பொது வேலை நிறுத்தத்தை வெற்றிபெற செய்வோம் - விடுதலைச் சிறுத்தைகள்

Sunday September 09, 2018

பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்குக் காரணமான பாஜக அரசைக் கண்டித்து செப்டம்பர் 10ஆம் தேதி பொது வேலை நிறுத்தத்துக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. அதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆதரிக்கிறோம். பொது வேலை நிறுத்தத்தை வெற்றிபெறச் செய்யுமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறோம்.

பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 85 ரூபாயைத் தாண்டிவிட்டது. டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு 80 ரூபாயை எட்டிக்கொண்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை அந்த அளுவுக்கு உயராத நிலையில்  மக்களைக் கசக்கிப்பிழிந்து பாஜக அரசு பகல் கொள்ளை அடிக்கிறது. வரியை உயர்த்தி லட்சக்கணக்கான கோடி ரூபாய் மக்களிடமிருந்து சுரண்டப்படுகிறது. மத்திய அரசு தனது வரியைக் குறைத்தால் பெட்ரோலை 50ரூபாய்க்கு கொடுக்க முடியும். இந்த மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து காங்கிரஸ் அழைப்பு விடுத்திருக்கும் பொது வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்வது நமது கடமையாகும். எனவே, அமைதியான முறையில் பொது வேலை நிறுத்தத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டுமாய் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறோம்.

வலதுசாரி பயங்கரவாதத்தைக் கண்டித்து 

செப்டம்பர் 10 காலை சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில்  எனது தலைமையில் நடப்பதாக இருந்த ஆர்ப்பாட்டம் அன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் என்று தெரிவித்துக்கொள்கிறோம். அதில் திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

இவண்
தொல்.திருமாவளவன்
நிறுவனர் - தலைவர்,
விசிக.