போர்க் காலங்களில் தமிழ் மக்களின் ஆறுதற் குரலாய் ஒலித்த பி.பி.சி தமிழோசை ஓய்கின்றது!

April 20, 2017

பி.பி.சி தமிழோசை வானொலி தனது 76 வருடகால சேவையை, இம்மாதம் 30ம் திகதியுடன் நிறைவு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது தமிழர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய அரச ஊடகமான பி.பி.சி, வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலையங்களை 1927ம் ஆண்டு முதல் நடத்திவருகின்றது.

முதலில் ஆங்கிலம் மூலம் மாத்திரம் தொடங்கப்பட்ட சேவையானது, தற்போது 27 பிராந்திய மொழிகளில் ஒளிபரப்பு சேவைகளை முன்னெடுத்து வருகின்றது. இந்நிலையில் 1941ம் ஆண்டு தொடங்கப்பட்ட பி.பி.சி தமிழோசை வானொலி சேவையானது, தனது 76 வருடகால சேவையை ஏப்ரல் 30ம் திகதியுடன் நிறுத்துவதாக அறிவித்துள்ளது. 

இலங்கையில் போர் நடைபெற்ற காலங்களில் சிறீலங்காவின் ஊடகங்கள் பொய்யான செய்திகளை வெளியிட்டுக்கொண்டிருந்த வேளையில், அனைத்து வழியிலான பாதைகளும் மூடப்பட்ட நிலையில் காற்றலையில் வந்த பி.பி.சி. தமிழோசை தமிழர்களுக்கு தேனமிர்தமாக இருந்தது.

‘இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கத்தில்....’ என்று தொடங்கும்போதே அனைவரும் நிசப்தமாகி செய்தியை உள்வாங்கத் தயாராகிவிடுவார்கள்.  தகவலைப் பெறுவதற்கான அனைத்து வழிகளும் அடைக்கப்பட்ட நிலையில் தமிழர்களின் ஆறுதல் குரலாய் பி.பி.சி. தமிழோசை இருந்ததென்றால் அது மிகையில்லை.  உண்மைகளை வெளிக்கொண்டுவருவதில் பி.பி.சி. தமிழோசை ஆற்றிய பங்கு மறப்பதற்கில்லை. உண்மைகளை மூடிமறைத்து பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று சிறீலங்காவின் லங்காபுவத் பொய்ப் பிரச்சாரத்தில் மூழ்கியிருந்த அன்றைய காலகட்டத்தில், ஈழத்தில் நடந்த யுத்தம் பற்றி பி.பி.சி மட்டுமே சரியான தகவல்களை அளித்ததாகக் கருதப்பட்டது.  

இரவு 9 மணி எப்போது வரும், பி.பி.சி தமிழோசையைக் கேட்டு நிலைமைகளை அறிந்துகொள்ளலாம் என்று தமிழ் மக்கள் காத்துக்கிடந்த காலம் ஒன்று இருந்தது. மின்சாரமும் அற்ற, பற்றரிகளும் வாங்கமுடியாத பொருளாதாரத் தடைக்குள் வாழ்ந்த தமிழ் மக்கள், சைக்கிள் டைனமோக்களின் ஊடாகப் பெறும் மின்சாரத்தில் பி.பி.சி. தமிழோசையை கேட்டு உண்மை நிலைமைகளை அறிந்துகொண்டனர்.

தமிழ் மக்களின் எத்தனையோ பிரச்சனைகளை பொது வெளிக்கு எடுத்துவந்து அவற்றை உலகிற்கு அம்பலப்படுத்தியதில், அவற்றுக்கான தீர்வு காணப்படவேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியதில் பி.பி.சி தமிழோசையின் பங்கு கனதியானது. பிரான்சில் ஈழமுரசு மீதான தாக்குதல் முயற்சியையும், அதனை மூடவைப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் பி.பி.சி. தமிழோசை ஊடாக, உலக அளவிற்கு எடுத்துச்சென்றதன் மூலம், விரைவான ஒரு தீர்வைப் பெறுவதற்கு அதுவும் ஒரு முக்கியமான காரணமாக அமைந்தது.

உலகத் தமிழர்களிடையே நம்பகத்தன்மை மிகுந்த சேவையை தந்துவந்த பி.பி.சி. தமிழ் செய்திகள், தற்போதைய தொலைக்காட்சி மற்றும் இணையதளம் போன்ற நவீன தொழில்நுட்பங்களின் பயன்பாடுகள் அதிகரித்துள்ளமையால், வானொலி ஒலிபரப்பை கேட்கும் இரசிகர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாக கூறி அண்மைக் காலமாக பல்வேறு பிராந்திய ஒளிபரப்புகளை நிறுத்தி வருகின்றது. மேலும் இணைய தளம் மூலமாக பி.பி.சி தமிழோசை தொடர்ந்து ஒலிபரப்பப்படும் எனவும், இலங்கையில் மட்டும் தனியார் வானொலியுடன் இணைந்து பண்பலைவரிசை (எப்.எம்.) ஒலிபரப்பில் 5 நிமிட செய்திகள் மாத்திரம் ஒலி பரப்பப்படும் என அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி: ஈழமுரசு

செய்திகள்