போர்க் குற்றச்சாட்டுகளைப் பற்றிக் கவலையில்லை!

Wednesday November 15, 2017

சிறிலங்கா  வழங்கும் நிதி உதவிகள் தொடர்பாக, பின்னிணைப்புகள் எவற்றையும் சீனா கொண்டிருக்காது என்று உறுதியளித்த சீன வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, மனித உரிமைகள் விசாரணைகளையோ அல்லது போர்க் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்களையோ, முன் நிபந்தனைகளாகச் சேர்க்காது எனவும் உறுதியளித்துள்ளது.

கலாசார, ஊடக பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை ஊடகவியலாளர்களை நேற்று (14) சந்தித்த, சீன வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஆசிய விவகாரங்கள் திணைக்கள, தெற்காசியப் பிரிவின் செயலாளர் ஸாங் சொங், இத்தகவல்களை வெளியிட்டார்.

இதன்போது அவர், இரு நாடுகளுக்குமிடையிலான தொடர்புகள், பல நூற்றாண்டுகள் நீண்டுள்ள கலாசார, வர்த்தக, சமயத் தொடர்புகளை அடிப்படையாகவே கொண்டிருக்கும் என்று தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக இப்பத்திரிகைக்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர், எந்த நாட்டுக்கும் வழங்கும் அபிவிருத்தி, தொழில்நுட்ப உதவிகளும், அரசியல் அல்லது தனிநபர்கள் என்ற அடிப்படையில் வழங்கப்படுவதில்லை என்று தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் காலத்தில், இலங்கையில் பல பில்லியன் டொலர்கள் பெறுமதியிலான அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களைச் சீனா முன்னெடுத்த போதிலும், அவர் மீது விசேடமான விருப்பேதும் கிடையாது என்றும் தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையிலான இந்த அரசாங்கத்துடன், நெருக்கமானதும் சிநேகபூர்வமானதுமான உறவை, சீன அரசாங்கமும் சீனத் தலைவர்களும் பேணுகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.

“இந்து சமுத்திரத்தில், இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் மிக்க அமைவிடம் குறித்து நாம் அறிவோம். அதனால் தான், தெற்காசியப் பிராந்தியத்தின் பிரதான பங்காளராக, தனது காலில் இலங்கை நிற்பதற்குத் தேவையான என்னவிதமான உதவிகளையும் நாம் வழங்குகிறோம்.

“உதாரணமாக, கொழும்புத் துறைமுகம் தற்போது, 2 மில்லியனுக்கும் மேற்பட்ட கொள்கலன்களைக் கையாள்கிறது. இது, 6 மில்லியன்களாக மிக இலகுவாக அதிகரிக்கப்பட முடியும்” என்று அவர் தெரிவித்தார்.