மக்கள் விரோத அரசாக அ.தி.மு.க. செயல்படுகிறது!

வியாழன் பெப்ரவரி 08, 2018

பேருந்து கட்டணத்தை 100 சதவீதம் உயர்த்தி மக்கள் விரோத அரசாக அ.தி.மு.க. செயல்படுகிறது என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.

கோவில்பட்டி இலுப்பையூரணியில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

இலங்கைத் தமிழர்கள் இனப்படுகொலைக்கு காரணமான சிங்கள அரசை குற்றவாளி கூண்டிலே நிறுத்தி தண்டிக்க வேண்டும். லட்சக்கணக்கான தமிழர்களின் படுகொலைக்கு நீதி வேண்டும் என்று உலக அரங்கிலே நாம் குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறோம். இந்நிலையில் கடந்த 4-ந்திகதி இலங்கை சுதந்திர தினத்தன்று லண்டன் தூதரகத்திற்கு எதிரே இனப்படுகொலைக்கு நீதி கேட்டு ஈழத்தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது தூதுவரோடு வெளியே வந்த பிரிகேடியர் பிரியங்கா பெர்னான்டோ தமிழர்களைப் பார்த்து கழுத்தை அறுப்பேன் என்று தனது கைகளால் சைகை மூலம் காட்டியுள்ளார்.

இதற்கு பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் அங்குள்ள எம்.பி.க்கள் கண்டனம் தெரிவித்து, அவரது விசாவை பறித்து நாடு கடத்த வேண்டும் என்று பிரச்சனையை எழுப்பி இருக்கின்றனர். ராஜபக்‌ஷே லண்டன் சென்ற போது வெளியே வரவிடாமல் தமிழர்கள் திரண்டு விரட்டினார்கள். லண்டனில் உள்ள எம்.பி.க்கள் குரல் கொடுத்திருப்பது ஆறுதல் தருகிறது.

தமிழர்களை மிரட்டிய பிரிகேடியரை உடனடியாக அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்று மத்திய அரசு குரல் கொடுக்க வேண்டும். ஆனால் குரல் கொடுக்காது. மத்திய அரசு எல்லா விதத்திலும் சிங்கள அரசுக்கு உதவியாக இருக்கிறது. தமிழக மீனவர்கள் எல்லையை தாண்டினர் எனக் கூறி, கோடிக்கணக்கான ரூபாய் அபராதம், 3 ஆண்டு சிறை தண்டனை என்ற சட்டத்தை இலங்கை நிறைவேற்றியுள்ளது. மத்திய அரசு இதை கண்டுகொள்ளவில்லை.

லண்டனில் உள்ள பிரிகேடியரை அனுப்புவதற்கு உலக நாடுகள் குரல் கொடுக்க வேண்டும். பிரிட்டிஷ் அரசு அவரை வெளியேற்ற வேண்டும். மத்திய அரசுக்கு தமிழர்கள் மீது அக்கறை இருந்தால் இச்செயலுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். அ.தி.மு.க. அரசு மக்கள் விரோத அரசாக செயல்பட்டு வருகிறது. பேருந்து கட்டணத்தை 100 சதவீதம் உயர்த்தி பொதுமக்களை மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

பேருந்து கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் கட்டணத்தை அதிகரிக்கும் நிலையிலேயே இருந்து வருகின்றனர். கோவில்பட்டியில் சொத்து வரியை நகராட்சி நிர்வாகம் தன்னிச்சையாக உயர்த்தியிருக்கிறது. இதனைக் கண்டித்து ம.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டன போர்டுகள், தெருமுனை பிரசாரங்கள் நடத்தி வருகின்றன. உயர்த்தப்பட்ட சொத்து வரியை நகராட்சி நிர்வாகம் ரத்து செய்ய வேண்டும். வசூலித்த பணத்தை மக்களிடம் திரும்பக் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.