பொங்கு தமிழ்ப்பேரணியும், ஒன்று கூடலும்!

Monday August 20, 2018

தமிழின அழிப்பிற்கு நீதி கோரி ஜெனீவா ஐ.நா மனிவுரிமைகள் செயலகம் நோக்கிய பொங்கு தமிழ்ப்பேரணியும், ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில்  ஒன்று கூடலும் 17.09.2018 திங்கட்கிழமை

அன்பான பிரான்சு வாழ் தமிழீழ மக்களே! எம் இளையோர் சமூகமே !   
        
கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக ஈழத்தமிழர்களுக்கு   பௌத்த சிங்களப் பேரினவாத அரசானது செய்து வரும் மனிதகுலத்திற்கு எதிரான கொடுமைகள் ஒன்று இரண்டல்ல.  எம்மக்கள் அதற்கு முகம் கொடுத்து சொல்லெணாத் துன்பங்களைச் சுமந்து , இன்று  அறவழியில்  சொந்த மண்ணில் துணிந்து  போராடி வருகின்றனர். இதனால்   பன்னாட்டின் உற்று நோக்குதலுக்கும், கேள்விக்கும் உள்ளாவதை பொறுக்க முடியாத சிங்கள அரசு தனது அதிகாரப்பலத்தை தமிழ்மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தில் பிரயோகித்து வருகின்றது. கடற்தொழில், விவசாயம், சுயமான தொழில் முயற்சிகள் என்பன முடக்கப்படுவதோடு,  நடமாட்டச் சுதந்திரமும் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. 

போதைப் பொருள் பாவனை, பாலுணர்வைத் தூண்டும்  மருந்துப் பாவனைகள் மற்றும் வாள்வெட்டு ஆயுதக் கலாச்சாரத்தையும் உருவாக்குதல்  என்பன போன்ற சமூகச் சிதைவுகளை திட்டமிட்டுச்  சிங்கள அரசு மேற்கொண்டு வருகின்றது.  காவல்துறையும்  இராணுவமும்,  சிங்கள அரசியல் வாதிகளும் கௌதம புத்தரின் போதனைகளை பின்பற்றுவதாகக் கூறும் பிக்குகளும் அரசின் இவ்வாறான கட்டமைக்கப்பட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். 

இது ஒரு புறமிருக்க, புலம்பெயர் நாடுகளிலிருந்து தமது மண்ணையும் உறவுகளையும் பார்க்கச் செல்பவர்களை வரவேற்பது போல பாசாங்கு செய்வதும் எமது கலை பண்பாட்டு விழாக்களில் கலந்து கொண்டு நல்லுறவு நிலவுவது போலக் காட்டிக்கொண்டு எம்மை அழிக்கும் கைங்கரியங்களில் அரசும் ஆயுதப் படைகளும் ஈடுபட்டு வருகிறது. இது போன்ற சூட்சும  ‘’தேர் இழுத்தல்களை’’  எமது உறவுகள் விழிப்புடன் விளங்கிக் கொண்டவர்களாக இருத்தல் வேண்டும்.இதற்குச் சில ஊடகங்களும் நல்லிணக்கச் சாயம் பூசி, அரசின் ஊதுகுழலாக செயற்படுவது மிகுந்த மனவேதனையைத் தருகிறது.

இச்சூழலில் புலம்பெயர் தமிழீழ மக்களாகிய நாம், நடந்தேறிய தமிழினப்படுகொலைக்கு எமது அனைத்துக் கட்டமைப்புகளின் மூலமாக வெளிப்படையான பன்னாட்டு விசாரணையை வலுயுறுத்தியும் தமிழீழ தனியரசிற்கு ஒப்புதல் அளிக்கக் கோரியும்  பொங்கு தமிழ் எழிச்சிப் பேரணி மூலம் உலகிற்கு ஓங்கியுரைக்க வேண்டியவர்களாகவுள்ளோம்.

தியாக தீபம் திலீபனின் நினைவுகளை நெஞ்சில் சுமந்து,  எதிர்வரும் செப்டம்பர் மாதம் 17ம் நாளில் ஐ.நா மனித உரிமைகள் செயலகம்  நோக்கிய பேரணியும்  முருகதாசன் திடலில் நடைபெறவுள்ள ஒன்று கூடலும் சமகாலத்தின் முக்கிய நிகழ்வாக அமையப்போகின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய ஆணையாளராக சிலி நாட்டின் முன்னாள் சனாதிபதி மிசெல் பாச்செலெட் பதவியேற்கவுள்ள நிலையிலும் தற்போதைய ஆணையாளர் செய்யித்ராத் அல்க்செயின் மற்றும் அதற்கு முன்னிருந்த ஆணையாளர் திருமதி நவநீதன்பிள்ளை அவர்களும் சிறிலங்கா அரசு மீது மேற்கொண்ட தீர்மானங்களை பதவியேற்கவுள்ள புதிய ஆணையாளர்  உறுதியாக இருந்து செயற்படுத்த வேண்டியதைத் தமிழீழத் தாயகத்து மக்களும் புலம்பெயர்ந்து வாழும் தமிழீழ மக்களும் இணைந்து வலியுறுத்த வேண்டிய காலம் இதுவாகும்.

இப்பேரணிக்கு வலுச்சேர்க்கும் வகையில் பிரித்தானியா, நெதர்லாந்து,பெல்ஜியம்,ஜேர்மனி, பிரான்சு போன்ற நாடுகளில் இருந்து, ஈருருளிக் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளும் உறவுகள், அனைத்துலக நீதிமன்றத்திலும் ,ஐரோப்பிய பாராளுமன்றத்திலும்  நாடாளுமன்றங்களிலும் மாநில, மாநகர முதல்வர்களிடமும் பாராளுமன்ற ,நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் எமது கோரிக்கைகளை முன்வைக்கவுள்ளனர்.

சமகாலத்தில், முதற்றடவையாகப் பிரான்சு பாரிசிலிருந்தும் ஈருருளிப்பயணத்தை 03.09.2018 ல் பிரஞ்சு நாடாளுமன்றம் முன்பாக ஆரம்பித்து பல்வேறு நகரங்களூடாகச் சென்று ஏனைய  நாட்டு ஈருருளிப் போராட்ட உணர்வாளர்களுடன் இணைந்து  செப்டெம்பர் 11 ம் நாள் 15.00 மணிமுதல் 17.00 மணிவரை ஸ்ராஸ்பூர்க் நகரில் அமைந்துள்ள ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு முன்பாக நடைபெறவுள்ள கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொள்வதோடு,17ம் திகதி ஜெனிவாவை சென்றடையவுமுள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஈருருளி கவனயீர்ப்புப் போராட்டத்தை மேற்கொள்பவர்களுக்கு  அந்தந்த நாடுகளில் வாழும் தமிழ் உறவுகள் தமது பேராதரவை பலவழிகளிலும் வழங்கவிருக்கின்றனர்.

17ம் நாள் திங்கட்கிழமை நடைபெறவுள்ள பேரணிக்கான பேருந்து ஏற்பாடுகள் எம்மால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.இந்தத் தொடர் வரலாற்றுக் கடமையில் இணைய உங்கள் பிரதேசத்தின் பிராங்கோ- தமிழ்ச் சங்கங்களுடனும் எமது பணிமனையுடனும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 அன்பான பிரான்சு வாழ் தமிழீழ மக்களே, தேச விடுதலை உணர்வாளர்களே..!

ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்பாகவும் நாடாளுமன்றங்கள் முன்பாகவும்  நாம்  தொடர்ச்சியாக நீதிக்கான கதவுகளைத் தட்டிக் கொண்டே இருக்கின்றோம். எமது இனத்திற்கு துன்பங்கள் ஏற்படும் போதெல்லாம் நாம் வாழும் நாடுகளிடம் சென்று முறையிட்டுக் கொண்டேயிருக்கின்றோம். தாய் தமிழ்நாட்டில் வீரத்தமிழ் மகன் முத்துக்குமார், தியாகச்சுடர் வீரமங்கை செங்கொடி உட்பட 25 ற்கும் மேற்பட்ட  ஈகைப்பேரொளிகளும், புலத்தில், ஈகைப்பேரொளி முருகதாசன், ஈகைப்பேரொளி செந்தில்க்குமரன் போன்றோரும் தம்மை எரித்து ஆகுதியாக்கிக் கொண்டனர்.  ஐரோப்பிய ஊர்கள் தோறும் கொட்டும் பனியிலும், கொடும் வெயிலிலும் 1200 கிலோ மீற்றர் தூரம் நீதி கோரி நடைபயணம் சென்றோம். ஈருருளி கவனயீர்ப்புப்  போராட்டத்தையும் நடாத்தினோம். எமது இனத்திற்கு காலங்காலமாக இழைக்கப்பட்ட இனவழிப்பை ஐ.நா முருகதாசன் திடலில் நிழற்படக் காட்சிகளாகப் பெரும் நெருக்கடியிலும் இயற்கையின் சீற்றத்திற்கிடையிலும் நடாத்தினோம். தாயகத்திலிருந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களை, நேரடிச்சாட்சிகளாக மனிதவுரிமை ஆணையாளரிடம் முன்னிறுத்தினோம்.

 நமது இனத்திற்காக உண்மையின் பக்கம் நின்று அரசியல்ப் பணியாற்றுகின்றவர்களும் ஆன்மீகத்தைச் சேர்ந்தவர்களும் வைத்தியரகளும், நேரடிச்சாட்சிகளுமென  என பலர் தமது நேரடி வாக்கு மூலத்தினைக் கொடுத்திருந்தனர். அந்த வகையில் எம்மால் முடிந்தவரை உண்மையாகவும், நீதியாகவும், தர்மத்தின் வழி நின்று எமது நியாயமான போராட்டத்தை உலகின் முன் வைக்கின்றோம். ஆனால் எதிரியானவன் பணபலத்தோடு, பன்னாட்டரசுகளைத்  தன்வயமாக்கக்கூடிய பொய்யான பரப்புரைகளையும் செய்து எமக்குப் பல்வேறு முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தினாலும், புலம் பெயர்ந்த தமிழர்களின்  பலத்துடன், நாமும் எமது தமிழர் கட்டமைப்புகளும் தமிழ்நாட்டில் பல்வேறு நெருக்கடிகளைச் சந்திக்கும் தமிழின விடுதலை உணர்வாளர்களும்  தொடர்ந்து ஐ.நாவிலும் குரல்கொடுத்து வருகின்றோம். 

  உலகெங்கும் வாழும் தமிழர்கள், செங்குருதியால் சிவந்துபோன  தமிழீழத் தேசியக்கொடியை ஏற்றியும், கைகளில் தாங்கியும்   போராடி ,  ஐ.நாவில் பறக்கும் பன்னாட்டுக் கொடிகளுடன் எமது கொடியும் அனைத்துலகத்தால் ஏற்றிவைக்கப்பட வேண்டும். இதுவே தமிழராகப் பிறந்த ஒவ்வொருவரின் வாழ்நாள்க் கடமையாகும்.  இக்கடமையை உணர்ந்து உலகப்பந்தில்  வாழும் 14 கோடித் தமிழரும்   பொங்குதமிழராக தொடர்ந்தும் எழுந்து நிற்போம் என உறுதி கொள்வோமாக…..!

“ தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் ’’
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்சு  
   பொங்கு தமிழ் ஏற்பாட்டுக்குழு – பிரான்சு