மக்ரோனை மண்டியிடவைத்த மஞ்சள் அங்கி!

வியாழன் டிசம்பர் 13, 2018

பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தான் தவறிழைத்துவிட்டதாக நாட்டு மக்களிடம் கடந்த திங்கட்கிழமை பகிரங்கமாக ஒத்துக்கொண்டார். 

' தனவந்தர்களுக்கு ஆதரவானவர் 'என்று வர்ணிக்கப்படுகின்ற அவருக்கு  நாடுபூராவும் பல வாரங்களாக இடம்பெற்றுவந்த ஆர்ப்பாட்டங்களுக்கு முன்னால் அவ்வாறு தவறை ஒத்துக்கொள்வதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை. தனது ஜனாதிபதி பதவியைக் காப்பாற்றிக்கொள்வதற்கும் அதுவே ஒரே வழியாக இருந்தது.

முன்னாள் வங்கியாளரான மக்ரோன்  வேதனங்களை 100 யூரோவினால் அதிகரிப்பதற்கும் குறைந்த வருமானமுடைய  ஓய்வூதியர்களுக்கு விதிக்க உத்தேசித்திருந்த வரி அதிகரிப்பை ரத்துச்செய்யவும் மேலதிக வேலை நேர கொடுப்பனவு மீது விதிக்கவிருந்த வரியை வாபஸ்பெறவும் இணங்கிக்கொண்டார்.வருட இறுதி போனஸை வரியின்றி வழங்குமாறும்  தொழில்தருநர்களை மக்ரோன் கேட்டிருக்கிறார்.

ஆனால், தனவந்தர்கள் மீது புதிய வரியொன்றை விதிக்கவேண்டும் என்ற ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கையை அவர் தொடர்ந்து எதிர்த்துக்கொண்டேயிருக்கிறார். அவ்வாறு புதிய வரி விதிக்கப்பட்டால் அது கூடுதல் தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதில் தொழில் தருநர்களுக்கு இருக்கக்கூடிய ஆற்றலைப் பலவீனப்படுத்திவிடும் என்று ஜனாதிபதி தனது நிலைப்பாட்டுக்கு நியாயம் கற்பிக்கிறார்.

நாட்டை வதைக்கின்ற பிரச்சினைகளுக்கு குறிப்பாக, கிராமங்களில் பொது நிருவாகத்தின் சீர்குலைவுக்கு அடுத்தடுத்து பதவியில் இருந்த அரசாங்கங்களின் தவறுகளையே காரணமாக மக்ரோன் கூறியிருக்கின்ற போதிலும், " இன்றைய நிலைவரத்துக்கான எனது பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். எனக்கு வேறு அக்கறைகளும் முன்னுரிமைக்குரிய விவகாரங்களும் இருக்கின்றன என்று நீங்கள் நினைக்கக்கூடியதாக நான் நடந்தகொண்டிருக்கக்கூடும்.எனது பேச்சுக்களினால் உங்களில் சிலர் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும்.ஒன்றரை வருடகாலமாக உங்களுக்கு தேவையானவற்றை போதுமானளவு விரைவாகவும் உறுதியாகவும்  நிறைவேற்றித்தர எங்களால் முடியாமல் போயிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.....இதற்கான பொறுப்பில் எனது பங்கை நான் ஒப்புக்கொள்கிறேன்".என்று தனது நாட்டு மக்களிடம் மன்றாட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.

மக்ரோனின் நடத்தைகளை அனுபவக்குறைவின் விளைவானவை என்றோ அல்லது கர்வத்தனமானவை என்றோ எவ்வாறு அழைத்தாலும், டிசம்பர் 21 தனது 41 வது வயதை அடையவிருக்கும் இளம் ஜனாதிபதியான அவர் 18 மாதங்களுக்கு முன்னர் பதவிக்கு வந்ததறகுப் பிறகு சாதாரண மக்களிடமிருந்து தன்னைத் தூரவிலக்கிக்கொண்டே வந்திருக்கிறார் என்பது முற்றிலும் உண்மையே.

பிரான்ஸுக்கென்று மக்ரோன் வகுத்திருக்கும் திட்டங்களுக்கும் பொதுமக்களுடைய அபிலாசைகளுக்கும் இடையில் தொடர்ச்சியாக அதிகரித்துக்கொண்டிருக்கும் பிளவும் மக்களின் மனக்குறைகளைக் கவனிப்பதில்  அவர் திரும்பத்திரும்ப காட்டிவந்திருக்கும் அலட்சியமும் இறுதியில் " மஞ்சள் அங்கி இயக்கம் " ( ) என்ற புதிய போராட்ட இயக்கத்தின் தோற்றத்துக்கு வழிவகுத்தன.

இணையத்தின் ஊடான மனுக்களாக தொடங்கிய செயற்பாடுகள் வீதி மறியலுக்கான முகநூல் அழைப்புக்களாகவும் ஜனாதிபதிக்கு எதிரான வேறு வடிவங்களிலான ஆர்ப்பாட்டங்களாகவும் தீவிரமடைந்தது. இறுதியில் முழு நாடுமே ஒரு ஸ்தம்பித நிலைக்கு வந்தது. தற்போது நடைமுறையில் இருக்கும் வரி முறைமையை முற்றாக மாற்றியமைக்கவேண்டும், 40 சதவீத சம்பள உயர்வு வழங்கவேண்டும், அரசாங்கத்துறையை தரமுயர்த்தவேண்டும் என்பன மஞ்சள் அங்கி போராட்டக்காரர்கள் முன்வைத்த பெருவாரியான கோரிக்கைகளில் முக்கியமானவை.அரசாங்க வைத்தியசாலைகள், பாடசாலைகளின் ( குறிப்பாக கிராமங்களிலும் புறநகர்ப்பகுதிகளிலும் உள்ளவை) தரம் கடுமையாக வீழ்ச்சியடைந்துவந்திருப்பதாகவும் பெருமளவு வாக்குறுதிகளை வழங்கிக்கொண்டு கடந்த வருடம் அதிகாரத்துக்கு வந்த மக்ரோன் அந்தப் பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதில் பெரிதாக கவனம் செலுத்தவில்லை என்றும் நீண்டகாலமாகக் குறைகூறப்பட்டுவந்தது.

டிசம்பர் 1 பாரிய மக்கள் போராட்டத்துக்குப் பிறகு   மேற்கொள்ளப்பட்ட அபிப்பிராய வாக்கெடுப்பொன்றின் மூலம் மஞ்சள்அங்கி போராட்டக்காரர்களுக்கு 81 சதவீதமான பொதுமக்களின் ஆதரவு இருக்கின்றது என்பதும் பிரெஞ்சு சனத்தொகையில் சுமார் 80 சதவீதமானவர்கள்  மக்ரோன் எதேச்சாதிகாரியாக நடந்துகொள்கிறார் என்று இன்று நினைக்கிறார்கள் என்பதும் 71 சதவீதமானவர்கள் அவரை கர்வத்தனமானவர் என்று நினைக்கிறார்கள் என்பதும் தெரியவந்திருக்கிறது.

ஜனாதிபதி மக்ரோன் சாதாரண மனிதனிடமிருந்து தூரவிலகிநிற்கிறார் என்ற உண்மையை அவரது மனைவி பிறிகிற் மக்ரோன் கூட ஒத்துக்கொள்கிறார்." இப்போது துரதிர்ஷ்டவசமாக நாம் தனித்துப் போயிருக்கிறோம்.எலீஸி மாளிகை வாழ்க்கை எமக்கு அதைத்தான் தந்திருக்கிறது.நாம் எவரையும் நம்பமுடியாது.நாம் ஒன்றாக தனித்து இருக்கின்றோம். அது எப்படயும் ஒரு தனிமையே.நான் இம்மானுவேலை நம்புகிறேன்.இம்மானுவேல் என்னை நம்புகிறார் " என்று மனைவி அண்மையில் கூறியதாக ஊடகங்கள் மூலம் அறியக்கூடியதாக இருக்கிறது.65 வயதான பிறிகிற் மக்ரோன் ஜனாதிபதியின் உத்தியோகத்தர்களிடம் "அவர் மிகவும் கர்வத்தனமானவராகவும் முன்கோபியாகவும் இருக்கிறார் என்பதை அவருக்கு தெரியப்படுத்துங்கள் " என்று ஆலோசனை கூறியதாக செய்தி வெளியாகியிருக்கின்றது.

ஜனாதிபதியின் உதவியாளர்களும் மனைவியும் செய்யமுடியாததை மஞ்சள் அங்கி இயக்கம் செய்துகாட்டியிருக்கிறது.பிரான்ஸில் மஞ்சள் அங்கிக்காரர்களின் போராட்டம் வெற்றி பெற்றதை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது ஐரோப்பாவின் ஏனைய பாகங்களிலும் அதே போன்ற போராட்ட இயக்கங்கள் தோன்றுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்று நம்பலாம்.