மன்னார்- மடு தேவாலய நுழைவாயில் அருகாமையில் புத்தர் சிலை

Saturday January 06, 2018

மன்னார்- மடு தேவாலய நுழைவாயில் அருகாமையில் படையினரால் புத்தர் சிலை ஒன்றை வைத்து பௌத்த தேவாலயம் ஒன்றை அமைப்பதற்கும் எடுக்கும் முயற்சியை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு மன்னார் பிரஜைகள் சங்கங்கள் இரண்டு வட மாகாண கல்வி மற்றும் கலாச்சார அமைச்சருக்கு கடிதம் மூலம் கோரிக்கை முன்வைத்துள்ளன.

இந்த இடத்தில் சிற்றுண்டிச்சாலை ஒன்றை நடத்தி வரும் படையினர் குறித்த இடத்தில் உள்ள மரத்திற்கு கீழ் புத்தர் சிலை ஒன்றை வைத்து பௌத்த தேவாலயம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறும் மன்னார் பிரஜைகள் சங்கம், இந்த இடத்தில் இவ்வாறான செயலை செய்ய ஒருபோதும் அனுமதிக்க முடியாது, அது மடு தேவாலயத்திற்கு செய்யும் மிகப் பெரிய அவமரியாதை என குறிப்பிட்டுள்ளது.

இப்போதைக்கும் இவ்விடத்தை வணக்க வழிபாடுகள் நடத்தும் இடமாக படையினர் மாற்றியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள பிரஜைகள் சங்கம், பிரபல கிறிஸ்தவ தேவாலயம் உள்ள இடத்தில் இவ்வாறான செயலை அனுமதிக்க முடியாது என குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

வடக்கில் பல இடங்களில் புத்தர் சிலைகளை வைத்து வணக்க வழிபாடுகள் ஈடுபடுகின்ற படையினர், அவ்விடத்தை விட்டு செல்லும் போது, சிலைகளை அகற்றாமல் செல்வதன் மூலம் ஏற்படுகின்ற பிரச்சினை, தேசிய ரீதியான பிரச்சினையாக உருவெடுப்பதால் இந்த இடத்தில் புத்தர் சிலையை வைப்பதற்கு முன்னரே இச்செயற்பாட்டை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு மன்னார் பிரஜைகள் சங்கங்கள் இரண்டும் வட மாகாண சபையிடம் வேண்டியுள்ளது.