பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க வேண்டும்!

புதன் நவம்பர் 28, 2018

தந்தை பெரியார் மற்றும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் ஆகியோரின் நினைவு நாளான டிசம்பர் 24-ந்திகதி பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க வேண்டும் என்று நடிகர் சத்யராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். 

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் விழா மேடவாக்கத்தில் உள்ள தனியார் தொடக்கப்பள்ளி ஒன்றில் கொண்டாடப்பட்டது.

நடிகர் சத்யராஜ் கலந்துகொண்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்குக் கல்வி உதவிகளை வழங்கினார். பின்னர் அங்குள்ள குழந்தைகளுடன் சிலம்பம் சுற்றி மகிழ்ந்தார்.

நிகழ்ச்சிக்கு பின் சத்யராஜ் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

தந்தை பெரியார் மற்றும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் ஆகியோரின் நினைவு நாளான டிசம்பர் 24-ந்தேதி பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க வேண்டும். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தொடர்ந்து, தற்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் இதற்கான முயற்சிகளை செய்து வருகிறார்கள்.

அதை கூடிய விரைவில் நிறைவேற்ற வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். ஒரு சாதாரண மனிதனாக எனது உணர்வுகளை இந்த அரசுக்கு கோரிக்கையாக வைக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.