மண்ணுறங்கும் மாவீரம் மன்னிக்குமா? - சோழ.கரிகாலன்

வெள்ளி நவம்பர் 18, 2016

எமது தாய்த் தமிழீழ தேசத்தின் விடுதலைக்காகவும், எமது அடுத்த தலைமுறையின் சுதந்திர வாழ்விற்காகவும், இரத்தம் தோய்ந்த களமுனைகளில், எதிரிக்குப் புலிச் சொப்பனமாவிருந்து, வீழ்ந்துபட்ட எம் மாவீரத் தெய்வங்களின் புனிதமான மாதம் இது. மாவீரர்களின் விதைகுழிகள் கூடத், தம் இனவெறிக்கு அச்சுறுத்தலாகவும், தமிழ் வீரத்தின் அடையாளமாகவும் விளங்கிவிடும் என்று அஞ்சிய சிங்கள அரசு, இந்தத் தெய்வங்களின் துயிலுமில்லங்களை இடித்து அடையாளம் இல்லாமல் செய்துள்ளது.

ஆனால் தமிழினத்தின் நெஞ்சங்களில் குடியிருக்கும் இந்த மாவீரர்களையும், அவர்களைப் பூசிக்கும் நெஞ்சுரத்தையும் அழிப்பதற்கு ஆக்கிரமிப்பாளர்களால் முடியவில்லை.

இதனால், இதிலிருந்து மக்களைத் திசைதிருப்ப, தாயகத்தில் இளைய தலைமுறையைக் குறிவைத்து, அவர்களின் எதிர்காலத்தைச் சீரழிக்கவும், எக்காரணம் கொண்டும், அவர்களிற்கு விடுதலை உணர்வானது வந்துவிடாமல் இருக்கவும், எதிரி மிக அவதானமாகச் செயற்படுகின்றான். தாயகத்தின் ஒரு தலைமுறையானது, பெரும் வசதிக்கும், தன்னையே அழித்துக் கொள்ளும் மோசமான பழக்கவழக்கங்களிற்குள்ளும் சிக்கிச் சீரழிவை நோக்கிச் செல்வதற்குப், புலம் பெயர் தேசங்களில் வாழும் உறவுகளும் முக்கிய காரணியாக அமைந்து விடுகின்றார்கள், இவர்கள் அனுப்பும் அதீதமான பணமே, சீரழிவிற்கான முக்கிய காரணியாக அமைந்து விடுகின்றது என்பது மறுக்க முடியாத உண்மை.

இந்த வலைக்குள் சிக்காமல், விடுதலை உணர்வுடன் செயற்படும் மாணவர்கள், இளைஞர்கள், சிங்கள அரசினால் மிகக் கொடுமையாக வேட்டையாடப்பட்டு வருகின்றனர். காணாமற்போவதும் படுகொலை செய்யப்படுவதும் இன்று அன்றாட நிகழ்வாகி வருகின்றது.

ஆனால், இன அழிப்பின் அடையாளங்களையும், உண்மைகளையும் மறைக்கும் சிங்கள அரசின் கவர்ச்சிகரமான உல்லாசப்பயண விளம்பரங்களிற்குள்ளும் நாம் வெகுவாகவே சிக்கிக் கொள்கின்றோம். இதற்குத் தமிழ்த் தேசியத்தைத் தமக்கான போர்வையாகக் கொண்டு இயங்கும் செல்வந்தத் தொலைக்காட்சி ஊடகமும், சிங்களத்திற்குச் சேவை செய்து, மக்களிற்கு எம் தாய் மண்ணின், கொடூரங்களை மறைத்து, உல்லாசபுரியாகக் காட்டி ஏமாற்றி வருகின்றது. இதற்குள் சிக்கித் தாயகம் செல்லும் உறவுகளில் பலர், எம் மாவீரச் செல்வங்கள், அந்த மண்ணிற்குள் மறைந்துகிடப்பதைக் கூட உணராமல், பெரும் உல்லாசக்கூத்தைச் செய்து விட்டு வருவது வேதனைக்குரியது.

அத்தோடு நிற்காமல் சிங்களத்தின் ஊதுகுழல்களாக இங்கும் வந்து பிரச்சாரத்தை மேற்கொள்கின்றனர். இதில் பலர் தேசியத்தைத் தங்களின் விளம்பரமாகக் காட்டி, இதுவரை முகமூடி அணிந்து வந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. சிங்களம், எம் தாய் மண்ணில், மாவீரர்களின் அடையாளங்களை அழிக்கும் அத்தனை முயற்சிகளையும் முனைப்புடன் செய்து வந்தாலும், புலம்பெயர் தேசங்களில் எழுச்சியுடன் நடந்து வரும் மாவீரர் தினங்களை ஒடுக்க வழிதெரியாமல் ஓடியலைந்தது. புலம்பெயர் தேசங்களின் மக்கள் பிரதிநிதிகளை அச்சுறுத்தியும், தனது கைக்கூலிகளை ஏவிப் படுகொலை செய்தும் பார்த்தது. தேசியத்தின் சத்திய உணர்வோடு நிற்கும் ஊடகங்களையும் முடக்கிப் பார்த்தது. மாவீரர் தினங்களை உடைத்தெறியும் நடவடிக்கைகளையும் நிறைவேற்றி வருகின்றது.

கடந்த சில வருடங்களாக மேற்கொண்ட இப்படியான சிங்கள அரசின் செயற்பாடுகள், சில வருடங்களாக வெற்றி கொள்ளப்பட்டு, மாவீரர்கள் வணங்கப்பட்டு வந்தனர். ஆனால் இது எதிரிக்கு மிகவும் அச்சுறுத்தலாகவே உள்ளது. எமது தேசியத் தலைமையினால் உருவாக்கப்பட்டுப் புலம்பெயர் மக்களின் பிரதிநிதிகளாகத் தொடர்ந்து செயற்படும், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரே காலா காலமாக மக்களிற்கான அனைத்துச் செயற்பாடு களையும் ஒருங்கிணைத்து வருகின்றனர். இது தமிழீழத் தேசியத் தலைமையினால் வழங் கப்பட்ட ஆணையாகும். இந்த அடிப்படை யிலேயே இன்றும் மக்கள் பிரதிநிதிகளாக செய்றபட்டு வரும் இவர்களே, மாவீரர் தின நிகழ்வுகளையும் மாவீரர் வணக்கத்தினையும் ஒருங்கிணைத்து வருகின்றனர்.

ஆனால் இந்த வருடம் மீண்டும், இந்த மாவீரரிற்கான வணக்கத்திற்கான இடையூறுகள் முளைக்கத் தொடங்கி உள்ளன. மக்களினைக் குழப்பி, அவர்களின் மனங்களில் வெறுப்பை ஏற்படுத்தும் வகையில், இந்த நடவடிக்கைகள் அரங்கேறி வருகின்றன. பெரும் முயற்சியுடன், சிறு சிறு குச்சிகளை ஒன்று சேர்த்து, பெரும் நம்பிக்கையுடன் அழகிய கூடாகக் கட்டி, தனது அடுத்த தçலைமுறைக்கான முட்டைகளை இட்டுவைத்து விட்டு, நம்பிக்கையுடன் காகம் செல்ல, எந்த முயற்சியும் இல்லாமல் அடுத்தவன் வீட்டைக் கைப்பற்றும் திருட்டு நோக்குடன், குயில் வந்து அந்தக் கூட்டில் முட்டையிடுமாம். முட்டை இடுவதோடு நின்று விடாமல், நம்பிக்கையுடன் காகம் அடுத்த தலைமுறைக்காக இட்ட முட்டைகளையும் கொத்தி உடைத்து அழித்துவிடுமாம் இந்தக் குயில்.

இதுபோலவே தான் இன்றைய புலம்பெயர் தேசங்களில் நிலைமைகள் உருவாகி உள்ளன. முக்கியமாக இது பிரான்சில் களமேறி உள்ளது. மாவீர்களைப் பூசிக்கவும், தங்களது குடும்பத்தில், தேசத்திற்காய் வீழ்ந்து பட்ட பிள்ளைகளையோ, சகோதர சகோதரிகளையோ வணங்கி நின்று, அந்த நினைவில் தாயகத்தை நேசிக்க வரும் மக்களையும், அவர்கள் மனம் நோகும் வண்ணம் குழப்பத்தை உருவாக்கி வருகின்றனர்.

எப்படி எதிரியானவன், எமது மாவீர்கள் துயிலுமில்லங்களை உடைத்தெறிந்து, மாவீர வணக்கங்களைச் செய்வதைத் தடுத்து, தனது அராஜகத்தையும் இனவழிப்பையும் செய்து வருகின்றானோ, எப்படி எதிரியானவன் புலம்பெயர் தேசங்களிலும் விடுதலைக்கனவைச் சிதைத்தொழிக்க முயல்கின்றானோ, அப்படியான நடவடிக்கைக்கு ஒப்பான களமே பிரான்சில் திறந்து விடப்பட்டுள்ளது.

எமக்கான விடுதலைக்காகத் தம் உயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களும், தமிழீழ விடுதலைப் புலிகளும், தீவிரவாதப் பட்டியலில் இருந்து ஐரோப்பிய நீதிமன்றத்தினால் நீக்கபடுவதோடு, தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடை செய்ததே தவறு என்ற நிலைக்கு ஐரோப்பிய ஒன்றியம் வந்திருக்கும் நிலையில், மீண்டும் இப்படியான களமுனைகள் பிரான்சில் விரிந்திருப்பது, இந்தத் தடைகள் நீங்குவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் போன்ற தோற்றப்பாட்டையே காட்டிநிற்கின்றது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்தத் தீர்மானமானது, சிறீலங்கா அரசாங்கத்தின் தலையில் பேரிடியாக இறங்கி உள்ளது. விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகள் என்ற முத்திரை குத்தி, அதன் சாக்கில் இலட்சக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்றொழித்த சிங்களப் பேரினவாதம், இன்று அதே விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் இல்லை என்று சர்வதேசம் கூறி நிற்கையில், தான் செய்து முடித்த இனப்படுகொலை, தன் கழுத்தை நெரிக்கப்போவதை உணரத் தொடங்கி உள்ளது. எந்த விலைகொடுத்தும் இதனைத் தடுப்பதற்காகச் சிங்களம் முயன்று வருகின்றது. புலம்பெயர் தேசங்களில், மீண்டும், விடுதலைப் புலிகள் என்ற பெயரில் குழப்பங்களை ஏற்படுத்துவதன் மூலம் இதனைச் சாதிக்கச் சிங்களம் களமிறங்கியுள்ளமை தெளிவுபடத் தொடங்கி உள்ளது.

மக்களின் தெளிந்த, தழிழீழத் தேசியத்தின்பால் ஈர்ப்புக் கொண்ட சிந்தனையும், உண்மையான, அர்ப்ணிப்பான செயற்பாடுகளை இனங்காணலுமே, என் இனத்திற்கான இருப்பையும், எமக்கான சுதந்திரதேசத்திற்கான உறுதியையும், எதிரிகளிற்கு உணர்த்தி நிற்கும்.

சத்தியத்தின் வடிவமாய், ஒரு உன்னத இலட்
சியத்தின் இலக்காய், தம்முயிர் தந்து மறு உயிர் காக்கும் மாபெரும் விடுதலைத் தியாகத் தீப்பிழம்பாய், கல்லறைகள் உடைக்கப்படாலும், தாங்கள் நேசித்த தமிழீழ மண்ணிற்குள், இன்னமும் தாயக விடுதலையின் கனவுடன், சுதந்திர தமிழீத் தேசத்தின் சுவாசத்திற்காக ஏங்கிக் கிடக்கும், எம் மாவீரத் தெய்வங்களின் வழிபாட்டில், சுயலாபங்களிற்காக இடையூற்றையும் குழப்பங்களையும் ஏற்படுத்துபவர்களை, மண்ணுறங்கும் மாவீரர்கள் என்றும் மன்னிக்கப்போவதில்லை.

நன்றி: ஈழமுரசு