மகாவலி ஆக்கிரமிப்பும் விடுதலைப் புலிகள் கற்றுத்தந்த பாடமும் - ‘தாயகத்தில் இருந்து’ காந்தரூபன்

Sunday September 09, 2018

தமிழ் மக்கள் மிகவும் தெளிவான மனநிலையில்தான் இருக்கின்றார்கள் என்பதை தாயகத்தில் தற்போது நடைபெற்றுவரும் சம்பவங்கள் எடுத்துரைக்கின்றன. தாகத்தால் தவித்துக்கொண்டிருக்கும் தமிழினம் தண்ணீரைத் தருகின்றோம் எனக் கூறுவோரிடம் அது வேண்டாம் எனத் துணிந்து சொல்லும் நிலைப்பாட்டுக்கு தங்களைப் புடம்போட்டிருக்கின்றனர்.

சிங்களவர்களின் நரித் தந்திர வலைக்குள் நாம் இனியும் வீழோம் என தமிழர்கள் உறுதியயடுத்துக் கொண்டார்கள் என்பதை கடந்த வாரம் முல்லைத்தீவில் நடைபெற்ற எழுச்சிப் போராட்டம் எடுத்துக் காட்டியது. மகாவலி அதிகார சபையின் தமிழின அழிப்புக்கு எதிராக அலையயனத் திரண்ட மக்கள் தாயக நிலப்பரப்பில் மாற்றானுக்கு இடம்கொடோம் என்ற மனவுறுதியை வெளிப்படுத்தினர்.

தமிழர் தாயகத்தின் வடக்கே மிகப்பெரும் நீர்ப்பற்றாக்குறை நிலவி வருகின்றது. மனிதர்கள் மட்டுமன்றி கால்நடைகள் உள்ளிட்ட அனைத்து ஜீவராசிகளும் நீருக்காக அலைந்து திரிகின்றன. இந்நிலையில், தெற்கே இருந்து நீரைத் தாருங்கள் எனப் போராடுவதற்கு பதிலாக எங்களுக்கு தண்ணீர் வேண்டாம் எனப் போராடும் நிலை தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. இப்போராட்டம் தொடர்பாக தென்னிலங்கை மட்டுமன்றி முழு உலகும் சிந்திக்கவேண்டும்.

இலங்கையில் உள்ள நதிகளில் மிக நீளமான மகாவலி கங்கையை மேலும் நீளமாக்கி அதைத் தமிழின அடக்குமுறைக்கு பயன்படுத்த சிங்கள தேசம் நீண்ட காலமாகவே முயற்சித்து வருகின்றது. அதுதான் மகாவலி அபிவிருத்தித் திட்டம். 1961 ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்காவால் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

நாடு முழுவதையும் முற்றுமுழுதாக சிங்கள மயமாக்குவதை நோக்கமாகக் கொண்டே மகாவலி அதிகார சபை உருவாக்கப்பட்டது. இத்திட்டம் எங்கெல்லாம் நிறைவேற்றப்படுகின்றதோ அங்கெல்லாம் காணிகள் சுவீகரிக்கப்படும். சிங்கள மக்கள் குடியேற்றப்படுவார்கள். பெளத்த விகாரைகள் கட்டப்படும்.

மகாவலி அதிகார சபை ஆரம்பிக்கப்பட்டு வேறு பல அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், மகாவலி எல் வலயம் தமிழின ஆக்கிரமிப்புக்கென திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. இத்திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்படுமாயின் தமிழர் தாயகத்தின் திருகோணமலை, வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்கள் முற்றுமுழுதாக சிங்கள மயமாக்கப்பட்டவையாக மாற்றம்பெறும்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பாக தமிழ் இளைஞர்கள் சிந்தித்தபோது அவர்களின் ஆற்றல் மற்றும் சக்தியைக் கண்டு அச்சமடைந்த சிங்கள தேசம் தமிழர்களை தனித்து விடக்கூடாது என முடிவெடுத்தது. தமிழர்களின்  விடுதலைக் கோரிக்கைகளை நசுக்குவதற்கென்றே மகாவலி அதிகார சபையின் எல் வலயத் திட்டத்தை சிங்கள அரசு தயாரித்தது. இந்தத் திட்டத்தினுVடாகத் தமிழர் தாயகத்தின் பெருமளவு நிலப்பரப்பை சிங்கள ஆதிக்க தேசமாக மாற்றுவதற்கு உத்தேசிக்கப்பட்டது.

எல் வலயத் திட்டம் நிறைவுபெற்றதும் முல்லைத் தீவில் இருந்து கிளிநொச்சி இரணைமடுக் குளம் வரை மகாவலி கங்கையைக் கொண்டுவந்து அங்கிருந்து யாழ்ப்பாணம் நோக்கித் திருப்புவது திட்டம். மகாவலி அதிகார சபையின் ஊடாக இத்திட்டத்தை நிறை வேற்றத் தீர்மானிக்கப்பட்டது. 

எனினும், தமிழீழ விடுதலைப் புலிகள் அதற்கு முட்டுக்கட்டையாக இருந்தனர். மகாவலி எல் வலயத் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என விடுதலைப் புலிகள் வலியுறுத்தியிருந்தனர். அந்தத் திட்டத்தின் மூலம் தமிழர் நிலம் எப்படிக் காவுகொள்ளப்படவுள்ளது என்பதை புலிகள் நன்றாகவே அறிந்திருந்தனர். அதனால், அவர்கள் அதை எதிர்க்கவேண்டிய நிலை ஏற்பட்டது.

புலிகளின் எதிர்ப்பை மீறி, யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது சிங்கள அரசால் அத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற முடியவில்லை. எனினும், திருகோணமலையில் அப்போது சிங்களவர்கள் அத்திட்டத்தை வலுவாக்கிக்கொண்டிருந்தனர். 2009 இல் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் மகாவலி எல் வலயத் திட்டத்தை விரைவாகச் செயற்படுத்த வேண்டும் என்பதில் அரசாங்கம் முனைப்புக் காட்டியது.

தமிழர் தேசத்திற்கு குடிதண்ணீர் வழங்கும் விசேட செயற்றிட்டம் என்ற கோதாவில் தமிழர் தாயகத்தை ஆக்கிரமிக்கும் சிங்கள அரசின் நிகழ்ச்சிநிரல் தொடர்பாக புலிகள் ஏலவே மக்களை அறிவூட்டியிருந்தனர். இந்த அறிவூட்டல் மக்கள் தாம் எப்படிச் செயற்படவேண்டும் என்பதை அவர்களுக்கு எடுத்துரைத்தது. அதன் பின்னரே தமிழர் நிலஆக்கிமிப்பு இந்த இடத்தில்தான் ஆரம்பிக்கும் என்ற கருத்திற்கு இடமில்லாமல் தொடர்ந்தது.

மகாவலி அதிகார சபையானது நாட்டில் அதிகூடிய அதிகாரங்களைக் கொண்டுள்ள சபையாகும். வருடாந்த வரவு செலவுத் திட்டத்தில் இந்தச் சபைக்கு அதிகூடிய நிதி ஓதுக்கீடு செய்யப்படும். இதன் தலைவர்களாக அல்லது அமைச்சர்களாக நியமிக்கப்படுபவர்கள் ஜனாதிபதிக்கு மிகவும் நெருக்கமானவர்களாக - நம்பிக்கைக்கு உரியர்களாக இருப்பர்.  அவருக்கு அதிகாரங்களும் வரையறையற்றதாக இருக்கும்.

முல்லைத்தீவில் அண்மையில் சிங்கள -தமிழ் மீனவர்களுக்கு இடையே போட்டிகள் நிலவின. ஏந்தவிதமான பதிவுகளும் அற்ற நிலையில் வந்து முல்லைத்தீவுக் கடற்கரையில் தங்கயிருந்தனர். அவர்களை அந்த இடத்தைவிட்டு வெளியேறுமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அது சாத்தியப்படாமல் போகவே முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கின் பிரகாரம் காணிகள் வழங்குவதை மகாவலி அதிகார சபை உடனடியாக நிறுத்தவேண்டும் என நீதிமன்று உத்தரவிட்டிருந்தது. ஆனால், அந் நடைமுறைகள் அனைத்தையும் புறம்தள்ளிய மகாவலி அதிகார சபை முல்லைத்தீவில் 6 சிங்கள மீனவக் குடும்பங்களுக்கும் காணிகள் வழங்கியிருக்கின்றது.

பிரதேச செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலகங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்களும் மகாவலி அதிகார சபையின் செயற்பாடுகளைத் தட்டிக்கேட்க முடியாதவர்களாக இருக்கின்றனர். கேட்கப்படும் காணிகளை வழங்க மறுக்கும் உத்தியோகத்தர்களை தூரப் பிரதேசங்களுக்கு இடமாற்றம் வழங்குவது என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

சிறீலங்காவின் நீதிமன்ற அமைப்புக்களையே உதாசீனப்படுத்தும் சர்வாதிகாரப் போக்குடைய சபையாக மகாவலி அதிகார சபை வளர்ந்துள்ளது. இந்தச் சபையின் செயற்பாடுகளை வடக்கில் தொடர அனுமதிப்பதானது தமிழ் மக்களின் ஒட்டுமொத்த இருப்பிற்கே ஆபத்தானது. இதை உணர்ந்துதான் முல்லைத்தீவு மக்கள் கடந்த வாரம் பெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். இந்தப் போராட்டத்திற்கு எதிர்பாராத விதமாக ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர். சிங்கள மேலாதிக்கத்தின் ஆக்கிரமிப்புக்களை இனியும் நாம் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்பதையே அந்த மக்களின் உணர்வலைகள் எடுத்துக் காட்டின.

எழுச்சியடைந்த எந்தவொரு இனமும் வீழ்ச்சியடைந்ததாக வரலாறு இல்லை என்ற தேசியத் தலைவரின் சிந்தனைக்கு அமைய தமிழ் மக்கள் அந்தப் போராட்டத்தில் அலையயனத் திரண்டு தமது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். வடக்கில் கடும் வரட்சி நிலவுகின்ற நிலையில், தண்ணீருக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவுகின்ற நிலையில், சிறீலங்காவின் மிகப்பெரும் நதியாகிய மகாவலி கங்கை நீரை இங்கு கொண்டுவந்து நீர் வழங்குகின்றோம் எனக் கூறும் சிங்கள அரசின் செயற்பாடுகளை அவர்கள் முற்றாகவே புறக்கணித்திருக்கின்றனர்.

எமக்கு நீரும் வேண்டாம் பெளத்த சிங்கள ஆக்கிரமிப்பும் வேண்டாம் என மக்கள் உரத்துக் கூறியிருக்கின்றனர். சிங்கள தேசத்திற்கு மட்டுமல்ல, சர்வதேசத்திற்கும் இதன் மூலம் மக்கள் ஒரு செய்தியைக் கூறியிருக்கின்றனர். அபிவிருத்தி என்ற போர்வையில் எமது நிலங்களை எவரும் ஆக்கிரமிக்க முடியாது. அதற்கு நாம் அனுமதி வழங்க மாட்டோம் என அழுத்தமாகத் தெரிவித்திருக்கின்றனர். மக்களின் இந்த எழுச்சியை. அவர்களின் கருத்துக்களை சர்வதேசம் புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இல்லாத தமிழர் தாயகம் எவரும் எப்போதும் எதுவும் செய்ய முடியும் என்ற நிலையில்தான் இருக்கின்றது. இதனால்தான் தமிழ் மக்கள் சர்வதேசத்தின் உதவியை நாடியிருக்கின்றனர். இந்த விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை தனது கவனத்தை ஈர்க்கவேண்டும். இதற்கு புலம்பெயர் தமிழ் மக்களும் உதவவேண்டும். இந்த விடயத்தை வெளிநாடுகளின் கவனத்திற்குக் கொண்டுசெல்வதில் புலம்பெயர் உறவுகள் காத்திரமான பங்களிப்பை வழங்கவேண்டும். இதுவே தாயகத்தில் உள்ள மக்களின் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.

நன்றி: ஈழமுரசு