மனிதம் மரணித்து விட்டது!

ஞாயிறு ஜூன் 24, 2018

காலத்தின் கட்டளைக்குள் கட்டுண்டு போன நாம், காலத்தை விட வேகமாய் ஓடுகின்றோம். நாம் ஓடும் பாதையின் முடிவு மரணம் என்பதை மறந்து விட்டதால்தான், இன்று மரணித்து விட்டது மனிதம்.

தமிழரின் ஜனநாயக போராட்டத்தில் உச்ச பலமாக இருந்தது தமிழீழ விடுதலைப் புலிகளின் காலம். அன்று தலைத்தூக்கி நின்ற மனிதம் இன்று வழி தவறிச் சென்று கொண்டிருக்கின்றது என்பது வேதனைக்குரிய விடயம்.

கிளிநொச்சியில் நேற்று நடத்தப்பட்ட புலி வேட்டை தமிழர்கள் மத்தியில் பெரும் வாத, பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. கிளிநொச்சி அம்பாள்குளம் கிராமத்தில் அந்த பகுதி மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திய புலி ஒன்று இளைஞர்கள் குழுவொன்றினால் கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டது.

வன ஜீவராசி திணைக்கள உத்தியோகத்தர் ஒருவர் உட்பட பத்து பேரை தாக்கிய சிறுத்தை புலி அந்தப் பகுதி மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறிய நிலையில், ஆறு மணிநேர போராட்டத்தின் பின்னர் கொலை செய்யப்பட்டது.

ஆனால், மக்களை பாதுகாக்க புலி கொலை செய்யப்பட்டாலும், அதன் பின்னரான இளைஞர்களின் செயற்பாடு பெரும்பாலான மக்களின் மனங்களை நோகடிக்கச் செய்துள்ளது.

விடுதலைப் புலிகள் ஆண்ட மண்ணில் புலியொன்று மனிதாபிமானமற்ற முறையில் கொல்லப்பட்டதாக பலரும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

அடித்து கொலை செய்த புலியை கொஞ்சம் கூட மனிதாபிமானம் இன்றி இழுத்து சென்றுள்ளனர். இது நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டிய செயல். அது மட்டும் இல்லை உயிரை துடிதுடிக்க கொன்று விட்டு செல்பி எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டிருந்தனர்.

ஒரு கால கட்டத்தில் இலங்கையில் புலிகளுக்கும் இந்தியப்படைகளுக்கும் யுத்தம் தொடங்கியவேளை புலிகளின் மூன்றாம் இலக்க முகாமில் ஒரு சிறுத்தை குட்டியும் இருந்துள்ளது.

சங்கானைக்கும் சண்டிலிப்பாய் பகுதிக்குமிடையில் திடீரென இந்திய இராணுவத்தோடு மோதல் ஆரம்பித்துள்ளது. இதில் சிறுத்தை மிரண்டு ஓடி விடாமலிருக்க ஒரு சாக்கு பையில் போட்டு கட்டி வைத்து விட்டு சண்டையை எதிர் கொண்டுள்ளனர்.

பல மணிநேரம் நீண்ட சண்டையில் ஒரு போராளி உயிரிழந்துள்ளார். இதன்போது, காயமடைந்தவர் இறந்த போராளியின் உடலையும், சிறுத்தை குட்டியையும் சுமந்து கொண்டு சென்றுள்ளார்.

இதன்போது, முற்றுகையை உடைத்து புலிகள் அளவெட்டி பக்கம் போனதும் போராளியின் உடலை புதைத்து விட்டு சிறுத்தைக்கு உணவு கொடுக்க சாக்கு பையை அவிழ்த்தபோது மிரண்டு போயிருந்த சிறுத்தை பலரை விறாண்டி கடித்துள்ளது. அதை சுட்டு கொன்றுவிட ஒரு செக்கன் போதுமானது.
ஆனால் அதனை பிடித்து பற்றை காடும் பனை மரங்களும் அதிகமாக இருந்த விளான் பகுதியில் விட்டுச் சென்றுள்ளார்கள். இது தான் மனிதம்…

சில காலத்தின் பின்னர். பிரபாகரன் வளர்த்த செல்லப் பிராணி தெல்லிப்பழையில் இந்திய இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டது விரைவில் பிரபாகரனையும் பிடித்து விடுவோம் என்று இராணுவ அதிகாரிகள் அறிவிப்பு விடுத்துள்ளனர்.

அது மட்டும் இல்லை, அந்த சிறுத்தை குட்டியின் படத்தோடு செய்தி வெளியாகியிருந்தது. அன்றிரவே தெல்லிப்பழையில் இந்திய இராணுவம் மீது தாக்குதலும் நடந்தது.

நேற்று கிளிநொச்சியில் அடித்துக் கொல்லப்பட்ட சிறுத்தைக்குட்டியை பார்த்த போது இந்த காட்சி அனைத்தும் கடந்த காலத்தை கண் முன் நிறுத்தி விட்டது.

காலை 6.30 மணியளவில் மக்கள் குடியிருப்பிற்குள் புகுந்த சிறுத்தையை மதியம் 12.30 கொலை செய்துள்ளனர். இங்கு ஒரு கேள்வி எழுகின்றது.

இந்த இடைப்பட்ட ஆறு மணித்தியாலங்களுக்குள் சிறுத்தையை கிராமத்தை விட்டு அப்புறப்படுத்த முடியாத செயலற்ற நிலையில்தான் வனஜீவராசிகள் திணைக்களம் உள்ளதா… ?

காட்டில் விலங்குகள் வாழும் இடத்தை எல்லாம் தற்போது மனிதர்கள் ஆக்கிரமித்து விட்டனர். காட்டில் உள்ள விலங்குகள் எங்குதான் செல்லும்…?

வேறு வழியில் சிறுத்தை புலியை பிடிக்க முயற்சி செய்து இருக்கலாம். சம்பவ இடத்தில் கிளிநொச்சி பொலிஸார், கிராம அலுவலர், வன ஜீவராசி திணைக்கள உத்தியோத்தர் என பலரும் கூடியிருந்தனர்.

அது மட்டும் இன்றி, சிறுத்தை நடமாட்டம் குறித்து மக்கள் அறிவித்த போது சம்பவ இடத்திற்கு வெறுங்கையுடன் சென்ற வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் இந்த சம்பவத்திற்கு பொறுப்புடையவர்கள். வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் பொறுப்பற்ற செயற்பாடும் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று.

கருவில் சுமந்த விதையின் சுவற்றை ஓங்கி மிதித்து உயர்ந்து வளரும் மரங்கள் போலே எமது மண்ணில் மனிதம் மீண்டும் மலரட்டும்… அப்போதுதான் இனி வரும் இளைய தலை முறை சிறப்பாக இருக்கும்.