மலேசியாவில் சட்டவிரோதமாக நுழைந்த 40 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது!

Saturday July 21, 2018

இந்தோனேசியாவிலிருந்து படகு வழியாக மலேசியாவில் சட்டவிரோதமாக நுழைந்த 40 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் எஸ்காம் என்ற மலேசியா பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சில தினங்களுக்கு முன் நடந்த இக்கைது மலேசிய மாநிலமான சபாவில் உள்ள கலாபகன் என்ற பகுதியில் நடந்துள்ளது. கைது செய்யப்பட்ட 40 பேரில் 20 ஆண்கள், 18 பெண்கள், 2 குழந்தைகள் உள்ளதாக எஸ்காம் தளபதி  தடுக் ஹசானி கசாலி தெரிவித்திருக்கிறார். 

அவர்களிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில், அவர்கள் இந்தோனேசியாவின் நுனுகன் பகுதியிலிருந்து படகு வழியாக மலேசியாவின் கலாபகன் ஆற்றுப்பகுதியை அடைந்துள்ளனர். 

“இந்தோனேசியாவில் உள்ள ஏஜெண்டுகள் மலேசியாவில் வேலை வாங்கி தருவதாக இங்கு அழைத்து வந்துள்ளனர். படகு வழியாக வருவதற்கு ஒவ்வொரு நபரும் ஏஜெண்டுக்கு 600 மலேசிய ரிங்கட் (இந்திய மதிப்பில் 10 ஆயிரம் ரூபாய்) கொடுத்துள்ளனர்” எனக் குறிப்பிட்டுள்ள எஸ்காம் தளபதி கசாலி, இதில் தொடர்புடைய 2 உள்ளூர் நபரும் ஒரு இந்தோனேசியரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார். 

இதில் கைது செய்யப்பட்ட அனைவரும் கலாபகன் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கு ஆட்கடத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படும் எனத் தெரிய வந்துள்ளது. 

பொருளாதார ரீதியாகப் பின் தங்கியுள்ள அருகாமை நாடுகளைக் குறிவைக்கும் மலேசிய நிறுவனங்கள், ஆட்கடத்தல்காரர்கள் வழியாக அப்பகுதிகளிலிருந்து ஆட்களை அழைத்து வருகின்றனர். இவர்கள் கட்டுமானத்துறை, தேயிலைத் தோட்டங்கள், தொழிற்சாலைகளில் குறைந்த ஊதியத்திற்கு ஆபத்தான-கடுமையான வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். லாபத்தை மட்டுமே மையமாகக் கொண்ட நிறுவனங்கள்/வேலைக்கு அமர்த்துபவர்கள் இவர்களை எந்தவித ஆவணங்களுமின்றிப் பணியில் வைத்துள்ளனர். அந்தக் குறைந்த ஊதியத்தைக் கூட அளிக்காமல் பெரும்பாலான தொழிலாளர்கள் துரத்தப்படும் அவலங்களும் நிகழ்கின்றன. 

கடந்த ஆண்டு முதல் வெளிநாட்டுத் தொழிலாளர்களை முறைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மலேசிய அரசு, பதிவுச்செய்யப்படாத தொழிலாளர்கள் மீது  பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அதன் அங்கமாக இவ்வாறான நாடுகடத்தல் நடவடிக்கைகளை மலேசிய குடிவரவுத்துறை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது.