்!

Sunday September 09, 2018

பெரும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார் அற்புதம்மாள். கடந்த 27 ஆண்டுகளாக சிறை வாழ்வை அனுபவித்து 28-வது ஆண்டாகவும் அதனை தொடர்ந்து கொண்டிருக்கும் தன் மகன் பேரறிவாளனை விடுதலை செய்யாமல் இருப்பதற்கு யாராலும் இனி எந்த காரணமும் கூற முடியாது என தீர்க்கமாக நம்புகிறார். தன் மகனின் விடுதலை குறித்து வரும் எதிர்மறை கருத்துகளை அவர் மென்மையாக புறந்தள்ளுகிறார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசே முடிவு எடுத்துக் கொள்ளலாம், அதற்கு தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது, எனவே இதுதொடர்பாக அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு பரிந்துரைக்கலாம் என உச்ச நீதிமன்றம் கடந்த 6 ஆம் தேதி உத்தரவிட்டது. தீர்ப்பின் நகல் 8 -ம் தேதி வெளியானது.

உச்ச நீதிமன்றம் உத்தரவின்படி தன் மகன் விரைவிலேயே விடுதலையாகி விடுவான் என்ற நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கும் அற்புதம்மாளை தொடர்பு கொண்டோம்.

வார்த்தைகளில் விவரிக்க முடியாத மகிழ்ச்சியில் அவர் இருக்கிறார் என அவரது குரலிலேயே தெரிந்தது. அவர் நம்முடன் பகிர்ந்து கொண்ட தகவல்கள்:

”உச்ச நீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. இனி இந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது என யாரும் காரணம் சொல்ல முடியாது. பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுவிக்க ஆளுநருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. அதற்கு கால நிர்ணயம் ஏதும் இருக்கிறதா என ஒன்னும் விளங்கல.

ஆளாளுக்கு ஒன்னொன்னு சொல்றாங்க. நமக்கு ஒன்னும் புரியல. அதனால குழப்பமா இருக்கு. உத்தரவு நகல் இப்போதுதான் வந்திருக்கிறது. அதனடிப்படையில் முதல்வரை நேரில் சந்தித்து என் கோரிக்கையை வலியுறுத்துவேன். அது என் கடமை. இந்த நடைமுறைகளையெல்லாம் மீறி உச்ச நீதிமன்றமே சொன்ன பிறகு அதனை மீறுவதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது.

அதனால் அறிவு விடுதலையாவான் என எல்லோரும் நம்பிக்கையா இருக்கோம். எங்க நம்பிக்கை உண்மையாகனும். 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கின்றான். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொன்னதுக்குப் பிறகு வெளியில் வந்திருந்தாலே என் மகன் வெளியில் வந்து 4 ஆண்டுகள் ஆகியிருக்கும்” என்கிறார் அற்புதம்மாள்.

தமிழக அமைச்சரவை கூடி தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு பரிந்துரைத்தால் அதை கண்டிப்பாக ஆளுநர் ஏற்றுக்கொண்டு விடுதலை செய்ய வேண்டும். இதற்கு அவருக்கு முழு அதிகாரம் உள்ளது. அதைத்தாண்டி அவர் இந்த விஷயத்தில் மத்திய அரசிடம் ஒப்புதல் கேட்க வேண்டிய அவசியமில்லை என்பதே சட்ட நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

“சட்ட நிபுணர்கள் சொல்வது போன்று சீக்கிரம் என் மகன் என்னுடன் வந்துவிட வேண்டும் என்றுதான் நான் ஏங்கிக் கொண்டிருக்கிறேன். எல்லாருக்கும் காலம் கடந்துகொண்டே இருக்கிறது. 28 ஆண்டுகள் சிறை என்பது சாதாரணம் இல்லை. தமிழக அரசு இதனை விரைந்து கையிலெடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைத்தான் நான் எதிர்பார்க்கிறேன்” என்பதுதான் அற்புதம்மாளின் 28 ஆண்டு கால கோரிக்கையாக இருக்கிறது.

“உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி மாநில அரசுக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில் தூக்கு ரத்து செய்யப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட ஏழு பேரையும் உடனே விடுதலை செய்ய அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது என அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்து நான்கு ஆண்டு காலம் கடந்துவிட்டது. ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்துவதாக கூறும் அதிமுக அரசு தாமதம் இல்லாமல் ஏழு பேரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறார் அற்புதம்மாள்.

“அம்மா ஆட்சி நடத்துறோம்னு சொல்றாங்க. ஜெயலலிதா இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என இரண்டு முறை முயற்சி எடுத்தாங்க. இரண்டு தடவையும் மத்திய அரசு தடுத்தது. அம்மாவின் கனவை நிறைவேற்றுகிறோம் என்று சொல்பவர்கள் அவர் நிறைவேற்றிய சட்டப்பேரவை தீர்மானத்துக்கு மரியாதை கொடுக்க வேண்டும். தாமதம் இல்லாமல் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினால் இவர்கள் விடுதலையாவதில் தடையில்லை தானே”, என்று எதிர்பார்ப்புடன் கேட்கிறார் அற்புதம்மாள்.

உடல் நலம் குன்றிய தன் தந்தையை காண்பதற்காக கடந்தாண்டு பேரறிவாளனுக்கு செப்டம்பர் மாத வாக்கில் 60 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது. அப்போது, பேரறிவாளனும் தங்கள் குடும்பமும் எப்படி சந்தோஷமாக இருந்தோம் என்பதையும் அற்புதம்மாள் பகிர்ந்துகொண்டார்.