போத்தீஸ் விளம்பரத்தில் நடித்தது ஏன்?- கமல்

செவ்வாய் பெப்ரவரி 09, 2016

போத்தீஸ் துணிக்கடை விளம்பரத்தில் நடித்தது தொடர்பில் நடிகர் கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.  நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் நடிக்கத் தொடங்கி கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் இதுவரையும் எந்தவொரு விளம்பரத்திலும் அவர் நடிக்கவில்லை. ஆனால் கடந்த தீபாவளி சமயம் போத்தீஸ் விளம்பரத்தில் நடித்துள்ளார்.

இந்த விளம்பரத்தில் நடிப்பதற்காக கமல் பத்துக்கோடி பணம் வாங்கியதாகவும், அதை அவர் ஒரு தொண்டு நிறுவனத்திற்குப் பரிசளித்ததாகவும் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், போத்தீஸ் நிறுவனம்; கமல் தற்போது பெரும் பணப் பிரச்சனையில் இருப்பதாகவும் தனது பணப்பிரச்சனையைச் சமாளிக்கவே விளம்பரத்தில் நடித்ததாகவும் செய்தி வெளியிட்டது. இதன் போதும் இதுதொடர்பாக கமல் எந்தவொரு கருத்தையும் வெளியிடவில்லை.

ஆனால் தற்போது அதுபற்றி அவர் கூறும்போது, உதவி செய்வது என்பது மற்றவர்களுக்கு தெரியாமல் செய்ய வேண்டும். அதுதான் முக்கியம். நான் விளம்பர படத்தில் நடித்த பணம் பலருக்கு உதவி செய்யவே. நானும் ஒரு பத்திரிக்கை அதிபரும் இணைந்து ஒரு தொண்டு நிறுவனம் நடத்துகிறோம்.

அந்த நிறுவனம் மூலம் பல உதவிகளை செய்து வருகிறோம். அது மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என்று நினைத்தோம். 7000 எய்ட்ஸ் பாதித்த குழந்தைகளை நாங்கள் தத்தெடுத்து வளர்த்து வருகிறோம். அவர்களில் சிலர் இப்போது கல்லூரி செல்லும் வயதுக்கு வந்துவிட்டார்கள். சிலர் திருமண வயதை எட்டி விட்டார்கள். குடும்பம் பெரிதாகிவிட்டது. அவர்கள் யார் யார் என்று போட்டோ போட்டு விளம்பரப்படுத்த முடியாது.

என் ரசிகர்கள் இதுவரை 20 கோடிக்கு மேல் தங்கள் சொந்த காசை போட்டு நற்பணி செய்திருக்கிறார்கள். என் பங்கிற்கு நானும் எதாவது செய்ய வேண்டும் அல்லவா? அதனால்தான் விளம்பர படத்தில் நடித்தேன். சினிமாவில் சம்பாதித்து அதை செய்வது கடினம். அதனால்தான் விளம்பர படத்தில் நடித்தேன். தேவைப்பட்டால் இனியும் விளம்பர படத்தில் நடிப்பேன். அந்த பணம் பலருக்கு உதவும்  என்று கமல்ஹாசன் கூறினார்.