போரினால் பிரிந்த குடும்பம் எட்டு வருடங்களுக்கு பின் இணைந்தது!

Thursday December 28, 2017

அவுஸ்ரேலிய கடல் பயணத்தின்போது படகு கவிழ்ந்து 22 மணிநேரமாக உயிருக்கு போராடி கடைசியில் கரையோர காவல்படையினரால் மீட்கப்பட்டு இன்று அவுஸ்ரேலிய பிரஜையாக அங்கீகரிக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் அகதி ஒருவரது துயர் மிகு அனுபவத்தை அவுஸ்ரேலிய ஊடகம் ஒன்று நீண்ட கட்டுரையாக வெளியிட்டிருக்கிறது. 

இவ்வாறு மீட்கப்பட்டு இன்று பிரிந்துபோன தனது மனைவி மற்றும் குழந்தையோடு இணைந்திருப்பவர் வேறு யாரும் அல்லர், யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் பேரவை தலைவர் பகீரதன். 

இரண்டாயிரங்களின் ஆரம்பத்தில் யாழ் பல்கலைக்கழகத்தின் மாணவர் பேரவை தலைவராக தெரிவு செய்யப்பட்டது முதல் இராணுவத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிராக மேற்கொண்ட பல போராட்டங்களின்போது பகீரதன் ஆயுதப்படைகளின் கழுகுக்கண்களில் முக்கியமானவராக இனங்காணப்பட்டார். ஆக்கிரமிப்பு சக்திகளுக்கு எதிரான அமைதிவழி போராட்டங்களிலிருந்து விலகி, திருமணம் செய்து மன்னாரில் ஆசிரியராக பணிபுரிந்துகொண்டிருக்கின்றபோதும்கூட ஆயுதப்படையினர் அவரை விடாமல் தொடர்ந்தார்கள். அதன் விளைவாக ஒருநாள் மன்னாரில்வைத்து பகீரதன் வெள்ளைவானில் கடத்தப்பட்டார். சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார். ஆனால், கிறீஸ்தவ மதகுரு ஒருவரின் கோரிக்கைக்கு இணங்க படையினரால் விடுவிக்கப்பட்டார். ஆனால், பகீரதன் அதிக காலம் உயிரோடு இருக்கமாட்டார் என்ற மிரட்டலோடுதான் அவரை விடுவித்திருந்தனர்.

நிலமையை உணர்ந்த கிறீஸ்தவ மதகுருவானவர, பகீரதனையும் மனைவி ஜெயந்தாவையும் கொழும்புக்கு அனுப்பிவைத்தார். அங்கு - 2007 இல் - அவர்களுக்கு குழந்தை பிறந்தது. மகனுக்கு அபி என்று பெயர் சூட்டினார்கள். அப்போது கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பகீரதன் மீண்டும் கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டார். சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார். பின்னர் விடுவிக்கப்பட்டார்.

இனி சிறிலங்காவில் வசிக்கமுடியாது என்ற முடிவோடு குடும்பத்தோடு தமிழகம் சென்றார். அங்கும் முன்று மாத விஸா முடிவடைந்தால் திருப்பி அனுப்பிவிடுவார்கள் என்றநிலை வந்தபோதுதான் முதன் முறையாக அவுஸ்ரேலியாவுக்கு படகு மூலம் வருவது என்று முடிவெடுத்தார். மனைவியையும் மகனையும் பிரிந்து அவுஸ்ரேலிய புறப்பட்டார்.

இந்தியாவிலிருந்து நேரடியாக அவுஸ்ரேலியாவுக்கு புறப்பட்ட முதலாவது படகு இவருடையது என்பது குறிப்பிடத்தக்கது.

படகுப்பயணத்தின் இடைநடுவில் பேரபத்து சூழ்ந்துகொண்டது. இருபது நாள் பயணத்தின் பின்னர் படகு உடைந்து எல்லோரும் நடுக்கடலில் தத்தளித்தார்கள். பகீரதன்தான் அவுஸ்ரேலிய கரையோர காவல்படையினரை அழைத்து உதவி கோரினார். மீட்பு படையணி வந்து சேர்வதற்கு முன்னர் பலர் நீரில் மூழ்கி இறந்துபோனார்கள். பகீரதனும் இன்னும் சிலரும் உடைந்துபோன படகின் சிதிலங்களை பிடித்துக்கொண்டு கடலில் மிதந்துகொண்டிருந்தார்கள். சுமார் 22 மணித்தியாலங்களுக்கு பின்னர் மீட்பு படை வந்து இவர்களை காப்பாற்றி அவுஸ்ரேலியாவுக்கு கொண்டு வந்தது. 

இரண்டு வருடகாலமாக தடுப்புக்காவலில் வைத்திருந்த ஆஸ்திரேலியா 2011 ஆம் ஆண்டு பகீரதனை அகதியாக அங்கீகரித்து விடுதலை செய்தது. விடுதலையானவர் பல்வேறு வேலைகளை செய்து தனது வாழ்க்கையை முன்னேற்றகரமாக மாற்றிக்கொள்வதற்கு பாடுபட்டார். பகீரதனை பொறுப்பெடுத்துக்கொண்ட ஒரு சில அவுஸ்ரேலிய குடும்பங்கள் அவருக்கு பல்வேறு வழிகளிலும் உதவி செய்தது. 2017 ஆம் ஆண்டு அவுஸ்ரேலிய தினத்தன்று பகீரதனுக்கு ஆஸ்திரேலிய குடியுரிமையும் கிடைத்தது. அதற்கு பின்னர், மனைவி ஜெயந்தாவையும் மகனையும் அவுஸ்ரேலியாவுக்கு வரவழைப்பதற்கு விஸாவுக்கு விண்ணப்பித்து அதற்கும் அனுமதி கிடைத்தது. பிரிந்த குடும்பம் ஏழரை வருடங்களுக்கு பின்னர் மீண்டும் இணைந்துகொண்டது.

கடத்தல், சித்திரவதை, சிறை, தடுப்புக்காவல், உயிர்பயம் என்று கடந்த ஒரு தசாப்பத காலத்துக்கும் மேலாக நிம்மதியின்றி வாழ்ந்த குடும்பமொன்று முதல் தடவையாக நிறைவான வாழ்வு கிடைந்த பேருவகையோடு பெருமூச்செறிந்திருக்கிறது.