மகிந்த ராஜபக்ஷ ஆட்சியைக் கவிழ்க்க முயற்சிப்பார், ரணில் வெளிப்படையாகக் கருத்து

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விரைவில் ஆட்சி மாற்றத்திற்கு முயற்சிக்கக்கூடும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளிப்படையாகக் கருத்து வெளியிட்டுள்ளார்.
பெரும்பாலும் அடுத்த சில வாரங்களில் மகிந்த ராஜபக்ச அதைச் செய்யலாம் என்றும் அவர் கூறினார். எது எப்படியிருப்பினும் தானே நாட்டின் பிரதமர் என்றும் அதை யாராலும் மாற்ற முடியாது என்றும் ரணில் கூறியுள்ளார்.
2017 ஆம் ஆண்டின் முதல்நாள் கடமைகளை ஆரம்பிக்கும் முகமாக அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற நிகழ்வின் போது ஊடவியலாளர்களுக்கு கருத்துக் கூறுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
தான் விரும்பியதை செய்ய மகிந்தவுக்கு சுதந்திரம் உண்டு எனவும் அவர் கூறினார். 2017ம் ஆண்டு அரசாங்கம் கவிழ்க்கப்படும் என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியபோது பதலளிக்கையிலேயே அவர் இப்படித் தெரிவித்தார்.
தான் அடுத்த வாரம் சுவிஸர்லாந்து செல்லவுள்ளதாகவும் அச் சந்தர்ப்பத்தில் மஹிந்த ராஜபக்ஷ தான் கூறியதைபோல செயற்பட முயற்சிக்க முடியும் எனவும் ரணில் இதன்போது தெரிவித்தார்.
நாட்டில் மகிந்த தலைமையில் ஆட்சி மாற்றத்துக்கான செயற்பாடுகள் இடம்பெறுவதாக பரவலாகவே பேசப்பட்டு வருகின்ற நிலையில், ரணில் விக்கிரமசிங்கவின் இந்தக் கருத்து தென்னிலங்கை அரசியல் வட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைப் புறந்தள்ளிவிட்டு மகிந்த ராஜபக்சவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஒன்றிணைந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் செயற்பட முயற்சிக்கின்றனரா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது.