போராடினால் நாடு சுடுகாடாகிவிடுமா?....சரி போராடாத எங்கள் கலைத்தாய் ஏன் அன்று சுடுகாடாக்கப்பட்டாள்

Friday June 01, 2018

நான்தான்பா ரஜினிகாந்த் என்ற ஹாஷ்ராக் ரெண்ட் முதல் ...போராடினால் தமிழகம் சுடுகாடாகிவிடும் என்ற சீற்றங்கள் வரை நானாவித செய்திகள் கிட்டும் பின்னணியில் மீண்டும் ஒரு நாள்!

நிகழ்வுகளின் புரிதலும் இல்லாமல் வாழ்க்கையே ஒரு போராட்டம் என்ற நிஜத்தின் புரிதலும் இல்லாமல் விழும் வார்த்தைகளுக்கு மத்தியில் இது சாதாரண நாள் அல்ல.

37 ஆண்டுகளுக்கு முன்னர் எங்கள் கலையரசி உருக்குலைக்கபட்ட நாளின் நினைவு மீண்டும் இன்னொரு முறை வந்துவிட்டது.

போராடினால் சுடுகாடாகிவிடும் என்ற தத்துவத்தின் படி கூட அவள் ஒன்றும் போராடவில்லை. மாறாக யாழ் பொதுநூலகம் என்ற தனது குட்டி அரண்மனையில் தானுண்டு தன் வாசிப்புக்கொடுப்பு உண்டு என வடமுனை தாரகையாக மட்டும் நின்றவள்அவள்.

ஆனால் போராடாத அவளே அன்று சுடுகாடாக்கப்பட்டாள்.

இந்த 37 ஆண்டுகளின் காலமானிச்சுழற்சியில் எத்தனையோ இழப்புக்களின் பதிவுகள் என் நெஞ்சில் பதியமிட்டுள்ளன.

ஊடகத்துறையில் நான் முதலில் பதிவுசெய்த வங்காலை அருட்தந்தை மேரி பஸ்தியானின் படுகொலை முதல் ஈமைக்கும் போகமுடியாத தந்தையின் இழப்பு உட்பட எத்தனையோ பதியங்கள்.

ஆனால் இவ்வாறான பல காலம் ஆதல்கள் கடந்தாலும் யாழ் நூலக அழிப்ப்பின் பெருவலி இன்றுவரை என்மனதில் மாறவில்லை. உங்களின் மனங்களிலும் அவ்வாறே நிச்சயமாக இருக்கும்.

ஜப்னா லைபிறரியை எரிச்சுப்போட்டங்கள் என்ற அந்த நாசகார செய்தியை எதிர்கொள்வதற்கும் ஒரு நெஞ்சுரம் வேண்டும்.

இந்த விடயத்தில் அருட்தந்தை கலாநிதி டேவிட் அடிகளாரை விட கல்மனம் கொண்டவர்கள் நாம்.

ஏனெனில் நூலகத்திலிருந்து எழுந்த நாசகார தீ நாவுகள் கண்ட கணத்தில் யாழ் சம்பத்தரிசியார் (சென். பற்றிக்ஸ்) கல்லூரிமாடியிலேயே உயிர் துறந்த பெரும் புலமையாளன் அருட்தந்தை கலாநிதி டேவிட் அடிகளார்.

நூலகம் எரியுண்ட செய்தியை இதே முதலாம் திகதி காலையில் மானி இந்துவில் வைத்து எக்கவுண்ட்ஸ் மரியர் ( ஆசான் மரியதாஸ்) உறுதிப்படுத்தினார்.

உடனேயே ஓடிப்போய்ப்பார்க்க வேண்டுமென மனம் துடித்தது. ஆயினும் அம்மாவின் கலவரமுகம் தடுத்தது.

ஆயினும் பிலாக்கணம் வைத்த மனது 48 மணிநேரத்தில்; அம்மாவின் கலவரமுகத்தை மிஞ்சியது.

கிங்கிரர்களின் சுற்றுக்காவல் வாகனங்களுக்கு அஞ்சி ஒழுங்கைகள் எல்லாம் தாண்டி சைக்கிளில் எப்படியோ கலையரசியின் இருப்பிடம் சென்றுவிட்டோம்.

கம்பீரமாக நின்றவள் இப்போது சாம்பல் பூசி கோர மூளியாக நின்றாள்.

அவள் ஒன்றும் கிரேக்கத் தொன்மவியல் கூறுவதைபோல உலகின் அனைத்து தீமைகளை உள்ளடக்கிய பெட்டியை வைத்திருந்த பண்டோராவுக்கு (Pandora's box)ஒப்பானவள் அல்லவே.

மாறாக அவளிடம் நன்மைகளை வழங்கும் அறிவியல் பொக்கிசப் பெட்டகமாக மட்டும்தானே இருந்தது. ஆயினும் அவளை ஏன் அவளைத் தீயிட்டனர்.

உலகுக்கு அனைத்து தீமைகளையும் தனது பெட்டியில் இருந்து வெளியேற்றிய பண்டோராவை கூட கிரேக்கர்களின் சியஸ் கடவுள் தண்டிக்கவில்லையென கிரேக்கத் தொன்மவியல் கூறுகிறது.

ஆனால் இவர்கள் ஏன் எங்கள் கலைத்தாயை இப்படி குருரமாக தண்டித்தார்கள்? அவள் செய்த குற்றம் என்ன? தானுண்டு தன் வாசிப்புக்கொடுப்பு உண்டு என மட்டும் இருந்தவளுக்கு ஏன் இந்தக்கதி?

நான் அவளை அன்று கண்டபோது எரியுண்ட புத்தகங்களின் வெம்மை அவள் மேனியில் இருந்து முற்றாக தணியவும் இல்லை.

சில்றன் கோணர் எனப்படும் சிறார்பகுதிக்கு செல்லும் போது லைபிறரியன் அக்காவின் கண்டிப்புக்கு அஞ்சி மெல்லக்கால்பதித்து சென்ற அந்த மாடிப்படிகள் அக்கினிக்குண்டத்தில் எஞ்சிய சாம்பலாக கிடந்தது.

எத்துணை கோரக்காட்சிகள் அவை.

இன்னும் 3 வருடங்களில் 4 தசாப்தங்களின் நினைவழியாநாட்களை சுமக்கப்போகும் இந்தநாள் எம் வாழ்வில் ஒரு பெரும் ரணம். நினைவழியாநாட்களை சுமக்கப்போகும் இந்தநாள் எம் வாழ்வில் ஒரு பெரும் ரணம்.

இந்தப்பதிவை தட்டச்சு செய்யும் போது என் பிள்ளைகள் இரண்டும் தவணை விடுமுறைதந்த கொடுப்பினையில் காலை 7 மணி கடந்தும் தூக்கத்தில் இருந்தனர்.

அவர்கள் எழுந்ததும் முதல்வேளையாக தமிழர் வாழ்வில் மறக்கவோ மாற்றவோ முடியாத இந்த பெரும் ரணநாள் குறித்து இன்னொரு முறை கூறத்தான்; போகின்றேன்.

யே யாரய்யா நீ? என வன்மமாக சீறாமல் என் பெடியன் புரிந்து கொள்வான் என நினைக்கிறேன். ஏனெனில் அவன் ஒன்றும் சுப்பர்ஸ்ரார் நடிகன் இல்லையே. போராடினால் சுடுகாடாகிவிடும் என்ற அரிய தத்துவம் சுப்பர் ஸ்ரார் நடிகருக்கு எப்படியோ இருந்து விட்டுப்போகட்டும்.

ஆனால் போராடாத ஒரு கலைத்தாயை 37 ஆண்டுகளுக்கு முன்னரே சுடுகாடாக்கிவிட்ட நிஜத்தின் புரிதல் என்றென்றும் ஈழத்தமிழர் அரசியலின் ஒரு அங்கமாகவே இருக்கும்.

பி.சிவகுரு