பொருளாதார நெருக்கடியில் இருந்து தமிழகத்தை மீட்க வேண்டும்!

Monday November 13, 2017

வேளாண் உற்பத்தி பாதிப்பு, தொழில்துறைகள் முடக்கம், வேலை வாய்ப்பின்மை போன்றவற்றில் அரசு தீவிர கவனம் செலுத்தி பொருளாதார நெருக்கடியிலிருந்து தமிழகத்தை மீட்க வேண்டும் என்று வைகோ வலியுறுத்தி உள்ளார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் இயங்கி வரும் நிலைமை குறித்து வெளியாகி உள்ள தகவல்கள் பெரும் அதிர்ச்சியைத் தருகின்றன. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சென்னை, விழுப்புரம், மதுரை,  திருநெல்வேலி, கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர் ஆகிய கோட்டங்களாகவும், அரசு விரைப் போக்குவரத்துக் கழகம் என்றும் நிர்வாக வாரியாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்திலும் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் தொழிலாளர்களும், 40 ஆயிரம் அதிகாரிகளும் பணிபுரிகின்றனர். மேலும் 50 ஆயிரம் ஓய்வு பெற்ற ஊழியர்களும் உள்ளனர். தமிழக அரசுப் போக்குவரத்துக் கழங்களுக்குச் சுமார் 23 ஆயிரம் பேருந்துகள் சொந்தமாக உள்ளன. நாள்தோறும் 2 கோடியே 20 இலட்சம் பயணிகள் அரசுப் பேருந்துகளைத்தான் பயன்படுத்தி வருகின்றனர். 

இந்தியா முழுவதும் உள்ள 47 போக்குவரத்துக் கழகங்களை ஒப்பிடும்போது, தமிழகத்தில்தான் மக்களுக்கு அதிக சேவையை அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் வழங்கி வருகிறது. தமிழகத்தின் இன்றியமையாத போக்குவரத்துத்துறை நிர்வாகம் பல வகைகளில் சீரழிக்கப்பட்டு வருவது தொடர்வதால் அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது.

மதுரையைச் சேர்ந்த மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை நிறுவனர் ஹக்கீம், தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடு பற்றி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பல தகவல்களைப் பெற்றுள்ளார். சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் மதுரை மற்றும் கோவை அரசுப் போக்குவரத்துக் கழகக் கோட்டங்கள் அவருக்கு பதில் அளித்துள்ளன. இதிலும் சேலம் கோட்ட நிர்வாகம் தகவல் அளிக்க மறுத்துவிட்டது. 

தமிழகத்தில் எட்டு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில், சென்னை மாநகரம், மதுரை மற்றும் கோவை கோட்டங்கள் பணிமனைகள், நிலம், கட்டடங்கள் போன்றவற்றை வங்கிகளில் அடமானம் வைத்து 2458.88 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ள தகவல் வெளியாகி உள்ளது. அரசுப் பேருந்துகளும் அடகு வைக்கப்பட்டு இருக்கின்றன. இதில் கோவை கோட்டம் 1549.6 கோடி ரூபாய் கடனுக்காக அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை அடமானம் வைத்து முன்னிலையில் உள்ளது.

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் 580.63 கோடி ரூபாயும், மதுரை கோட்டம் 363.82 கோடி ரூபாய்க்கும் அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளன. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்திடமும் சொத்துக்களை அடமானம் வைத்துக் கடன் பெறப்பட்டு இருக்கிறது. போக்குவரத்துத் துறையின் நிர்வாகச் சீரழிவுக்கு இதைவிட வேறு எடுத்துக்காட்டு இருக்க முடியாது. புதிய பேருந்துகள் வாங்குவது, உதிரி பாகங்கள் வாங்குவது உள்ளிட்ட அனைத்திலும் நடைபெற்று வரும் ஊழல்களால் போக்குவரத்துக் கழக நிர்வாகம் புரையோடிப் போய் இருக்கிறது.

கடந்த 2015 - 16 ஆம் ஆண்டில் நாட்டின் பொது போக்குவரத்துச் செயல்பாடுகள் தொடர்பான அறிக்கைகளை மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சகம் கடந்த வாரம் வெளியிட்டது. அதில் நாடு முழுவதும் செயல்படும் போக்குவரத்துத்துறையின் வரவு - செலவுகள், பேருந்து இயக்க செயல்பாடுகள், விபத்துகள், காலாவதியான பேருந்துகளின் எண்ணிக்கை உட்பட பல்வேறு விபரங்கள் விரிவாக இடம்பெற்றுள்ளன. காலாவதியான பேருந்துகள் இயக்குவதில் பீகார் மாநிலம் முதல் இடத்திலும், தமிழ்நாடு இரண்டாவது இடத்திலும் இருக்கின்றன. தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் 78.3 விழுக்காடும், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் 72.71 விழுக்காடும், சேலம் கோட்டத்தில் 66.39 விழுக்காடும் காலாவதியான பேருந்துகள் இயக்கப்படுவதாக அதில் கூறப்பட்டு இருக்கிறது.

நிர்வாகச் சீர்குலைவு, நிதி மானியம் வழங்குவதில் மாநில அரசின் தாமதம், கடன் சுமை, தொழிலாளர்களுக்குச் சேரவேண்டிய வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, விடுப்பு ஊதியம் போன்ற ரூ.6460 கோடியை வழங்காமல் அலைக்கழித்ததால்தான் அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கினர். பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொண்டவாறு தமிழக அரசு இன்னும் நிதி ஒதுக்கீடு செய்யாமல், போக்குவரத்துத் தொழிலாளர்களை வஞ்சிப்பது போன்றவற்றால்தான் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் தள்ளாடுகின்றன.

அரசுப் போக்குவரத்துத்துறை மட்டுமின்றி தமிழக அரசின் ஒட்டுமொத்த நிதி நிலைமையும் மோசமாகி வருகிறது. தமிழக அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ.15,850 கோடி என்றும், தென் மாநிலங்களிலேயே இதுதான் அதிகம் என்றும் மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட மாநிலங்களின் நிதிநிலை அறிக்கையில் சுட்டிக்காட்டி இருக்கிறது. நடப்பு நிதி ஆண்டில் தமிழகத்தின் நிதிப்பற்றாக்குறை ரூ.42 ஆயிரம் கோடி அளவுக்கு உயரும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் ஒட்டுமொத்தக் கடன் சுமை ரூ.5 இலட்சத்து 75 ஆயிரம் கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக அரசின் போக்குவரத்துத்துறை மட்டுமின்றி, மற்ற துறைகளையும் ஆய்வு செய்தால்தான் அதிமுக அரசின் ஒட்டுமொத்த செயல்பாட்டின் இலட்சணம் தெரிய வரும். எனவே, வேளாண் உற்பத்தி பாதிப்பு, தொழில்துறைகள் முடக்கம், வேலை வாய்ப்பின்மை போன்றவற்றில் அரசு தீவிர கவனம் செலுத்தி பொருளாதார நெருக்கடியிலிருந்து தமிழகத்தை மீட்க வேண்டும்.இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.