மரண தண்டனைத் தீர்மானத்துக்கு மங்கள எதிர்ப்பு!

புதன் ஜூலை 11, 2018

போதைப்பொருள் விற்பனை செய்வோருக்கு எதிராக மரண தண்டனையை அமுல்படுத்துவது தொடர்பிலான அமைச்சரவையின் தீர்மானத்துக்கு நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிப்பதற்கு பதிலாக ஆயுள் தண்டனை விதிக்கமுடியும் எனவும், மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு, கொள்கை அளவில் தன்னால் உடன்பட முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறெனினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், நேற்று முன்தினம் (10) கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் போதைப்பொருள் விற்பனை செய்வோருக்கு எதிராக மரண தண்டனையை அமுல்படுத்துவது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

நீதியமைச்சர் தலதா அத்துகோரல சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கிகாரமளித்திருந்தது.

அமைச்சரவைக்  கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா, இந்தத் தீர்மானத்துக்கு அமைச்சரவை ஏகமனதாக அங்கிகாரமளித்ததாகத் தெரிவித்திருந்தார்.

மேலும் அமைச்சரவையில் கொண்டுவரப்பட்ட ஒரு தீர்மானத்துக்கு அனைத்து அமைச்சர்களும் அங்கிகாரமளித்த முதலாவது சந்தர்ப்பம் இதுவெனவும் அவர் குறிபிட்டார்.

அண்மைக்காலமாக நாட்டில் போதைப்பொருள் வர்த்தக குற்றச்சாட்டுகள் அதிகரித்துக் காணப்படுவதாக குறிப்பிட்ட அமைச்சர், நாட்டில்  சட்டமும் ஒழுங்கும் முறையாக அமுல்படுத்தப்படும் போது, சட்டத்துக்கு பயந்து குற்றச்செயல்களில் ஈடுபடமாட்டார்கள் என நீதியமைச்சர் தலதா அத்துகோரல குறிப்பிட்டார்.

இன்று போதைப்பொருள் வர்த்த குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக மரண தண்டனை அமுல்படுத்தப்படுவது போல எதிர்வரும் காலங்களில், சிறுவர் துஷ்பிரயோகம், பெண்கள் துஷ்பிரயோகம் என்பவற்றுக்கு எதிராகவும் மரண தண்டனையை நடைமுறைப்படுத்தும் வகையில் நாட்டில் சட்டம் கொண்டுவரப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.