பேட் மேன்' படம் இன்று திரைக்கு வருகிறது!

வெள்ளி பெப்ரவரி 09, 2018

சானிடரி நாப்கின் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய நாப்கின் நாயகனான தமிழகத்தைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தமின் வாழ்க்கையை மையப்படுத்திய `பேட் மேன்' படம் இன்று திரைக்கு வருகிறது.

வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து, அதை மக்களிடம் கொண்டு சேர்க்க முயற்சி செய்யும் நடிகர்களுள் ஒருவர் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார். 

அவரது நடிப்பில் உருவாகியிருக்கும் `பேட் மேன்' படம் உலகமெங்கும் இன்று முதல் ரிலீசாகிறது. பெண்கள் பயன்படுத்தும் சானிடரி நாப்கின் தொடர்பாக சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த படம் உருவாகி இருக்கிறது. 

குறைந்த விலையில் பெண்களுக்கு சானிடரி நாப்கினை தயாரித்துக் கொடுத்து, சிறந்த சமூக ஆர்வலராக வலம் வரும் கோயம்புத்தூரை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தமின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த படம் உருவாகி இருக்கிறது. ஆர்.பால்கி இயக்கியிருக்கும் இந்த படத்தில் அக்‌ஷய் குமாருடன் ராதிகா ஆப்தே, சோனம் கபூர், சுதீர் பாண்டே, மாயா அழக் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். 

கடந்த வாரம் முழுவதும் சானிடரி நாப்கின் குறித்து விளம்பரப்படுத்தும் விதமாக படக்குழுவினர் சமூக வலைதளங்களில் பிரபலங்களுக்கு சவால் போட்டி  நடத்தி வந்தனர்.  இதையடுத்து இந்த படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

அக்‌ஷய் குமார் இதற்கு முன்பாக கழிவறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக `டாய்லெட்' படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.