மகப்பேறு விடுப்புக்கு பின்னர் பணிக்கு வந்த நியூசிலாந்து பிரதமர்!

Tuesday August 07, 2018

நியூசிலாந்து பிரதமர் ஜெசின்டா ஆர்டெர்ன் மகப்பேறு விடுப்புக்கு பின்னர் முதன்முறையாக நாடாளுமன்றத்துக்கு வந்து தனது பணிகளை கவனித்துகொண்ட துணை பிரதமருக்கு நன்றி தெரிவித்து கொண்டார்.

நியூசிலாந்து நாட்டின் பிரதமராக பதவி வகிப்பவர் ஜெசின்டா ஆர்டெர்ன்(38).  இவரது கணவர் க்ளார்க் கேஃபோர்ட் .

26-10-2017 அன்று நியூசிலாந்து நாட்டு பிரதமராகப் பதவியேற்ற சில வாரங்களிலேயே, அர்டர்ன் கருவுற்றிருப்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து எட்டு மாதங்கள் முடிந்த நிலையில், மகப்பேறு விடுப்பில் இருந்த அர்டர்ன், ஆக்லாந்து நகரில் உள்ள தனது பூர்வீக இல்லத்தில் கடந்த 21-6-2018 அன்று அழகான பெண் குழந்தையை ஈன்றெடுத்தார். 

`நீவ் தே அரோஹா' என்று பெயர் சூட்டியுள்ளனர். குழந்தை பிறந்து ஆறு வாரங்களான நிலையில், மகப்பேறு விடுப்பு முடிந்து கடந்த வியாழக்கிழமை ஜெசின்டா தம்பதியர் தலைநகர் வெலிங்டன் வந்தடைந்தனர்.

வெலிங்டன்  விமான நிலையத்தில் பேட்டியளித்த ஜெசின்டா, ‘என் வேலைக்காக என் குழந்தையையோ, வீட்டுக்காக அலுவலகத்தையோ நிச்சயம் விட்டுக்கொடுக்க மாட்டேன். 

என் வாழ்நாளிலேயே வேகமாகக் கடந்த ஆறு வாரங்கள் இவைதான். என் குழந்தையின் தாய் என்ற பொறுப்புடன், சுமார் ஐம்பது லட்சம்  மக்கள் வாழும் இந்த நாட்டையும்கவனித்துக்கொள்வது என்பது மிகப்பெரிய சவாலாக இருக்கப்போகிறது.

என் கடமைகளைத் தவறாமல், எந்தவிதமான கவனச் சிதறலும் இல்லாமல் செய்யவேண்டும் என்பதையும் நன்கு அறிவேன். உங்கள் எல்லாருடைய உறுதுணையும் இருந்தால், நிச்சயம் என்னால் சிறப்பாகப் பணியாற்ற முடியும் என நம்புகிறேன் என குறிப்பிட்டார். அன்றிலிருந்தே தனது அலுவல்களை அவர் கவனிக்க தொடங்கினார்.

இந்நிலையில், மகப்பேறு விடுப்புக்கு பின்னர் முதன்முறையாக பிரதமர் ஜெசின்டா  கடந்த  திங்கட்கிழமை பாராளுமன்றத்துக்கு வந்தார் நாடாளுமன்ற மாடத்தில் அவர் நுழைந்தபோது சக மந்திரிகள் மற்றும் எம்.பி.க்கள் கரவொலியால் மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்றனர்

பின்னர் நடைபெற்ற மந்திரிசபை கூட்டத்துக்கு தலைமை தாங்கிய அவர், மகப்பேற்று விடுப்பு காலத்தில் தனது பணிகளை கவனித்துகொண்ட துணை பிரதமருக்கு நன்றி தெரிவித்து கொண்டார்.

உலகளவில், பிரதமர் பதவியில் இருக்கும்போதே குழந்தையை ஈன்றெடுத்த இரண்டாவது பெண் ஜெசின்டா ஆர்டெர்ன் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு முன்னர் பாகிஸ்தான் பிரதமர் மறைந்த பெனாசிர் பூட்டோ தனது பதவிக்காலத்தில்  1990-ம் ஆண்டு  குழந்தை பெற்றார் என்பது நினைவிருக்கலாம்.