பேருந்து ஒன்றுக்கு தீ வைத்து எரிப்பு!

செவ்வாய் ஏப்ரல் 17, 2018

கொழும்பு - மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் வாழைச்சேனைப் காவல் துறை  பிரிவிலுள்ள, புணானை காட்டுப்  பகுதியில் வைத்து, பேருந்து ஒன்றுக்கு தீ வைத்து எரித்துள்ளதாகப் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் (16) இரவு 9.30 மணியளவில், புணானை  காவல் துறை சாவடியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்திலுள்ள காட்டுப்பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பொலன்னறுவையில் இருந்து கல்முனை நோக்கி சென்றுகொண்டிருந்த குறித்த பேருந்தை, இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பின் தொடர்ந்து வந்த நால்வர், பேருந்து தீயிட்டுக் கொளுத்தி தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்து  தீவைக்கப்பட்ட பொழுது பேருந்திலிருந்து சாரதியும் அதன் உரிமையாளருமான மாதங்கொட்ட, மன்னம்பிட்டியைச் சேர்ந்த, 30 வயதுடைய எச்.ஏ. சோமசிறி சாமர புஸ்பகுமார மற்றும் அவரது உதவியாளரும் நடத்துநருமான வாழைச்சேனையைச் சேர்ந்த, 25 வயதுடைய எம். முஹம்மத் ஆகியோர் சிறிய காயங்களுடன் வாழைச்சேனை தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனைப்  காவல் துறை மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.