மலேசியாவில் 28 சீன சுற்றுலா பயணிகளுடன் படகு மாயம்!

ஞாயிறு சனவரி 29, 2017

மலேசியாவில் 28 சீன சுற்றுலா பயணிகளுடன் பயணம் செய்த படகு திடீரென மாயமானது. மலேசியாவுக்கு சீனாவில் இருந்து சிலர் சுற்றுலா வந்தனர். அவர்கள் கிழக்கு சபா மாகாணத்தில் உள்ள போர்னியோ தீவுக்கு படகில் புறப்பட்டு சென்றனர். மொத்தம் 28 சுற்றுலா பயணிகள் அதில் இருந்தனர். அந்த படகு திடீரென மாயமானது. கோட்டா கினாபாலு என்ற இடத்தின் அருகே சென்ற போது மேலும் 3 பேர் அந்த படகில் ஏறியதாக தகவல் கிடைத்துள்ளது.

படகு திரும்ப வராததால் அதை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். நேற்று தட்பவெப்ப நிலை மோசமாக இருந்தது. எனவே படகு விபத்தில் சிக்கி கடலில் மூழ்கியிருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. எனவே அந்த படகை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இத்தகவலை மலேசிய கடல் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.