போலீஸ் மீது தாக்குதல்-மெக்சிகோ

செவ்வாய் டிசம்பர் 04, 2018

மெக்சிகோ நாட்டில் போதை பொருள் கடத்தலில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கி சண்டையில் 6 போலீசார் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை மெக்சிகோ நாட்டின் புதிய அதிபராக பதவியேற்ற அன்ட்ரேஸ் மனுவேல் லோபஸ் ஒபராடர், வன்முறையை ஒடுக்க கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ள நிலையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஜலிஸ்கோ மாநிலத்தின் அட்டர்னி ஜெனரல் மரிசெலா கோமஸ் கோபோஸ் கூறுகையில், ”போலீஸ் ரோந்து வாகனம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது 3 வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 6 போலீசார் பலியாகினர்” என தெரிவித்தார்.

தாக்குதல் நடத்தியவர்களில் காயமடைந்த ஒருவன் தற்போது போலீஸ் பாதுகாப்பில் இருக்கிறான்” என்று கூறினார்.தாக்குதல் நடத்திய மற்றவர்கள் சாலையில் வாகனங்களுக்கு தீயிட்டு தடுப்பு ஏற்படுத்தி தப்பி சென்றனர். மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களே இவ்வித தடுப்புகளை ஏற்படுத்தி தப்பி செல்வது வழக்கம்.