மனித உரிமைகளை காக்க உரக்க குரல் கொடுப்போம்!

Sunday December 10, 2017

சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று கடைப்பிடிக்கப்படும் நிலையில், மனித உரிமைகளை காக்க எழுந்து நின்று உரக்க குரல் கொடுப்போம் என ஐ.நா பொதுச்செயலாளர் அண்டோனியா கட்ரஸ் கூறியுள்ளார்.

1948-ம் ஆண்டு டிசம்பர் 10-ஆம் நாள் ஒன்றுகூடிய ஐக்கிய நாடுகளின் பொது அவையால் அனைத்துலக மனித உரிமைகள் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதை பெருமைப்படுத்தும் பொருட்டு இந்நாள் சர்வதேச மனித உரிமைகள் தினமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஐ.நா.வின் பொது அவை உறுப்பினர் நாடுகளுக்கும், தன்னார்வ நிறுவனங்களுக்கும் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க 1950-ம் ஆண்டு முதல் சர்வதேச மனித உரிமைகள் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் அவையின் நிகழ்வுகளில் முதன்மையான இந்நாளில், நியூயார்கில் அமைந்துள்ள அதன் தலைமையிடத்தில் முக்கிய நிகழ்வுகள் இடம்பெறுவது வழக்கமாகும். இந்நாளில் ஐந்தாண்டுக்கு ஒருமுறை வழங்கப்படும் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் பரிசு வழங்கப்படும். மேலும் பல அரசு மற்றும் அரசு சார்பற்ற நிறுவனங்களும் இந்நாளில் பல முக்கிய நிகழ்வுகளை நடத்துவது வழக்கமாகும்.

இந்நிலையில், சர்வதேச மனித உரிமைகள் தினத்தை ஒட்டி ஐ.நா பொதுச்செயலாளர் அண்டோனியா கட்ரஸ் தனது வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:-

அமைதியான சமூகத்தின் வளர்ச்சிக்கான அடித்தளமாக மனித உரிமைகள் திகழ்கின்றது. மனித உரிமையின் உலகளாவிய உடன்பாடு என்பது ஒவ்வொரு மனிதருக்கும் கண்ணியம் மற்றும் சமத்துவத்தை அளிப்பது ஆகும், இதனை உறுதிப்படுத்த அரசாங்கங்கள் பொறுப்பேற்க வேண்டும். 

எல்லா பிராந்தியங்களிலும் மனித உரிமைகள் மீது விரோதப் போக்கு உள்ளதை நாம் காண்கிறோம். இதற்கு எதிராக எழுந்து நின்று நாம் உரக்க பேசுவது அவசியமாகிறது. இதுவே மனித உரிமைகளை காக்கும். இவ்வாறு கட்ரஸ் தனது உரையில் தெரிவித்துள்ளார்.