மனிதாபிமானத்திலும் சிங்கள தேசம், தமிழர் தேசம்!

சனி சனவரி 20, 2018

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள வைத்திய நிபுணர்களின் பிரச்சினைக்கு உடனடி தீர்வு எட்டப்படாவிடின்  வைத்தியசாலையை மூட வேண்டிய துர்ப்பாக்கி நிலை ஏற்படலாம் என வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழு செயலாளர் வி.எஸ் சிவகரன் கடிதம் மூலம் சுகாதார  அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு  தெரிவித்துள்ளார்.

குறித்த கடிதத்தில் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளதாவது,

”மன்னார் மாவட்ட வைத்தியசாலையின் ஆளணி பற்றாக்குறையினால் நிர்வாகம் நிலையிழந்து போவதாக ஏற்கனவே  தங்களுக்கு பலமுறை கடிதம் மூலமாகவும் நேரடியாகவும் தெரிவித்திருந்ததுடன் ஜனாதிபதிக்கும் கடிதம் எழுதியிருந்தோம்.

ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் வீதியில் குழந்தை பிறப்பு நிகழும் விசித்திரத்தை ஏற்படுத்திவிட்டீர்கள். மனித வாழ்வின் அத்தியாவசிய தேவையாகிய மருத்துவ சேவையைக்கூட அந்த நாட்டு மக்களுக்கு வழங்க முடியாவிட்டால் அந்த ஆட்சி நடப்பதில் என்ன பயன்?

மனிதாபிமானத்திலும் சிங்கள தேசம், தமிழர் தேசம் என கடந்த காலத்தில் பார்த்து பழகியதையே இன்றும் தொடர் கதையாக்கியுள்ளீர்கள். இவ்வாறிருந்தால் எப்படி நல்லிணக்கம் ஏற்படும்.

கர்ப்பிணித் தாய்மார் கடந்த ஒரு வார காலமான வீதியில் இறங்கி போராடியும் எந்தவித தீர்வும் கிடைக்கிவில்லை. எவ்வித அதிகாரமும் இன்றி பெயரளவிலேயே மாகாண சுகாதார அமைச்சு இயங்குகின்றது.

மன்னார் மாவட்டத்தில் வைத்தியசாலையில் உள்ள பல்வேறு விதமான குறைபாடுகளை ஆராய்ந்து உடனடியாக தீர்வு காண வேண்டும். 

மத்திய சுகாதார அமைச்சு எங்களை வஞ்சிக்கின்றது யுத்தவடுக்களை சுமந்து ஏதிலிகளாய் உள்ள சாமானிய மக்களின் அடிப்படை உரிமையில்  வேண்டுமென்று சதி செய்து சவாரியிடுகிறீர்கள்.

உங்களால் மாவட்ட வைத்திய சாலையை சரியாக நிர்வாகிக்க விருப்பம் இல்லை  என்றால் மூடி விடுங்கள். எத்தனை தடவைகள் தான் கோரிக்கை விடுப்பது இது ஒன்றும் வலிந்து கெஞ்சிக் கடன் கேட்கும் விடயமல்ல.

விரக்தியின் உச்சநிலைக்கு உட்படுத்திவிட்டீர்கள் பாவம் எமது மக்களை ஏமாற்றாதீர்கள்! நீங்கள் மட்டுமா?  எமது மக்களால் தெரிவு செய்யப்பட்ட வன்னியில் உள்ள ஒரு அமைச்சரும் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களும் கூட இந்த விடயத்தில் எமது மக்களை பரிதாபத்திற்கு உட்படுத்தி விட்டார்கள்.

தயவு செய்து உடனடியாக எமது பிரச்சினைகளுக்கு தீர்வு கானுங்கள் . இல்லாவிடின் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவே வைத்தியசாலையை  மூட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படலாம் என மிகுந்த மன வேதனையுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.