மகாசுவேதா தேவியின் பிறந்தநாளை டூடுலால் கொண்டாடும் கூகுள்!

Sunday January 14, 2018

மறைந்த வங்காள எழுத்தாளர் மற்றும் சமூக ஆர்வலரான மகாசுவேதா தேவியின் 92-வது பிறந்தநாளை இணையதள தேடுபொறியான கூகுள் சிறப்பு டூடுலின் மூலம் இன்று கொண்டாடி வருகிறது.

மகாசுவேதா தேவி வங்காள எழுத்தாளர் மற்றும் பீகார், மத்தியப்பிரதேசம், சட்டீஸ்கர் முதலான பகுதிகளின் பழங்குடி மக்கள் நலனுக்காகப் பாடுபட்ட சமூக ஆர்வலர் எனப் பன்முகப் பரிமாணம் கொண்டவர். இவர் 1926-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி அப்போதைய இந்தியாவின் டாக்கா நகரில் பிறந்தார். இவரது தந்தை மணிஷ் கடக் மற்றும் தாய் ரித்விக் கடக். மகாசுவேதா தேவியின் பெற்றோர்கள் இருவருமே ஏழுத்தாளர்கள் ஆவர்.

மகாசுவேதா தேவி, தனது பள்ளிப்படிப்பை டாக்காவில் உள்ள ஈடன் மாண்டிசோரி பள்ளியில் பயின்றார். அதன்பின் மித்னாபூர் மிஷன் பள்ளியில் பயின்றார். 1944-ம் ஆண்டில் அசுதோஷ் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பு பயின்றார். பின்னர் சண்டிநிகேதன் உள்ள விஷ்வபாரதி பல்கலைகழகத்தில் ஆங்கில இளநிலை பட்டப்படிப்பை முடித்தார். அதன்பின் முதுகலை பட்டப்படிப்பை கல்கத்தா பல்கலைகழகத்தில் பயின்றார். 

வங்காள மொழியில் 100க்கும் மேற்பட்ட நாவல்களும் 20க்கும் மேற்பட்ட சிறுகதை தொகுப்புகளும் எழுதியுள்ளார். ரமன் மெகசசே விருது, நாட்டு ஒற்றுமைக்கான இந்திரா காந்தி விருது, சாகித்ய அகாதமி, பத்மஸ்ரீ, பத்மவிபூஷண் முதலான பல விருதுகள் பெற்றவர். இவரது நூல்கள் ஆங்கிலம், தமிழ் என பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது கதைகள் பல திரையுருவம் பெற்றுள்ளன.

மகாசுவேதா தேவி பெற்றுள்ள விருதுகள்:

1979: சாகித்திய அகாதமி விருது (வங்காள மொழி)- அரன்யெர் அதிகார் (நாவல்)
1986: சமூகப்பணிக்காக பத்மஸ்ரீ விருது
1996: ஞானபீட விருது
1997: ரமோன் மக்சேசே விருது
1999: மதிப்புறு முனைவர் பட்டம் – இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம்
2006: பத்ம விபூசண் விருது
2007: சார்க் இலக்கிய விருது
2009: மான் புக்கர் பன்னாட்டுப் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டார்
2010: யஷ்வந்த்ராவ் சவான் தேசிய விருது
2011: மேற்கு வங்காள அரசின் வங்க பிபூஷண் விருது

மகாசுவேத்தாதேவி, 2016 ஜூலை 23-ல் மாரடைப்பு ஏற்பட்டு கொல்கத்தாவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 2016 ஜூலை 28-ம் தேதி தனது 90-வது வயதில் காலமானார். அவரை போற்றும் வகையில் அவரது 92-வது பிறந்தநாளான இன்று அவரது புகைப்படம் கொண்ட ‘டூடுல்’ மூலம் ‘கூகுள்’ கொண்டாடி மகிழ்கிறது.