மயிலிட்டி பகுதியில் அகற்றப்படும் இராணுவத்தினரின் பாரிய ஆயுத கிடங்கு!

Tuesday April 17, 2018

வலிகாமம் வடக்கு மயிலிட்டி பகுதியில் அமைந்திருந்த இராணுவத்தினரின் பாரிய ஆயுத கிடங்கு அங்கிருந்து அகற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

 வலிகாமம் வடக்கில் கடந்த 13ம் திகதி 683 ஏக்கர் காணி மீள்குடியேற்றத்திற்காக வழங்கப்பட்டது.   இந்நிலையில், மயிலிட்டி வடக்கில் அமைத்திருந்த இராணுவ ஆயுத கிடங்கு மற்றும் அதனுடன் இணைந்த கட்டடங்கள் இராணுவத்தினரால் இடித்து அழிக்கப்பட்டு வருகிறது.  அங்கு பொருத்தப்பட்ட கூரையின் இரும்புக் கேடர்களை இராணுவத்தினர் வாகனங்களில் எடுத்துச் செல்கின்றனர். அத்துடன் ஆயுதக் கிடங்கினை சுற்றிவர உயரமாக அமைக்கப்பட்டிருந்த மண் அணைகளும் அகற்றப்படுகிறது.

 மேலும் சிறு வெடிபொருட்களின் வெற்றுப் போத்தல்கள் பெருமளவில் உறைப்பையினுள் வைத்திருந்தனர் இவைகளும் அங்கிருந்து அகற்றப்பட்டு வருகிறது. 

 மயிலிட்டி மக்களின் காணிகள் விடுவிக்கக்கூடாது அங்கு இராணுவத்தினரின் ஆயுதக் களஞ்சியம் அங்கு உள்ளது என தேசிய போர் வீரர்கள் முன்னணி அமைப்பு 2016 இல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரியிருந்தது.

 எனினும் இதனை ஜனாதிபதி மறுத்ததுடன் மக்களின் காணிகள் விடுவிக்கப்படவேண்டும் என தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.