மதவாத சக்திகளை, ஊடுருவலை இனங் காணுவோம், நிராகரிப்போம்!

Wednesday May 30, 2018

அண்மையில் சாவகச்சேரியில் பசு வதைக்கெதிரான போராட்டம் ஒன்றில் கலந்து கொண்ட சிவசேனை எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் அமைப்பின் தலைவர் ஊடகங்களுக்கு வழங்கிய கருத்துக்கள் தொடர்பில் தமிழ் சிவில் சமூக அமையம் பெரும் கரிசனை கொள்கின்றது. 

மேற்படி சிவசேனையின் தலைவர் இந்தப் பூமி ஒன்றில் இந்து அல்லது பௌத்த பூமி என்றும் இந்து மற்றும் பௌத்தர்களின் கலாசாரத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் இங்கு இருக்க முடியாது வெளியேறி விட வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தார். அக்கருத்தை நாம் முற்றாக மறுப்பதோடு எமது வன்மையான கண்டனங்களையும்  பதிவு செய்கின்றோம். அத்தகைய கருத்துக்களை ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தின் கருத்துக்கள் போன்றோ ஏன் இந்து / சைவ மதத்தவரது கருத்து என்றோ பாவனை செய்து சிவசேனை அமைப்பினர் பேச விளைவது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. இத்தகைய கருத்துக்கள் பரவலாக, தமிழ் சமூகத்தின் பிரதான நீரோட்டத்தில் கலந்து விடக் கூடாது என்ற விருப்பில் இவ்வறிக்கையை வெளியிடுகிறோம். 

பொது வெளிகளும் அவற்றை ஒழுங்கு படுத்தும் அரச அதிகாரமும் அனைவருக்கும் பொதுவானவை. குறிப்பிட்ட மதம் ஒன்று பொது வெளியில் எதனை செய்யலாம் எதனை செய்யக் கூடாது எனத் தீர்மானிக்க முடியாது. குறிப்பாக அப்பொது வெளியில் குறிப்பிட்ட மதம் பெரும்பான்மை மதமாக இருக்கும் பட்சத்தில் அப்பெரும்பான்மை மதத்தின் வழக்காறுகளையும் நம்பிக்கைகளையும் அப்பொது வெளிகள் மூலமாக எல்லோர் மீதும் திணிக்க முயற்சிப்பது வன்முறையாகும். அதன் காரணமாகவே பொது வெளிகளும் அவற்றை ஒழுங்கு படுத்தும் அரச அதிகாரமும் மதச் சார்பற்றவையாக இருக்க வேண்டும். பன்மைத்துவ சமூகங்களில் பொது வெளிகளின் மதச் சார்பின்மை மிகவும் முக்கியமானது. 

மதச் சார்பின்மையை வலியுறுத்துவது மதங்கள் வேண்டாம் என்று சொல்வதற்கு சமனாகாது. மதம் தனிப்பட்ட நம்பிக்கையின் பாற்பட்டது. அவ் நம்பிக்கையை உடையோர் அந்நம்பிக்கையை சார்ந்தோரோடு சேர்ந்து அவர்களின் தனிப்பட்ட உரிமைகளை மதித்து அந்நம்பிக்கையின் பாற்பட்ட வழக்காறுகளை பின்பற்றலாம். ஆனால் அதனை தம் மதத்தவர் மீதோ தம் மதத்தை சேர்ந்த  பெண்கள் மீதோ பிற மதத்தவர் மீதோ அல்லது மத நம்பிக்கையற்றவர்கள் மீதோ திணிப்பது அறமாகாது. 

இந்த அறத்தை தமிழர்களின் சுயநிர்ணயத்திற்காக விடுதலைப் போராட்டம் மிகவும் ஆழமாக தன்னுள் உள்வாங்கியிருந்தது. தமிழ் தேசியவாதம் ஓர் மதத் தேசியவாதம் அல்ல. சிங்கள பௌத்த தேசியவாதம் ஓர் பேரினவாத மதம் சார் தேசியவாதம். இலங்கை பௌத்த நாடாக வரையறுக்கப்படுவதை நாம் மூர்க்கமாக எதிர்த்துக் கொண்டு எமது தாயகத்தை மதம் கொண்டு சாயமிடுவதையும் அம் மதத்தை சாராதோருக்கு இடமில்லை என்று கூறுவதையும் நாம் ஒரு போதும் அனுமதிக்க முடியாது. 

இந்த மதவாத ஊடுருவல் அண்டை நாட்டின் ஆளும் கட்சியின் அரசியலினால் ஆதரிக்கப்படுவதை நாம் வெளிப்படையாகக் காணுகின்றோம். இந்திய மேலாதிக்க சிந்தனை தமிழர்களை கூறு போடவும் எமது போராட்டத்தின் அறத்தை சிதைக்கவும் முயற்சிக்கின்றது. இது எமக்கு புதிதல்ல. தமிழ் சமூகம் இந்துத்துவாவை வரித்தால் எமக்கு இந்திய அரசின் துணையோடு விடுதலை கிடைக்கும் என எம்மில் சிலர் முட்டாள்தனமாக கனவு காணுகின்றனர். அது ஒரு போதும் நடக்கப் போவதில்லை. அப்படியான விடுதலை எமக்குத் தேவையும் இல்லை. விளிம்பு நிலையில் எம்மத்தியில் உள்ள இந்துத்துவ சக்திகளுக்கு ஊடகங்களிலோ தமது அமைப்புக்களிலோ இடம் கொடுக்க வேண்டாம் என நாம் சம்பந்தப்பட்ட அனைவரையும் வினயமாக கேட்டுக் கொள்கின்றோம்.   

இறுதியாக, இந்த அறிக்கை சைவ / இந்து மக்களுக்கு எதிரானது என இந்துத்துவா சக்திகள் திரிபுபடுத்தக்கூடும். அல்லது இஸ்லாமிய மதத்தை பின்பற்றுவோர் பொது வெளியில் மதச் சார்பின்மையை ஏற்றுக் கொள்ளாத போது நாம் ஏன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என இவ்வறிக்கைக்கு மறுப்பு விதண்டாவாதம் செய்யக் கூடும். எந்த மதத்தை, யார் மீதும், பொது வெளியின் மீதும் எவர் திணிக்க முனைந்தாலும் தமிழ் சிவில் சமூக அமையம் அதனை எதிர்க்கும். அது பௌத்தமாக இருந்தாலும் சரி கிறிஸ்தவமாக இருந்தாலும் சரி சைவமாக / இந்துவாக இருந்தாலும் சரி இஸ்லாமாக இருந்தாலும் சரி. எமக்கு தமிழ் அரசியல் சமூகத்தின் அறவியல் ஒழுக்கம் எல்லாவற்றிலும் முக்கியமானது. அதனாலேயே இவ் நிலைப்பாட்டை நாம் வெளிப்படுத்த வேண்டிய தேவை எழுந்தது. 

பொ. ந. சிங்கம் 
பொதுச் செயலாளர் 

குமாரவடிவேல் குருபரன் 
பேச்சாளர்.