மதுவிலக்கை விவாதிக்க அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும்

திங்கள் ஓகஸ்ட் 03, 2015

மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் வழிமுறைகளைக் கண்டறிய அனைத்துக் கட்சிக்கூட்டத்தைத் தமிழக அரசு உடனே கூட்டவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். 

 

தமிழ்நாட்டில் மதுக்கடைகளை நிரந்தரமாக மூடி மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை இப்போது அனைத்து மக்களின் கோரிக்கையாக மாறிவிட்டது. அரசியல் கட்சிகளும் ஒருமித்த குரலில் இதை வலியுறுத்துகின்றன. இந்நிலையில் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களோ மதுவிலக்கை நடைமுறைப்படுத்தினால் கள்ளச்சாராயம் பெருகிவிடும் எனவும், அரசாங்கத்துக்கு வருவாய்க் குறைந்துவிடும் எனவும் கூறிவருகின்றனர். தமிழ்நாட்டின்மீது அக்கறையற்ற இத்தகைய வாதம் கண்டனத்துக்குரியது. 

 

கள்ளச்சாராயத்தைத் தடுக்கும் வழிகளைக் கண்டறியவும் , தமிழ்நாட்டுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை எப்படி ஈடுசெய்வது என்பதை விவாதிக்கவும் தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும். மதுவிலக்கைத் தேசியக் கொள்கையாக அறிவிக்கவேண்டும், மதுவிலக்கால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட நிதி உதவி அளிக்கவேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி அதில் தீர்மானம் நிறைவேற்றவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.