பொங்கலோ பொங்கல்!

Sunday January 14, 2018

எல்லா திக்குகளிலும்
பொங்கல்
ஒரே மாதிரியாகவே இனிக்கிறது.

ஆனாலும்

என்
கிராமத்து வீட்டுப் பொங்கலில் 
பொங்கிய ஆனந்தத்தை
மீண்டும் கண்டதேயில்லை
அடிமனசு.

அது ஒரு காலத்தின் நாள்.

சாணமிட்டு மெழுகிக் காய்ந்த
பச்சை முற்றம்.

உலக்கை வைத்து கோடிழுத்த
கோல எல்லை.

நெல்பரப்பி கும்பம் தாங்கும்
தலை வாழை இலை.

கூம்பாக்கி செய்து வைத்த
பிள்ளையார் சாணம்.

பனி சிலுப்பிப் பிடுங்கி நட்ட
அறுகம்புல் தளைகள்.

மாவிலைகள் விரித்த கும்பம்.

மஞ்சள் தடவிய முடித் தேங்காய்.

அதன் கொண்டையில்
ஒர் ஒற்றை ரோசா.

தலை சீவிய இளநீர்.

கறுப்பு கால்கள் வெட்டப்பட்ட
பழுத்த வாழைப்பழங்கள்.

அதன் வயிற்றில் குற்றிவைத்து
தணலெரிய விட்ட ஊதுபத்திகள்.

நரம்போடும் அகன்ற வெற்றிலைகள்.

அதில் உருண்டு விளையாடும்
தும்பற்ற கொட்டைப் பாக்குகள்.

வீபூதி பரவிய தட்டம்.

சந்தணம் கரைந்த கும்பம்.

குங்குமம் நிறைந்த சிமிழ்.

சாணம் மெழுகிய அடுப்புக் கற்கள்.

பட்டையும் பொட்டுமிட்ட புதுப்பானை.

வேட்டி கட்டிய அப்பாவின் வெற்று மார்பு.

ஈரம் சொட்டும் அம்மாவின் தலை.

கிலுங்கித் திரியும் அக்காவின் காற்கொலுசு.

புதுச்சட்டை போட்டு வரும் தங்கை.

வானொலியில் முழங்கும் மேளக் கச்சேரி.

பட்டாசு கொழுத்தத் தயாராகும் அண்ணா

பன்னாடைகளும்
தென்னைமட்டைகளும் 
தீ மூட்டும் அடுப்பில்
கறுப்பாகி கரியாகும் சிவப்புப் பானை.

அதன் கழுத்தில்
வாடி வதங்கும் மஞ்சள் மரம்.

சாம்பல் துகள்களை சுமந்தபடி
பொங்கிவரும் பால்நுரையை
சூரியத் திசையில் சரிய வைக்கும்
அப்பாவின் அகப்பை நுட்பம்.

மூன்று தடவை பானையை சுற்றிக் கொண்டு
உலையிடும் அரிசிக் கைகள்.

சூரியனை கையுயர்த்தி தொழும் அப்பா.

அவரைப் பின்பற்றும் பிள்ளைகள்.

கறுப்பு நதியாகிக் கரைந்து ஊற்றும்
சர்க்கரைக் கூழ்.

இறுதியாய் தூவப்படும் முந்திரிகை வற்றல்கள்.

காற்றில் மிதக்கத் தொடங்கும்
ஏலக்காய் வாசம்.

இறுகிவரும் சர்க்கரைப் பொங்கல்.

நீண்ட தலையிலையில் பரப்பும் படையல்

மேல் அழுத்தி வைக்கும் உரித்த வாழைப்பழம்.

இலையின் நுனியில் கொழுத்தும் கற்பூரம்.

பிளந்து வைத்த கரும்புத் துண்டு.

வெட்டி வைத்த சில பழத் துண்டுகள்.

சில செவ்வரத்தம் பூக்கள்.

கொஞ்ச நத்தியாவட்டம் பூக்கள்.

‘‘வருவாய் வருவாய் சூரியனே‘‘ உடன்
தொடங்கும் ஐயர் யாருமற்ற பூசை.

அக்காவின் தேவாரம்.

வாழையிலைகளில் கையேந்தும் பொங்கல்.

சுடச்சுட தித்திக்கும் அமுதத்தின் மகிழ்ச்சி.

ம்ம்.

பொங்கலோ பொங்கல்.

தீபிகா