மனித உரிமை ஆர்வலர் லியு சியாபோ கவலைக்கிடம்!

யூலை 10, 2017

சீனாவில் நடைபெற்று வரும் ஜனநாயக படுகொலையை தோலுரித்து காட்டியதற்காக நோபல் பரிசு பெற்ற மனித உரிமை ஆர்வலர் லியு சியாபோ புற்றுநோய் முற்றிய நிலையில் கவலைக்கிடமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

சீனாவில் ஜனநாயகம் தொடர்பான சார்ட்டெர் 8 என்ற நூலை கடந்த 2009-ம் ஆண்டு வெளியிட்ட காரணத்துக்காக அந்நாட்டின் பிரபல எழுத்தாளரான லியு சியாபோ என்பவருக்கு சீன அரசு 11 வருட சிறைத் தண்டனை விதித்தது.

கடந்த 2010-ம் ஆண்டு அவருக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசை அளித்து கவுரவிக்கப்பட்டது. இதனால் சீனாவுக்கும் நோபல் பரிசை அளித்துவரும் நார்வே நாட்டுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு சமீபத்தில்தான் சீரடைந்தது.

இதற்கிடையில், ஈரல் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற வேண்டிய அவசியம் ஏற்பட்டதால் லியு சியாபோ பரோலில் விடுவிக்கப்பட்டார். வெளிநாட்டில் இருந்து சிறப்பு நிபுணர்களை வரவழைத்து அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற சமூக ஆர்வலர்களின் கோரிக்கையை சீன அரசு நிராகரித்து விட்டது.

ஷென்யாங் நகரிலுள்ள சீன மருத்துவப் பல்கலைக்கழக மருத்துவமனையில் ஈரல் புற்றுநோய் முற்றிய கட்டத்தில் கடந்த மே மாதம் அனுமதிக்கப்பட்டிருந்த லியு சியாபோவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், அவரது ஈரலில் இருந்த புற்றுக்கட்டி உடைந்து இரத்தக்கசிவு ஏற்பட்டதால் லியு சியாபோ(61) கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனை இன்று தெரிவித்துள்ளது.

செய்திகள்