மக்கள்நல கூட்டியக்கத்தை மேலும் வலிமைப்படுத்தல்

புதன் அக்டோபர் 14, 2015

மக்கள்நல கூட்டியக்கத்தை மேலும் வலிமைப்படுத்துவதென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் குழுவில்  தீர்மானம். 
கோகுல்ராஜ் கொலை வழக்கையும் - விஷ்ணுபிரியா சாவு வழக்கையும் சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்.

 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக்குழு கலந்தாய்வுக்கூட்டம் 12.10.2015 அன்று கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் தலைமையில் கூடியது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

 

1. சேலம் கோகுல்ராஜ் படுகொலை வழக்கையும், காவல்துறை அதிகாரி விஷ்ணுபிரியா சாவு வழக்கையும் சி.பி.சி.ஐ.டி விசாரணையிலிருந்து மாற்றி, சி.பி.ஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டுமென தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக்குழு கேட்டுக்கொள்கிறது. கோகுல்ராஜ் கொலை வழக்கில் முதன்மைக் குற்றவாளியை கைது செய்யமால், சரணடைதல் என்னும் பெயரில் ஒரு கொலை குற்றவாளியையும், கொலை குற்றவாளியின் ஆதரவாளர்களையும் சட்டவிரோதமாக கூடுவதற்கு அனுமதித்து வேடிக்கைப் பார்க்கும் அவலத்தை தமிழக காவல்துறை அரங்கேற்றியுள்ளது. குறிப்பாக, இவ்வழக்கை விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர், கொலையாளியின் இந்த அருவறுப்பான அற்பச் செயல்களுக்கு இடமளித்துள்ளனர் என்பது பாதிக்கப்பட்டோருக்கு பெரும் வேதனையளிக்கும் போக்காகும். இது காவல்துறையின் மீதான நம்பிக்கையை முற்றிலும் தகர்ப்பதாகவுள்ளது. ஒரு கொடூரமான கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபரை ஒரு போராளியைப் போல் சரணடைய வைத்து வேடிக்கைப்பார்க்கும் காவல்துறையினர் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்கச் செய்வார்கள் என நம்ப இயலவில்லை. எனவே, கோகுல்ராஜ் கொலை வழக்கையும், விஷ்ணுபிரியா சாவு வழக்கையும் சி.பி.ஐ விசாரணைக்கு உட்படுத்தவேண்டுமென இக்குழு வேண்டுகோள் விடுக்கிறது.

 

2. விடுதலைச் சிறுத்தைகள் இடம்பெற்றுள்ள மக்கள் நல கூட்டியக்கம், அண்மைக் காலங்களில் மைய, மாநில அரசுகளின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்து,  நடத்திய கண்டன ஆர்ப்பாட்டங்கள், உண்ணாநிலை அறப்போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள் யாவும் பரந்துபட்ட அளவில் பொதுமக்களிடையே குறிப்பாக, இளம் தலைமுறையினரிடையே வெகுவாக வரவேற்பையும், நன்மதிப்பையும் பெற்றுள்ளன.இத்தகைய  கூட்டியக்கத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கூட்டியக்கத்தின் தோழமைக் கட்சிகளான ம.தி.மு.க, சி.பி.ஐ, சி.பி.ஐ.(எம) ஆகியவற்றுடன் நல்லிணக்கமான முறையில் தொடர்ந்து செயல்படுமென என இந்த உயர்நிலைக்குழு தீர்மானிக்கிறது.