மரணத்தின் பின் பேசும் வரிகள் - கலாநிதி சேரமான்

திங்கள் டிசம்பர் 14, 2015

உலகத் தமிழர்களின் இதயங்களிலும், தமிழீழ தேசத்தின் வரலாற்றிலும் தனக்கேயுரித்தான தனித்துவமான இடத்தைப் பிடித்திருக்கும் தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் எம்மையயல்லாம் விட்டுப் பிரிந்து சென்று வரும் 14ஆம் நாளுடன் ஒன்பது ஆண்டுகள் கடக்கின்றன.

காலச்சக்கரத்தின் நீட்சியில் கடந்த ஒன்பது ஆண்டுகளில் தமிழினம் எதிர்பாராத எத்தனையோ தலைகீழான நிகழ்வுகளைச் சந்தித்திருக்கின்றது. இந்த ஒன்பது ஆண்டுகளில் பாலா அண்ணையைப் புகழ்ந்து எத்தனையோ பேர் எழுதியிருக்கின்றார்கள். எத்தனையோ பேர் மேடைகளில் ஏறியும், இணையக் காணொளிகள் வாயிலாகவும் புகழுரை நிகழ்த்தியிருக்கிறார்கள்.

இவ்வாறு பாலா அண்ணை பற்றி அடிக்கடி மேடைகளில் ஏறி புகழ்பாடுபவர்களில் ஒருவர் எரிக் சோல்கைம். ஒரு காலத்தில் உலகத் தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கியவர்: சிங்களத் தலைமைகளின் ஏமாற்று வித்தைகளுக்குக் கிறங்கிப் போகாத ஒருவர் என்று கருதப்பட்டவர். பாலா அண்ணையை புற்றுநோய் காவு கொள்ளும் வரை அப்படித்தான் அவரை உலகத் தமிழர்கள் பார்த்தார்கள். எமக்காகக் குரல்கொடுப்பதற்கு மேற்குலகின் அதிகாரபீடங்களில் அமர்ந்திருந்த ஒருவராகவே எரிக் சோல்கைமை அன்று உலகத் தமிழர்கள் பார்த்தார்கள்.

ஆனால் 2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மன்னார் மடுப் பகுதியை சிங்களப் படைகள் ஆக்கிரமித்து, வன்னி முழுவதையும் கடுகதியில் விழுங்கத் தொடங்கிய பொழுதுதான் அவரது சுயரூபம் வெளிப்பட்டது. ஈழப்பிரச்சினைக்கு இராணுவ வழியில் தீர்வு காண முடியாது என்று அதுகாறும் பல்லவி பாடி வந்த எரிக் சோல்கைம் சிறிது காலத்திற்கு மெளனமானார். உடனடியாகப் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அன்றைய காலப் பகுதியில் அவருக்குத் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையால் விடுக்கப்பட்ட வேண்டுகைகள் அனைத்தும் செவிடன் காதில் சங்கை ஊதிய கதையாகவே முடிந்தது.

குறைந்த பட்சம் வன்னிக்கு வருகை தந்து மக்களின் அவலத்தையாவது நேரில் கண்டறியுமாறு 2008 ஆம் ஆண்டின் இறுதியில் அவரைத் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்கள் கோரிய பொழுது, ஆயுதக் களைவுக்கான இணக்கத்தை தமிழீழ தேசியத் தலைவர் வழங்கினால் மட்டுமே தான் வன்னிக்கு வருவேன் என்று பதிலளித்தார். அது வரை நடுநிலையாளராகக் கருதப்பட்ட எரிக் சோல்கைம், நீதித் தராசின் எந்தப் பக்கத்தில் உண்மையில் அமர்ந்திருந்தார் என்பது அப்பொழுதுதான் பட்டவர்த்தனமாகியது. தமிழீழ விடுதலைப் புலிகளின் படைவலுச் சமநிலையே எரிக் சோல்கைமை நீதித் தராசின் நடுப்பக்கத்தில் அமர வைத்தது என்பது அப்பொழுது வெள்ளிடை மலையாக வெளிப்பட்டது.

சரியோ, தவறோ, எரிக் சோல்கைம் ஒரு அரசியல்வாதி. தனது கட்சியையும், தான் அரசியல் செய்யும் நோர்வீஜிய தேசத்தின் வெளியுறவுக் கொள்கைகளையும் பிரதிபலிக்க வேண்டியது அவரது கடமை. எனவே தமிழ் மக்களின் நியாயங்களை அவர் புரிந்து கொள்ளத் தவறியதையிட்டோ, இறுதிப் போரில் தமிழினம் பெரும் அழிவைச் சந்திக்கப் போகின்றது என்பதை அறிந்திருந்தும் அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு அவர் எதனையும் செய்யவில்லை என்பதையிட்டோ நாம் அவரைக் குறைகூறுவதில் எந்தப் பயனும் இல்லை. ஏனென்றால் ஒரு கடைந்தெடுத்த அரசியல்வாதியாகவே அவர் நடந்து கொண்டிருக்கின்றார்.

ஆனால் அத்தோடு அவர் நிறுத்திக் கொண்டால் பரவாயில்லை. தான் ஏறும் ஒவ்வொரு மேடைகளிலும் நூதனமான நாடகம் ஒன்றை அவர் நிகழ்த்துவதுதான் பலரது கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது. ஒவ்வொரு மேடைகளிலும் பாலா அண்ணையைப் போற்றிப் புகழும் எரிக் சோல்கைம், அதே மேடைகளில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களைத் திட்டித் தீர்ப்பதற்குத் தவறுவதில்லை. இவ்வாறுதான் கடந்த 28.10.2015 அன்று இலண்டனில் நடைபெற்ற நிகழ்வொன்றிலும் அவர் நடந்து கொண்டார்.

அது ஒரு நூல் வெளியீட்டு விழா. மார்க் சோல்ரர் எனப்படும் ஆங்கில எழுத்தாளர் ஈழப்பிரச்சினையில் நோர்வேயின் ‘சமாதான’ முயற்சி பற்றி எழுதிய நூல் அன்று வெளியிட்டு வைக்கப்பட்டது. அவ்விடத்தில் சிறப்புப் பேச்சாளர்களாக இரண்டு பேர் கலந்து கொண்டார்கள். ஒருவர் எரிக் சோல்கைம். மற்றையவர் 2005ஆம் ஆண்டு வரை நோர்வேயின் பிரதி வெளியுறவுத்துறை அமைச்சராக விளங்கிய விதார் கெல்கிசன். இதில் வேடிக்கை என்னவென்றால் நோர்வே மேற்கொண்ட ‘சமாதான’ அனுசரணை முயற்சியில் எந்த விதத்திலும் மார்க் சோல்ரர் அவர்கள் தொடர்புபடவில்லை. மாறாக எரிக் சோல்கைமும், விதார் கெல்கிசனும் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, அவர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே தனது நூலை மார்க் சோல்ரர் எழுதியிருந்தார்.

அவ்விடத்தில் விதார் கெல்கிசன் அவர்கள் உரையாற்றும் பொழுது தனது வார்த்தைகளை அளந்தே பேசினார். ‘சமாதான’ அனுசரணைப் பணிகளை முன்னெடுப்பதில் நோர்வே எதிர்நோக்கிய சவால்கள் பற்றியயல்லாம் பேசினார். ‘ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரால் பரிந்துரைக்கப்பட்ட கலப்பு நீதிமன்றத்தைத் திட்டத்தைப் புறந்தள்ளிவிட்டு, சிறீலங்கா அரசாங்கம் முன்மொழிந்திருக்கும் உள்ளகப் பொறிமுறையை நோர்வே ஆதரிப்பது சரியா?’ என்று கேள்வியயழுப்பப்பட்ட பொழுது, நோர்வே அரசாங்கத்தில் தான் இப்பொழுதும் அமைச்சராக விளங்கினாலும், வெளியுறவுத்துறை அமைச்சில் அங்கம் வகிக்காததால் அதுபற்றி எதனையும் கூற முடியாது என்று பதிலளித்து நழுவிக் கொண்டார்.

ஆனால் எரிக் சோல்கைமோ அவ்வாறு நடந்து கொள்ளவில்லை. நோர்வேயின் பன்னாட்டு அபிவிருத்தித்துறை அமைச்சர் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டு ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் கடந்திருப்பதாலும், நோர்வே அரசாங்கத்தின் தீர்மானங்களில் பங்களிப்பதற்கு இப்போதைக்குத் தனக்கு சந்தர்ப்பம் வழங்கப்படப் போவதில்லை என்பதாலும் தான் எதையும் பேசலாம், எவரையும் திட்டித் தீர்க்கலாம் என்று எரிக் சோல்கைம் எண்ணினாரோ தெரியவில்லை. மடையுடைத்து வெளியேறும் வெள்ளம் போன்று அவரது வாயிலிருந்து வார்த்தைகள் பொழிந்த வண்ணமிருந்தன:

“பிரபாகரனுக்கு உலக நடப்புத் தெரியாது. அவர் ஒரு போர்ப் பிரபு போன்று நடந்து கொண்டார். சமஷ்டியை ஏற்பதற்குப் பிரபாகரனுக்கு விருப்பம் இருந்தது. ஆனால் அதனை அவர் பிற்போட்டு வந்தார். சமஷ்டியை ஏற்பதற்குப் பிரபாகரன் தயாராகிய பொழுது காலம் கடந்திருந்தது. இறுதிப் போரில் தமிழ் மக்கள் சந்தித்த அழிவிற்குப் பிரபாகரனே காரணம். ஆயுதங்களைக் கீழே போட்டுச் சரணடைவதற்கு பிரபாகரன் இணங்கியிருந்தால் மக்களைக் காப்பாற்றியிருக்கலாம்.

இதேநேரத்தில் பாலசிங்கத்தை சமாதானத்தின் நாயகன் என்றே நான் கூறுவேன். பாலசிங்கம் உலக நடப்புகளை நன்கு புரிந்து கொண்டிருந்தார். சமாதானத்தின் நாயகர்களாக அழைக்கப்படும் தகுதி இரண்டு பேருக்கு உண்டு: ஒருவர் பாலசிங்கம், மற்றையவர் ரணில் விக்கிரமசிங்க. தமிழர்கள் இனியாவது அமைதி வழியில் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். தமது உரிமைகளை சிங்களவர்கள் அன்பளிப்பாக வழங்குவார்கள் என்று தமிழர்கள் எண்ணக் கூடாது. அமைதி வழியில் தொடர்ந்து போராடி அவற்றைப் பெறுவதற்கு அவர்கள் முற்பட வேண்டும்.”இதில் எரிக் சோல்கைம் கூறிய மூன்றாவது கருத்துத்தான் பெரும்பாலான தமிழ் ஊடகங்களில் இடம்பிடித்திருந்தது. அவ்விடத்தில் பார்வையாளராக வருகை தந்திருந்த தமிழ் ஒலிபரப்பாளர் ஒருவர் கருத்துக்கூறும் பொழுது: ‘பரவாயில்லையே, தமிழ் மக்களுக்கு நல்ல அறிவுரையைத் தானே எரிக் சோல்கைம் கூறியிருக்கின்றார்’ என்று பெருமைப்பட்டுக் கொண்டார்.

அவ்விடத்தில் கேள்வி கேட்பதற்கு பலர் முற்பட்ட பொழுதும் ஒரு சிலருக்கு மட்டுமே சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. ஆனாலும் அவ்வாறு சந்தர்ப்பம் அளிக்கப்பட்ட தமிழர்களில் எவரும் தலைவர் அவர்களை எரிக் சோல்கைம் நிந்தித்தது தவறு என்பதைச் சுட்டிக் காட்ட முற்படவில்லை என்பதுதான் துர்ப்பாக்கியவசமானது. ஒரேயயாருவர் மட்டும் ‘இறுதிப் போரில் ஒன்றரை இலட்சம் தமிழர்களின் உயிர்கள் பலிகொள்ளப்பட்டதற்கு எரிக் சோல்கைம் பொறுப்பேற்று மன்னிப்புக் கோருவரா?’ என்று வினவினார்.

அன்றைய நிகழ்வில் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு விரோதமான கருத்துக்களைக் கொண்டவர்களும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அரசியல் தெரியாது என்றும், ‘தமிழ் மக்களை அழிவுப் பாதையில் இட்டுச் சென்றவர்கள் பிரபாகரனும், பாலசிங்கமும் தான்’ என்றும் திட்டித் தீர்க்கும் ‘மிதவாதிகள்’ என்று கூறிக்கொள்வோரும் கலந்து கொண்டார்கள். தலைவர் அவர்களை எரிக் சோல்கைம் திட்டித் தீர்த்த பொழுது பெரும் பூரிப்போடு தமது இருக்கைகளில் அமர்ந்திருந்த அவர்கள் எவரது முகத்திலும் பாலா அண்ணையை எரிக் சோல்கைம் புகழ்ந்துரைத்த பொழுது ஈயாடவில்லை. ‘பாலசிங்கத்திற்கும், பிரபாகரனுக்கு என்னதான் வேறுபாடு உண்டு?’ என்பது போன்று அவர்களின் தோரணை இருந்தது.  இதனை எரிக் சோல்கைம் அவர்கள் கவனித்ததாகத் தெரியவில்லை. ஏனென்றால் தலைவர் அவர்களின் குரலாகவும், அரசியல் களத்தில் அவரது அரணாகவுமே பாலா அண்ணை விளங்கினார். இது தலைவர் அவர்கள் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட பலருக்கு நன்கு தெரியும்.

பேச்சுவார்த்தைகளில் பாலா அண்ணைக்கு பிடிக்காத ஒரு விடயம் என்றால் அது தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் களைவு பற்றிய பேச்சுத்தான். எதைப் பற்றியும் பாலா அண்ணையுடன் பேசலாம். ஆனால் ஆயுதக் களைவு பற்றி பாலா அண்ணையுடன் பேசினால் அவ்வளவுதான். பாலா அண்ணை உயிருடன் வாழ்ந்த காலத்தில் அவரிடம் ஆயுதக் களைவு பற்றி பேசி வாங்கிக் கட்டியவர்களுக்கு இது தெரியும். எனவே போர் நிறுத்தம் பற்றியும், சமஷ்டி பற்றியும், இடைக்கால நிர்வாகம் பற்றியும், தமிழ் மக்களுக்கான புனர்வாழ்வு பற்றியும் மட்டும் பாலா அண்ணையுடன் உரையாடிய எரிக் சோல்கைமிற்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான்.

இதற்கான அனுபவம் எரிக் சோல்கைமிற்கு இருந்திருந்தால், இறுதிப் போரில் பாலா அண்ணை உயிரோடு இருந்து அவருடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் களைவு பற்றியும், சரணடைவு குறித்தும் எரிக் சோல்கைம் உரையாடியிருந்தால், இன்று பாலா அண்ணையை அவர் புகழ்ந்திருக்க மாட்டார். தமிழீழ தேசியத் தலைவரைத் திட்டித் தீர்ப்பது போன்று, பாலா அண்ணையையும் எரிக் சோல்கைம் திட்டித் தீர்த்திருப்பார்.

இதுதான் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களை எரிக் சோல்கைம் நிந்தித்த பொழுது பூரிப்படைந்தவர்களின் முகத்தில் பாலா அண்ணையை அவர் புகழ்ந்துரைத்த பொழுது ஈயாடாது போனதற்கான சூட்சுமமாகும். இன்று துர்ப்பாக்கியவசமாக பாலா அண்ணை எம்மோடு இல்லை. உயிரோடு இருந்திருந்தால், தமிழீழ தேசியத் தலைவர் தொடர்பாகவும், தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாகவும் எரிக் சோல்கைம் போன்றவர்கள் முன்வைக்கும் விமர்சனங்களுக்குக் காத்திரமான பதில் அளித்திருப்பார்.

ஆனாலும் தனது ஆயுட் காலத்தின் இறுதி ஆண்டுகளில் அவரால் வெளியிடப்பட்ட ‘போரும், சமாதானமும்’ என்ற நூலின் இறுதி அத்தியாயத்தில் நோர்வேயின் ‘சமாதான’ முயற்சி தொடர்பாக அவர் எழுதிய குறிப்புகள் சிலவற்றை அவரது ஒன்பதாவது ஆண்டு நினைவு நாள் கட்டவிழும் இத்தருணத்தில் மீள்பதிவு செய்வது பொருத்தமானது: ‘...மிகவும் நுட்பமாகப் பேச்சுக்களை வழிநடத்திச் சென்ற நோர்வே ராஜதந்திரம் படிப்படியாக சர்வதேச நாடுகளின் மேலதிக தலையீட்டுக்கு இடைவெளியை அனுமதித்துத் தவறிழைத்தது. பலம் பொருந்திய நாடுகளின் தனிப்பட்ட புவியியல்‡கேந்திர அபிலாசைகளும் அதிகார வீச்சுக்களும், பேச்சில் பங்கு கொண்ட இரு தரப்பினரது அதிகார சம வலு உறவில் பாதிப்பை ஏற்படுத்தியது. உலக அரசுகளின் கூட்டணியான சர்வதேச சமூகம், சிறீலங்கா அரசின் நலன்களுக்கு சார்பாக நின்றது.

இதனால் சம உறவு நிலை எமக்குப் பாதகமாக அமைந்தது. உதவி வழங்கும் சர்வதேச நாடுகள், சிறீலங்கா அரசின் தூண்டுதல் காரணமாக அரசியல் தீர்வுக்கு வரம்புகளைத் திணிக்கத் துணிந்தன. இத் தலையீடானது, எமது அரசியல் தகைமையையும் தலைவிதியையும் நாமே நிர்ணயித்துக் கொள்ளும் எமது சுயாதீன உரிமையைப் பாதித்தது. ...எமது மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைக்கோ இனப் பிரச்சினைக்கோ தீர்வு காணும் முயற்சியில் நோர்வேயின் சமாதான முயற்சி எந்தவொரு சாதனையையும் நிலைநாட்டவில்லை என்பது உண்மைதான்.’

‘போரும், சமாதானமும்’ நூலை எழுதும் பொழுது அடிக்கடி ஒரு விடயத்தை பாலா அண்ணை குறிப்பிடுவார். ‘நான் உயிரோடு இல்லாது போனாலும் எனது நூல் நிலைத்து நிற்கும்’ என்பதுதான் அது. அதற்கான சான்றாகவே பாலா அண்ணையின் மேற்கண்ட வரிகள் திகழ்கின்றன.

நன்றி: ஈழமுரசு