மட்டி வாதத்திற்கும், குழப்பவாதிகளுக்கும் வைக்கப்படும் ஆப்பு - ‘கலாநிதி’ சேரமான்

December 11, 2016

கடந்த ஆண்டு தமது இல்லங்களிலும், ஆலயங்களிலும் சுடரேற்றி மாவீரர்களைத் தமிழீழத் தாயக மக்கள் நினைவுகூர்ந்த பொழுது சிங்களம் கண்டும் காணாதது போன்று நடந்து கொண்டமையானது, இவ்வாண்டும் மாவீரர் நாள் நிகழ்வுகளை மேற்கொள்வதற்கு இடையூறுகளை ஏற்படுத்தாது என்ற நம்பிக்கையைப் பெரும்பாலான மக்களிடையே ஏற்படுத்தியிருந்தது.

ஆனாலும் மாவீரர் நாள் நிகழ்வுகளை முன்னெடுப்பதற்கான அனுமதி குறித்து முன்னுக்குப் பின் முரணான முறையில் சிங்கள அமைச்சர்கள் வெளியிட்ட கருத்துக்கள், இறுதி நேரத்தில் ஏதாவது சதிவேலைகள் செய்து மாவீரர் நாள் நிகழ்வுகளைச் சிங்களம் தடை செய்து விடக்கூடும் என்ற சலசலப்பையும் மக்கள் மத்தியில் தோற்றுவிக்கத் தவறவில்லை.

இவ்வாறானதொரு பின்புலத்தில் யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்டியங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஒருவருடன் இரண்டு வாரங்களுக்கு முன்னர் தொடர்பு கொண்ட புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒருவர், ‘சிங்கள அரசு தடைவிதித்தாலும் மக்களை அணிதிரட்டி மாவீரர் நாள் நிகழ்வுகளை எழுச்சியுடன் தமிழீழத்தில் நீங்கள் நடத்தலாம் அல்லவா?’ என்று ஆலோசனை வழங்கியிருந்தார். எனினும் இதற்குப் பதிலளித்த குறிப்பிட்ட வடக்கு மாகாண சபை உறுப்பினர், ‘மக்கள் பெரியதளவில் வர மாட்டார்கள். எனவே நீங்கள் நினைப்பது போல் மாவீரர் நாள் நிகழ்வுகளை இங்கு நடத்த முடியாது’ என்று எடுத்தெறிந்து பதிலளித்திருந்தார்.

குறிப்பிட்ட வடக்கு மாகாண சபை உறுப்பினர் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் சிங்களத்தின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாது ஒவ்வொரு ஆண்டும் பொது இடங்களில் மாவீரர்களுக்கு சுடர் ஏற்றி நினைவுகூரல் நிகழ்வுகளை முன்னெடுத்து வந்தவர். ஒரு தடவை பொது இடம் ஒன்றில் தீபமேற்றி மாவீரர்களுக்கு இவர் சுடரேற்றிக் கொண்டிருந்த பொழுது அங்கு வந்த ஆயுதம் தரித்த சிங்கள காவல்துறையினர், தீப்பந்தத்தைக் காலால் உதைத்து சுடரேற்றல் நிகழ்வைக் குழப்பியிருந்தார்கள். இவ்வாறு கடந்த காலத்தில் துணிச்சலுடன் மாவீரர்களுக்கான நினைவுகூரல் நிகழ்வுகளை நடாத்தி வந்த இந்த மாகாண சபை உறுப்பினர், மாவீரர்களை நினைவுகூர்வதற்கு மக்கள் வர மாட்டார்கள் என்று இம்முறை கூறியதுதான் மிகப்பெரும் நகைமுரண்.

இதில் வேடிக்கை என்னவென்றால், இதே பாணியிலான கருத்தையே கடந்த வாரம் சிங்கள அமைச்சர் ராஜித சேனாரட்ணவும் கூறியிருந்தார். அதாவது மாவீரர் நாள் நினைவுகூரல் நிகழ்வுகளில் வடக்குக் கிழக்கில் உள்ள மக்கள் பெருமளவில் பங்குபற்றுவதில்லை என்றும், எனவே தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரைப் பயன்படுத்தாது இவ்வாறான நிகழ்வுகளை எவராவது மேற்கொள்வதையிட்டு அரசாங்கம் பெரிதாக அலட்டிக் கொள்ளப் போவதில்லை என்றும் சேனாரட்ண அவர்கள் இறுமாப்பாகக் கூறியிருந்தார்.

இவ்வாறு சிங்கள ஆட்சியாளர்களினதும், தமிழ்த் தலைவர்கள் சிலரினதும் முகத்தில் கரியைப் பூசி இம்முறை மிகவும் எழுச்சியுடன் மாவீரர் நாள் நிகழ்வுகளைத் தமிழீழத் தாயக மக்கள் மேற்கொண்டிருக்கின்றார்கள்.

மீகனாற்ற கப்பலில் திசைவழி தெரியாது தவித்த பயணிகள் போன்று இதுகாறும் நம்பிக்கையிழந்து நின்ற தமிழினத்திற்கு இது பெரும் நம்பிக்கை அளிக்கும் ஒன்றாகும். தமிழீழத்தில் இனி எந்தக் காலத்திலும் மாவீரர்களைப் பெருமெடுப்பில் நினைவுகூர முடியாது, அவ்வாறான மனோநிலையில் தமிழீழத் தாயக மக்கள் இல்லை என்றெல்லாம் கூறப்பட்டு வந்த அனைத்து மட்டி வாதங்களுக்கும் இம்முறை தமிழீழ தாயகத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள் முற்றுப் புள்ளி வைத்திருக்கின்றன.

இது இன்னுமொரு செய்தியையும் உலகத்திற்கும், சிங்களத்திற்கும் ஐயம்திரிபற உணர்த்தியிருக்கின்றது. நீறுபூத்த நெருப்பாகத் தேசிய விடுதலை உணர்வைத் தமது இதயத்தில் சுமந்து நிற்கும் தமிழீழத் தாயக மக்கள், சிங்கள தேசத்தின் ஆறாம் திருத்தச் சட்டம் என்ற இரும்புக் கரம் அகற்றப்பட்டு, உரிய சந்தர்ப்பம் வழங்கப்பட்டால் தமிழீழத் தனியரசே தமது அரசியல் வேணவா என்பதை சனநாயக வழியில் வெளிப்படுத்துவதற்குத் தயாராக உள்ளார்கள் என்பதுதான் அது.

இதன் மூலம் மிகப்பெரும் மாயை ஒன்றும் உடைத்தெறியப்பட்டிருக்கின்றது. தமிழீழ தாயக மக்களும், புலம்பெயர்வாழ் தமிழர்களும், தமிழீழ விடுதலைக்கு உறுதுணை நிற்கும் தாய்த் தமிழகத் தொப்புள் கொடி உறவுகளும் ஒரே கோணத்தில் சிந்திக்கவில்லை என்ற மாயைதான் அது.

பொதுவாக 2009 வைகாசி 18இற்குப் பின்னர் புலம்பெயர் தேசங்களில் நடைபெறும் மாவீரர் நாள் நிகழ்வுகள், ஒவ்வொரு ஆண்டும் பெரும் சலசலப்புக்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் மத்தியிலேயே நிகழ்வதுண்டு. கார்த்திகை மாதம் நெருங்கி விட்டாலே போதும். கடந்த காலத்தில் ‘ஒப்ரேசன் டபிள் எட்ஜ்’ (இரட்டைக் கூர்வாள் நடவடிக்கை) என்ற குறியீட்டுப் பெயருடன் கே.பியின் கையாட்களைக் கொண்டு கோத்தபாய ராஜபக்ச தொடங்கிய எதிர்ப்புரட்சி நடவடிக்கையின் கதா நாயகர்கள் தமது கைவரிசைகளைப் புலம்பெயர் தேசங்களில் தொடங்கி விடுவார்கள்.

கடந்த 1989ஆம் ஆண்டில் இருந்து புலம்பெயர் தேசங்களில் மாவீரர் நாள் நிகழ்வுகளை நடாத்தி வரும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினதும், அதன் மறுமுக அமைப்புக்கள் மற்றும் நேச அமைப்புக்களின் செயற்பாட்டாளர்கள் மீது அவதூறு பரப்பும் சங்கீத போதனைகளில் இருந்து தொடங்கும் இந்தக் கோத்தபாயவின் கதா நாயகர்களின் கைவரிசைகள், செயற்பாட்டாளர்களைத் தாக்குவது, கொலை செய்வது, கொலை முயற்சிக்கு உட்படுத்துவது எனப் பல வடிவங்களில் நீண்டு செல்லும்.

இவையயல்லாம் தோல்வியுறும் பொழுது, போட்டி மாவீரர் நாள் நிகழ்வுகளை இந்தக் கதா நாயகர்கள் அறிவிப்பார்கள். அதிலும் இவ்வாறான திருவிளையாடல்கள் அதிக அளவில் அரங்கேறுவது பிரான்சிலும், பிரித்தானியாவிலும்தான். இம்முறையும் இதுதான் நடந்தது.

ஏறத்தாள இரண்டு ஆண்டுகளாக ஆட்சியதிகாரத்தில் கோத்தபாய இல்லாத சூழமைவிலும் இவ்வாறு இவர்கள் நடந்து கொள்வது ஆச்சரியத்திற்குரியது.

எது எவ்வாறிருந்தாலும் இம்முறை தமிழீழ தாயகத்தில் பெரும் எழுச்சியுடன் மாவீரர் துயிலும் இல்லங்களில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள், இந்த இரண்டகர்களின் முகங்களிலும் கரிபூசியுள்ளது எனலாம்.

எது நடந்தாலும், நடக்காது விட்டாலும் கடந்த இருபத்தேழு ஆண்டுகளாக நடைபெறுவது போன்று ஒவ்வொரு ஆண்டும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவும், அதன் மறுமுக அமைப்புக்களும், நேச அமைப்புக்களும் இனியும் புலம்பெயர் தேசங்களில் மாவீரர் நாள் நிகழ்வுகளை எழுச்சியுடன் நடாத்தத் தான் போகின்றன. அதேநேரத்தில், வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாக சிங்களம் நடந்து கொண்டாலேயயாழிய, இனிவரும் காலங்களில் 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் நடைபெற்றது போன்று தமிழீழ தாயகத்திலும் மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெறும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.

அத்தோடு, கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற வடக்கு மாகாண சபைத் தேர்தலின் பொழுது தமிழ் அரசியல்வாதிகள் உறுதியளித்தமை போன்று தமிழீழ தாயகத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை மீளமைக்கும் பணிகளும் இனிவரும் மாதங்களில் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கலாம்.

இதன் விளைவாகக் கடந்த ஏழரை ஆண்டுகளாக மாவீரர் நாள் காலங்களில் புலம்பெயர் தேசங்களில் குவிந்திருந்த ஊடகங்களினதும், பன்னாட்டு இராசதந்திரிகளினதும், கொள்கை வகுப்பாளர்களின் கவனம் இனித் தமிழீழ தாயகத்தில் நடைபெறப் போகும் மாவீரர் நாள் நிகழ்வுகளின் பக்கம் பெருமளவில் திரும்பும் என நாம் கட்டியம் கூறலாம்.

இவர்களின் கவனம் மட்டுமன்றி புலம்பெயர்வாழ் தமிழர்களின் கவனமும் தமிழீழ தாயகத்தின் பக்கமே திரும்பும் என்று கூறினாலும் மிகையில்லை.

இது பிரான்ஸ் போன்ற நாடுகளில் கோத்தபாயவின் கதா நாயகர்கள் மேற்கொள்ளும் போட்டி மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கும், மாவீரர் துயிலும் இல்லத்தை நிர்மாணிக்கும் போர்வையில் பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் காட்டுப்புற மாட்டுப் பண்ணையில் நிகழும் சங்கீத போதனைகளுக்கும் ஆப்பாக இறங்கப் போகின்றது என்பதை மட்டும் இப்போது கூறலாம்.

நன்றி: ஈழமுரசு

செய்திகள்