பொய் சொல்கிறார் மைத்திரி ! - சார்ள்ஸ் நிர்மலநாதன்

Saturday January 13, 2018

வடக்கில் படையினர் வசம் இருந்த 80 வீதமான பொதுமக்களின் காணிகள் அவர்களிடம் மீள கையளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் ஆச்சரியமும் ஏமாற்றமும் அடைந்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் இதனை கூறியுள்ளார். அந்த கடிதத்தில் மேலும், வட மாகாணத்தில் விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் படையினர் கைப்பற்றியுள்ள பொதுமக்களின் குடியிருப்புகள் மற்றும் விவசாய காணிகள் இன்னும் படையினர் வசமே உள்ளன என்பதை தாழ்மையுடன் தெரியப்படுத்துகிறேன். இந்த விவசாய நிலங்களுக்கு சொந்தமான பொதுமக்களில் பலர் தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். வட மாகாணத்தில் பொதுமக்களின் காணிகளில் படையினர் ஆடம்பர ஹோட்டல்களையும் கட்டியுள்ளனர்.

பொதுமக்களின் இந்த காணிகளை விடுவிக்க ஜனாதிபதி தேவையான நடவடிக்கைகளை எடுத்து அதற்கான முனைப்புகளை மேற்கொள்ள வேண்டும். அப்போது இந்த காணிகளுக்குரிய மக்கள் தமது காணிகளில் அமைதியாக வாழ்க்கையை கொண்டு நடத்த முடியும். இதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாக சார்ள்ஸ் நிர்மலநாதன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படையினர் வசம் இருக்கும் பொதுமக்களின் காணிகள் பற்றியும் நிர்மலநாதன் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் பட்டியலிட்டுள்ளார்.